Published:Updated:

6 ஆண்டுகள்... 561 யானைகள் மரணம்... நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?

யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
யானைகள்

தமிழ்நாட்டில் யானைகள் இயற்கையாக உயிரிழப்பதைத் தாண்டி விபத்துகளாலும், வேட்டைகளாலும் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது

6 ஆண்டுகள்... 561 யானைகள் மரணம்... நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?

தமிழ்நாட்டில் யானைகள் இயற்கையாக உயிரிழப்பதைத் தாண்டி விபத்துகளாலும், வேட்டைகளாலும் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது

Published:Updated:
யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
யானைகள்

யூடியூபில் மூன்று நிமிடங்கள் நீளும் மனதைக் கலங்கச் செய்யும் காட்சி அது. இறந்து கிடக்கும் ஒரு யானையை, நான்கு யானைகள் சுற்றிச் சுற்றி வந்து, அதன் உடலைத் தும்பிக்கையால் வருடுகின்றன... கால்களால் மெதுவாகத் தொட்டுப் பார்க்கின்றன. `மனிதர் அல்லாத உயிரினங்களில், இறப்புக்குச் சடங்கு அனுசரிக்கும் ஒரே உயிரினம் யானை’ என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். மனிதர்கள் தமது உறவுகளுக்குத்தான் சடங்குகளை அனுசரிப்பார்கள். ஆனால், இந்த யூடியூப் காட்சியில் தமது பாதையில் கண்ட ஒரு சடலத்துக்காக இறுதி மரியாதையைச் செலுத்துகின்றன யானைகள். யானைகளின் பாதைகளை மனிதர்கள் ஆக்கிரமித்ததால், உருவாகியிருக்கும் மனிதன் - யானை எதிர்கொள்ளலின் விளைவு இது!

கோ.சுந்தர்ராஜன் 
பூவுலகின்   நண்பர்கள்
கோ.சுந்தர்ராஜன் பூவுலகின் நண்பர்கள்

எத்தனை யானைகள் இறந்திருக்கின்றன?

தமிழ்நாட்டின் வனங்களில் பெருகிவரும் வளர்ச்சித் திட்டங்கள், காடழிப்பு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் யானைகளின் இறப்பு குறித்து ஆராய, குழு ஒன்றை அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தியாவில் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அந்தக் கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 29,964 யானைகளும், தமிழ்நாட்டில் 2,761 யானைகளும் இருப்பதாகத் தெரியவந்தது. இப்படியான சூழலில்தான், சமீபத்தில் ஆண்டனி ரூபின் எனும் விலங்குகள் நல ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தரவுகள் அதிர்ச்சியைத் தருகின்றன. அதாவது, தமிழ்நாட்டில் 2015 முதல் 2020 வரை மட்டும் 561 காட்டு யானைகள் உயிரிழந்திருக்கின்றன. (2015: 61; 2016: 98; 2017: 125; 2018: 84; 2019: 108; 2020 செப்டம்பர் வரை: 85).

6 ஆண்டுகள்... 561 யானைகள் மரணம்... நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?

தமிழ்நாட்டில் யானைகள் இயற்கையாக உயிரிழப்பதைத் தாண்டி விபத்துகளாலும், வேட்டைகளாலும் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பாண்டியராஜா எனும் சமூகநல ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு எட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 1978 – 2021 காலகட்டத்தில் மட்டும் கோயம்புத்தூர் – பாலக்காடு ரயில் வழித்தடத்தில் நடைபெற்ற 19 விபத்துகளில் 24 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. இதில் கேரள மாநில எல்லையில் 12 யானைகளும், தமிழ்நாடு மாநில எல்லையில் 12 யானைகளும் அடக்கம். இந்த 19 விபத்துகளிலும், 15 விபத்துகள் கோயம்புத்தூர் - கேரளா இடையிலான ‘பி’ வழித்தடத்தில் நடைபெற்றிருப்பதாகவும், அனைத்து விபத்துகளுமே இரவு நேரங்களில் மட்டுமே நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது. 2010 முதல் 2020 வரை 93 யானைகள் மின்சாரம் தாக்கியும், 9 யானைகள் வேட்டையாடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 10 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன.

நீதித்துறை காட்டிய அக்கறை!

2021, பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வேட்டை உள்ளிட்ட காரணங்களால் யானைகள் மர்ம மரணம் அடையும் வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. அதன் பிறகும் விசாரணையில் பெரிதாக முன்னேற்றம் ஏற்படாததால், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் காவல் மற்றும் வனத்துறை, சி.பி.ஐ அமைப்பினர் அடங்கிய ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ‘யானைகள் பத்திரமாகப் பயணம் செய்வதற்காக இரண்டு பாதைகளை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டின் எட்டிமடை ரயில் நிலையம் மற்றும் கேரளாவின் வாளையார் ரயில் நிலையத்தின் மத்தியில் இந்தப் பாதைகள் அமைய வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்’ என்று ரயில்வே வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று ரயில்வே வாரியம் 7 கோடியே 40 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தது. அதேபோல மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் பாதையில் யானைகளின் பாதையில் குறுக்கிடும் ஒரு சுவரை தென்னக ரயில்வே கட்டியிருந்தது. அந்தச் சுவரை இடித்து யானைகள் தடையின்றி நடமாட வழிவகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக வழக்கை சி.பி.ஐ-க்கும் மாற்றியிருந்தது. தவிர, யானைகளின் இறப்பின்போது டி.என்.ஏ விவரங்களைச் சேகரிக்காததால், அது யானை மரணங்கள் குறித்த வழக்குகளில் தாமதங்களை ஏற்படுத்துகின்றன என்று தெரியவந்தபோது, ஒவ்வொரு மரணத்துக்குப் பிறகும் கட்டாயமாக வனத்துறை டி.என்.ஏ விவரக் குறிப்பைச் சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

6 ஆண்டுகள்... 561 யானைகள் மரணம்... நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?

யானைகள் ஏன் முக்கியம்?

நீதித்துறையும் மக்கள் மன்றமும் கவலைகொள்ளும் அளவுக்கு யானைகளின் வாழ்வும் இருப்பும் அவ்வளவு முக்கியமான பிரச்னையா? மக்கள் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும்போது, யானைகளைப் பற்றிக் கவலைப்பட முடியுமா என்கிற கேள்விகள் எழலாம். முக்கியம்தான் என்பதைத் தவிர வேறு பதில் இல்லை. காரணம், சூழலுக்கும் வாழ்தலுக்கும் யானைகளின் இருப்பு மிக முக்கியம் என்பதை அறிவியலாளர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துவிட்டார்கள். சூழல் அமைப்பு ஒரே சீராகச் செயல்படுவதில் யானைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அப்படிப் பங்காற்றும் உயிரினங்களை `ஆதார உயிரினங்கள்’ (Keystone Species) என்கிறார்கள் வல்லுநர்கள். யானைகளின் பங்களிப்பு இல்லாமல் சூழல் அமைப்பு சரியான முறையில் செயல்படாது. யானைகள் இல்லாமல் போனால் இந்த அமைப்பு செயலற்று நின்றுவிடும். தவிர, விதைப்பரவலில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன யானைகள். அவை பல மைல்கள் நடந்து, தமது கழிவுகளின் வாயிலாக விதைகளைப் பரவச் செய்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 60 கி.மீ தூரம் வரை யானைகளால் விதைப்பரவல் செய்ய முடியும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

யானைச் சாணம் வனத்துக்கு முக்கியமான உரமாகிறது. இப்படி விதைப்பரவல், உரமூட்டிகளாகச் செயல்படுவதன் மூலம் பிற விலங்குகளின் உணவுத் தேவைகளுக்கும் யானைகள் பெரும் பங்காற்றுகின்றன. யானையின் சாணம் சில வகைப் பூச்சிகளுக்கு உணவு ஆதாரமாக இருக்கிறது. காடுகளில் தமது நடவடிக் கைகள் மூலம் யானைகள் புதிய வழித்தடங்களை உருவாக்குகின்றன. இந்த வழித்தடங்கள் காட்டிலுள்ள பிற விலங்குகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. இந்த வழித்தடங்களை யானைகள் உருவாக்காவிட்டால் பிற விலங்குகள் இடம்பெயர முடியாமல் காலப்போக்கில் அழிந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது.

6 ஆண்டுகள்... 561 யானைகள் மரணம்... நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?

காட்டின் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்வதிலும் யானைகளின் பங்கு முக்கியமானது. கோடைக்காலங்களில் யானைகள்தான் தமது கால்களின் மூலமாக பூமியைத் தோண்டி நீர் ஆதாரங்களைக் கண்டெடுக்கின்றன. இந்தத் தண்ணீர்தான் பிற உயிரினங்களின் நீர்த்தேவையையும் பூர்த்திசெய்கிறது. யானைகள் மட்டும் இல்லையென்றால் கோடையில் காடுகளில் நீர் கிடைப்பது அரிதாகிவிடும். அதன் தாக்கம் நிச்சயம் மக்கள் வாழும் பகுதிகளிலும் படரும்.

ஆக, இயற்கையின் உயிர்ச் சங்கிலியில் யானைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. யானைகளின் இருப்பும் வாழ்வும் மனிதனின் நீண்ட நல்வாழ்வுக்கும் முக்கியமானது. காரணம், மனித இனமும் இயற்கையின் உயிர்ச் சங்கிலியில் ஒரு பகுதிதான். இதன் பொருட்டே யானைகளின் இறப்பு பற்றி நாம் கவலையும் அக்கறையும் கொள்ள வேண்டும். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பெரும்பாலான யானை மரணங்கள் இயற்கையானவை அல்ல. ஏற்கெனவே சொன்னதுபோல பல்வேறு காரணங்கள் அதற்கு இருக்கின்றன. அருகிவரும் உயிரினமாக உலக அளவில் கருதப்படும் யானைகளை, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நமது அலட்சியமான நடவடிக்கைகளால் கொன்றுவருகிறோம். இதற்கான தீர்வை இப்போது நாம் காணாவிட்டால், பின்னர் பெரும் விலையைத் தரவேண்டியிருக்கும்.