Published:Updated:

மூன்றாவது நடுவர்தான் முடிவு செய்வார்! - சோதனை முயற்சியை மீண்டும் கையிலெடுக்கும் ஐசிசி #NowAtVikatan

நோ பால்
நோ பால்

இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

05 Dec 2019 9 PM

சோதனை முயற்சியை மீண்டும் கையிலெடுக்கும் ஐசிசி

கிரிக்கெட் போட்டி ஒன்றில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் களத்தில் இருக்கும் நடுவர்கள் கொடுக்கும் தவறான முடிவுகள். இதற்கு உதாரணமாக ஏகப்பட்ட சம்பவங்களை நம்மால் பார்க்க முடியும். அவற்றில் நோபால் சர்ச்சைகள் குறைவில்லாமல் இருக்கும்.

'இனி நோ பால் தவறு நடக்காது'! - ஐசிசியின் புதிய விதிமுறை

இதற்குத் தீர்வு காணும் வகையில் சோதனை முறையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்றாவது நடுவர் முடிவெடுக்கும்படி விதியை அமல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது ஐசிசி. அதன்படி, பௌலர்களின் ஃப்ரண்ட் புட் நோபால் விவகாரத்தில் மூன்றாவது நடுவரே முடிவெடுப்பார். இந்த விவகாரத்தில் களத்தில் நடுவர்கள் முடிவெடுக்க மாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறது. சோதனை முயற்சியான இதில், ஒவ்வொரு பந்துவீசும்போது கண்காணித்தும் நோபால் வழங்குவது குறித்து மூன்றாவது நடுவர் முடிவெடுப்பார். அதேநேரம், சந்தேகத்தின் பலன் பௌலர்களுக்கு வழங்கப்படும் என்றும் வழக்கம்போல் மற்ற முடிவுகளை களத்தில் இருக்கும் நடுவர் எடுப்பார் என்றும் அறிவித்திருக்கிறது ஐசிசி.

05 Dec 2019 8 PM

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு புதிய சிக்கல்

அதிபர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தனக்கு எதிரான தீர்மானத்தை செனட் சபையில் எதிர்க்கொள்வதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

05 Dec 2019 6 PM

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. பலதரப்பு வாதங்களையும் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்த நிலையில், வழக்கில் நாளை காலை 10.30 மணிக்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

05 Dec 2019 5 PM

உள்ளாட்சித் தேர்தல் - அ.தி.மு.க நாளை ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நாளை (6-12-2019) ஆலோசனை நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நாளை மாலை நடைபெறும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.

05 Dec 2019 5 PM

கட்டாய ஓய்வு தகவலில் உண்மையில்லை!

30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கட்டாய ஓய்வு வழங்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அரசு சார்பில் அதுபோன்ற எந்தவொரு சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

05 Dec 2019 3 PM

மெரினாவை 6 மாதத்துக்குள் சுத்தப்படுத்துங்கள்!

மெரினா கடற்கரையை 6 மாத காலத்துக்குள் சுத்தம் செய்யுமாறு மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரையின் அழகை மறைக்கும் கடைகளை கடலைநோக்கி நேர்நிலையாக அமைக்க உத்தவிட்ட நீதிமன்றம், மெரினாவை சுத்தமாக வைப்பது தொடர்பாக வரும் 13ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருக்கிறது. மெரினாவை உலகத் தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றுங்கள் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

05 Dec 2019 2 PM

உள்ளாட்சித் தேர்தல் நிறுத்திவைப்பா?

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கு, அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான கேள்விக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில், `பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார்' எனத் தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

05 Dec 2019 2 PM

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 58 ஆம் கால்வாயில் நீர் திறப்பு..

05 Dec 2019 12 PM

பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம்!

சிதம்பரம்
சிதம்பரம்
ani

ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்துள்ள ப.சிதம்பரம் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அதில், `நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. பொருளாதாரத்தால் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை இன்னும் பா.ஜ.க அரசால் யூகிக்கக்கூட முடியவில்லை" எனப் பேசி வருகிறார்.

05 Dec 2019 12 PM

மேட்டுப்பாளையம் நடூரில் விதிமுறைகளை மீறி மற்றும் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களை இடிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

05 Dec 2019 12 PM

ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவு தினம்- நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

05 Dec 2019 11 AM

இளம்பெண் மீது தீ வைப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் இளம்பெண் ஒருவர் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச்சில் இருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தியிருந்துள்ளார் இந்த இளம்பெண். இதற்காக இன்று நீதிமன்றத்துக்கு ஆஜராக இருந்த நிலையில் இரு குற்றவாளிகளில் ஒருவர் மற்ற நான்கு பேருடன் சேர்ந்து இளம்பெண்ணை எரித்துள்ளனர். இதில் 60 சதவிகித காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

05 Dec 2019 11 AM

பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

மூன்றாவது நடுவர்தான் முடிவு செய்வார்! - சோதனை முயற்சியை மீண்டும் கையிலெடுக்கும் ஐசிசி
#NowAtVikatan

சிலைக்கடத்தல் தடுப்பு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளது. சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் தரவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவணங்களைச் சேகரித்து ஒப்படைப்பதாக பொன் மாணிக்கவேல் நேற்று கூறியிருந்தார்.

05 Dec 2019 11 AM

தி.மு.க வில் பி.டி.அரசக்குமார்!

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

பா.ஜ.க-வில் இருந்த பி.டி.அரசக்குமார் தி.மு.கவில் இணைந்தார். இவர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியதை அடுத்து சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் தற்போது தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் பி.டி.அரசக்குமார்.

05 Dec 2019 10 AM

நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை!

நாடெங்கும் வெங்காய விலையேற்றம் தொடர்பான பேச்சுகள்தான். நேற்று மக்களவையிலும் இந்தப் பேச்சுதான். தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்காய விலை தொடர்பான கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரானார். அப்போது மற்றொரு எம்.பி, நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள் தானே... உங்களுக்கும் அந்த விலையேற்றத்தின் பாதிப்பு தெரியும் தானே எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் பேசிய நிர்மலா சீதாராமன், ``நான் வெங்காயமும் பூண்டும் சாப்பிடுவதில்லை. எங்கள் குடும்பத்திலும் இந்த உணவு வகைகளை அதிகம் உண்ண மாட்டோம். அதனால் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்” என்றார். தொடர்ந்து அரசு வெங்காய விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

05 Dec 2019 11 AM

ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி முதல்வர், துணை முதல்வர் உட்பட அ.தி.மு.கவினர் மௌன ஊர்வலம்

05 Dec 2019 9 AM

கப்பலுடன் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள்!

நைஜீரியாவின் போனி கடற்பகுதி அருகே 18 இந்திய மாலுமிகளுடன் சென்ற ஹாங்காங் சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாகவும் கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்பது தொடர்பாகவும் இந்திய தூதரகம் நைஜீரியா அரசு மற்றும் பாதுகாப்புக் குழுக்களுடன் பேசி வருகிறது.

05 Dec 2019 7 AM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3 -ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை முதலே அ.தி.மு.க தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது!

05 Dec 2019 7 AM

கர்நாடகா இடைத்தேர்தல்...!

எடியூரப்பா, குமாரசாமி
எடியூரப்பா, குமாரசாமி

கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள 17 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜனதா தள கூட்டணி அரசுக்கு எதிராகச் செயல்பட்ட அக்கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

இதைத் தொடர்ந்து பா.ஜ.க வின் எடியூரப்பா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய நிலவரப்படி இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு குறைந்தது 6 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்த 15 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 9 -ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு