Published:Updated:

தானே புயல் அப்டேட்ஸ்: தமிழகம், புதுவையில் 33 பேர் பலி

தானே புயல் அப்டேட்ஸ்: தமிழகம், புதுவையில் 33 பேர் பலி
தானே புயல் அப்டேட்ஸ்: தமிழகம், புதுவையில் 33 பேர் பலி
தானே புயல் அப்டேட்ஸ்: தமிழகம், புதுவையில் 33 பேர் பலி

தமிழக கடலோரப் பகுதிகளைத் தத்தளிக்கச் செய்துள்ள தானே புயல், கனமழை தொடர்பான அப்டேட் பகுதி இது. (கடைசியாக அப்டேட் செய்யப்பட்டது :  வெள்ளிக்கிழமை 8.12 PM)

*

தமிழகத்தில் 'தானே' புயல், கனமழையால் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


கடலூர் மாவட்டத்தில் 21 பேர் பலி; விழுப்புரத்தில் 2 பேர் பலி; திருவள்ளூர் 2 பேர்; சென்னையில் ஒருவர் பலி என அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

*

 தமிழகம், புதுச்சேரியில் புயல், கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு. கடலூரில் மட்டும் 9 பேர் பலியானதாக தகவல். புதுச்சேரியில் 7 பேர் பலி.

கடலூரில் சுமார் 10 ஆயிரம் பேர் வீடுகள் இழப்பு. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

சேத விவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

*

21 மீனவர்கள் நிலை என்ன?

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி, 6 மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்‍கு மீன்பிடிக்‍க சென்றனர். இதில், ஒரு படகு மட்டுமே நேற்று கரை திரும்பியது.

மற்ற படகுகளில் சென்ற 21 மீனவர்கள் வெள்ளிக்கிழமை மாலை வரை கரை திரும்பவில்லை. அவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, தமிழக கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படையினர், காணாமல் போன மீனவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தானே புயல், கனமழைக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு.

கடலூரில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மோசமடைந்ததால் நிவாரணப் பணிகள் தாமதம்.

கடலூரில் 5 ஆயிரத்துக்கும் மேலான மீனவர் வீடுகள் சேதம் என கலெக்டர் அமுதவள்ளி தகவல்.

கடலூர் - சிதம்பரம் சாலையில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

*

வானிலை ஆய்வு மையத் தகவல்:

கடலூருக்‍கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக நிலை கொண்ட 'தானே' புயல், பின்னர் மேற்கு நோக்‍கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலைக்‍குள் தாழ்வுப் பகுதியாக மாறி வலுவிழந்துவிடும்.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்.

*

கடலூர் நிலவரம்:

புதுச்சேரியை அடுத்து, தானே புயலால் கடலூர் மாவட்டம் தான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. 

கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் சூறாவளிக்‍ காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. செல்ஃபோன் கோபுரங்கள் சேதமடைந்ததன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டன. தொலைத்தொடர்பு சேவைகள் இன்னும் முடங்கியிருப்பதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

புயல் கரையைக் கடந்தாலும், பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை வெகுவாக பாதிக்‍கப்பட்டுள்ளது. நிவாரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியை புரட்டிப் போட்ட புயல்..

தானே புயலால் கடலூரைப் போலவே புதுச்சேரியில் மிகுந்த பாதிப்பும் சேதமும் ஏற்பட்டது. கனமழையால் புதுச்சேரியே தண்ணீரில் மிதக்கிறது.

*

புதுச்சேரியில் மழைக்கு இருவர் பலியாகினர். சூறைக் காற்று மிகப் பலமாக இருந்ததால், ராஜ உடையார் தோட்டம் என்ற இடத்தில் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்து, அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். தாவீத் பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில், ஜான் ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.

*

புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளும் வெகுவாக பாதித்தன. கடல் அலைகள் மிகக் கடுமையாக உள்ளன. புமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

*

புதுச்சேரியில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியது. புயலைத் தொடர்ந்து அங்கு இதுவரை 15 செமீ மழை பெய்துள்ளது.

*

கன மழை மற்றும் சூறைக் காற்று காரணமாக சென்னை புதுவை - கடலூர் இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து கிடக்கின்றன. நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

*

விழுப்புரம் நிலவரம்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்‍குப்பம் பகுதியில் குடிசை வீடு இடிந்து விழுந்து சுகந்தி என்ற இளம் பெண் உயிரிழந்தார். சங்கராபுரம் அருகே 60 வயது முதியவர் மின்சாரம் தாக்‍கி பலியானார்.

தொடர் மழை காரணமாக புதுச்சேரி - விழுப்புரம், மயிலாடுதுறை - விழுப்புரம் மார்க்‍கமாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முண்டியம்பாக்‍கத்தில் மின் கம்பம் அறுந்து விழுந்ததால், பொதிகை, முத்து நகர், அனந்தபுரி, சேது விரைவு ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன.

ரயில் பாதை சீரானவுடன் இந்த ரயில்கள் இயக்‍கப்பட்டன. கம்பன், மன்னை, ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் கடலூர் வழியை தவிர்த்து, விருத்தாசலம், திருச்சி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

நாகை நிலவரம்:

நாகையில் நேற்றிரவு தொடங்கி பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
சீர்காழியில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டு, மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்‍கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக மின் விநியோகம் நிறுத்திவைக்‍கப்பட்டுள்ளது.

*

புதுக்‍கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்‍கப்பட்டுள்ளனர். மீன்வளத்துறை அதிகாரிகள் கடற்கரை பகுதியில் தங்கி பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

*

காஞ்சிபுரம் நிலவரம்:

மாமல்லபுரம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், செய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல், சீற்றத்துடன் காணப்பட்டது.

கனமழை பெய்து வருவதால் கடலோரப் பகுதிகளில் வசிக்‍கும் 700-க்‍கும் மேற்பட்டோர் பட்டிப்புலம், ஒய்யாலிக்‍குப்பம், கல்பாக்‍கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்‍கப்பட்டு, உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கிழக்‍கு கடற்கரை சாலையில் விழுந்து கிடந்த மரங்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்‍குவரத்தை சீர் செய்தனர்.

திருவள்ளூர் நிலவரம்:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியைச் ​சேர்ந்த பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர், பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்‍கப்பட்டுள்ளனர். இவர்களுக்‍கு தேவையான உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி, நொச்சிக்‍குப்பம் பகுதிகளைச் சேர்ந்த 122 மீனவர்கள், ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடிக்‍கச் சென்றனர்.

கடல் சீற்றம் காரணமாக புளியஞ்சேரி கிராமப்பகுதியில் கரையேறிய அவர்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் தமிழக போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

மீனவர்கள் பாதிப்பு:

சென்னை அருகே மாமல்லபுரம், கடப்பாக்கம், பனையூர், பெரியகுப்பம், சிறிய குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழையால் பெரும் பாதிப்பு உண்டானது. குறிப்பாக, மீனவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.

புயல் காற்று காரணமாக மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 50 படகுகள் சேதமடைந்தன. ஒரு சில கிராமங்களில் கடல் நீர் உள்ளே புகுந்தது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

தானே புயல், கனமழையால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகியவற்றுக்காக 150 கோடி ரூபாயை உடனடியாக விடுவித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இதர நடவடிக்கைகள் குறித்து அவர் வெளியிட்ட செய்தி.. http://bit.ly/vW5Uq0

*

புயல், கனமழை நிவாரண நடவடிக்கைகள்: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை

*

சென்னை நிலவரம்:

சென்னையில் இரவு தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. தற்போது, காற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளது. எனினும், மழை நீடிக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முழுவதும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பாதிப்பு, சேதம் தொடர்பாக, சென்னை மாநகராட்சியைத் தொடர்புகொள்ள 1913 மற்றும் 25619237 எண்களை டயல் செய்க.

*

சென்னையில் நேற்று இரவு தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. தற்போது, காற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளது. எனினும், மழை நீடிக்கிறது.

சுறைக்காற்றால் இதுவரை 60-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இவற்றில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னை கடலோரப் பகுதிகளில் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த மக்களைத் தங்கவைப்பதற்கு 2 மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், சுமார் 3,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு 10,000 உணவுப் பொட்டலங்கள், பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை 88 பம்ப்புகள் கொண்டு அகற்றப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாலைகளில் பயணம் மேற்கொள்வோர் கவனத்துடனும், நிதானத்துடனும் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

*

கடலூரில் தானே புயலுக்கு 5 பேர் பலியானதாக அம்மாவட்ட கலெக்டர் தகவல்

*

சென்னை வானிலை ஆய்வு மைய தகவல் : தானே புயல் காலை 7 மணியளவில் கரையைக் கடந்தபோது, புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

புயல் கரையைக் கடந்தாலும், தமிழக மற்றும் கடலோரப் பகுதிகளில் கன மழை நீடிக்கும். திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.

தானே புயல் கரையைக் கடந்து நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. விழுப்புரம் உள்பட உள் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.

தானே புயல் கரையைக் கடந்து, கடலூரில் இருந்து மேற்கிலும் நிலப்பகுதியில் மையம் கொண்டுள்ளது. கரையைக் கடந்த புயல், மேற்கு நோக்கி நகரும்போது படிப்படியாக வலுவிழக்கும்.

*

புதுச்சேரி - உப்பளத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி; விழுப்புரம் -  ஆலத்தூரில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி மரணம்; விழுப்புரம் - கோட்டக்குப்பத்தில் சுவர் இடிந்து விழுந்து பெண் இறந்தார்.

*

சென்னைக்கு இன்று வரவேண்டிய குவைத், ஷார்ஜா, கோலாலம்பூர் விமானங்கள் ரத்து; எனினும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் குறிப்பிடத்தக்க பாதிப்பில்லை.

*

சென்னை எழும்பூரிலிருந்து காலை 8:20 மணிக்கு திருச்சி செல்லும் ரயிலும், திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 9:20க்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற ரயில் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து காலை 5:30க்கு சென்னை புறப்படும் ரயிலும் நிறுத்தப்படுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் ஆங்காங்கே இடையில் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் வந்து சேர கால தாமதம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*
 

தானே புயல் கரையைக் கடந்ததால், தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தற்போது கன மழை கொட்டி வருகிறது.

*

தானே புயல் கரையைக் கடந்தது. புதுச்சேரி - கடலூர் இடையே காலை 7 மணியளவில் புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது, 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

*

சென்னை, புதுச்சேரி, விழுப்புரத்தில் கனமழை, சூறைக்காற்றுக்கு 4 பேர் பலி

*

புதுச்சேரியில் இருந்து அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து நிறுத்தம். புதுச்சேரி மாநிலமே முற்றிலும் முடங்கியது. புதுச்சேரி மற்றும் கிராமப்புறங்களுக்கு உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
 

*

புயல் வேகம் இன்னும் குறையவில்லை என்கிறது வானிலை ஆய்வு மையம். 120 கி.மீ. முதல் 140 கி.மீ வரை சூறைக்காற்று வீசி வருகிறது.

*

சென்னை மெரினா கடற்கரைச் சாலை மூடப்பட்டது. காவல்துறை தீவிர கண்காணிப்பு.

*

சென்னைக்கு குடிநீர் வழங்கு புழல் ஏரி நிரம்பியதால், அதில் இருந்து உபர் நீர் திறந்துவிடப்பட்டது. வீராணம் ஏரியும் வேகமாக நிரம்புகிறது.

*

நாகை மாவட்டத்தின் சீர்காழியில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

*

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தம்!

+

தமிழக கடலோரா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் வெட்டு!

*

சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

*

'தானே'  புயல் இன்று காலை 7 மணியளவில் கடலூர், புதுச்சேரியில்  கரையைத் தொட்டது.

*

புதுச்சேரியில் 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

*

தமிழகத்தில் புயல் தொடர்பான அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்க.

*

புதுச்சேரி மற்றும் கடலூரில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

*

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


*

சென்னை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

*

சென்னையில் மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிப்பு.

*

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு

*

ரயில்வே சிறப்புத் தகவல் மையங்கள் மூலம் ரயில் வரும், புறப்படும் நேரங்களை அறிய..

சென்னை சென்ட்ரல் - 044-2535 7398, 044-2533 0710 
சென்னை எழும்பூர் - 044-2819 0216


*