அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தஞ்சையில் ரூ.6 கோடி முறைகேடு? - தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட கூட்டுறவுச் சொத்து!

கூட்டுறவுச் சொத்து
பிரீமியம் ஸ்டோரி
News
கூட்டுறவுச் சொத்து

ஒரு சதுரஅடிக்கு ரூ.2,638 வரை விலையைக் குறைத்து விற்பனை செய்திருக்கிறார் பாஸ்கரன். இதன் மூலம் 6 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கிறது.

தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் இருக்கிறது, கூட்டுறவுத்துறைக்குச் சொந்தமான இடம். சண்முகா நகர் கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 23,000 சதுரஅடி கொண்ட இந்த இடத்தை, தொழிலதிபர் ஒருவருக்கு முறைகேடாக விற்பனை செய்திருக்கின்றனர் என்றும், இதில் 6 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகவும் கொந்தளிக்கின்றனர் சங்க நிர்வாகிகள்!

தஞ்சையில் ரூ.6 கோடி முறைகேடு? - தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட கூட்டுறவுச் சொத்து!

இது குறித்துப் பேசுகிற சண்முகா நகர் கூட்டுறவு சங்க இயக்குநர் கலியமூர்த்தி, ‘‘சங்கத்தோட வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படும் வகையில், திருமண மண்டபம் கட்டுவதற்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதை ஆன்லைனில் அறிவிப்பு வெளியிட்டு, பொது ஏல முறையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு சமீபத்தில் விற்பனை செய்திருக்கின்றனர். அரசு மதிப்பு, சந்தை மதிப்பு இரண்டையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு இடத்துக்கான விலையை நிர்ணயம் செய்யாமல், தனிநபர் ஆதாயம் அடைகிற வகையில் விலையைக் குறைத்து நிர்ணயம் செய்திருக்கிறார் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மாநிலப் பதிவாளர் பாஸ்கரன். இதன் பின்னணியில் பெரிய தொகை கைமாறியிருக்கிறது. பத்திரப்பதிவிலும்கூட 7% முத்திரைத்தாள் விலக்கு பெற்றுக் கொடுத்து அரசை ஏமாற்றியுள்ளனர். இதன் மூலம் மட்டும் அரசுக்கு 35 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மன்னார்குடியிலுள்ள இதே சங்கத்துக்கு சொந்தமான இடத்தை, விலையைக் குறைத்து முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பான வழக்கிலும் பதிவாளர் பாஸ்கரன் மேல்முறையீடு செய்திருக்கிறார்’’ என்றார் கொதிப்பாக.

கூட்டுறவு வீட்டு வசதிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேலாயுதம், ‘‘ஒரு சதுரஅடிக்கு ரூ.2,638 வரை விலையைக் குறைத்து விற்பனை செய்திருக்கிறார் பாஸ்கரன். இதன் மூலம் 6 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கிறது. இது குறித்து முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன்’’ என்றார்.

கலியமூர்த்தி - வேலாயுதம்
கலியமூர்த்தி - வேலாயுதம்

இதையடுத்து, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மாநிலப் பதிவாளர் பாஸ்கரனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘நான் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே விலை நிர்ணயம் செய்திருக்கின்றனர். தனிநபரால் விலை நிர்ணயம் செய்ய முடியாது. அரசாணையைப் பின்பற்றி விலை நிர்ணய கமிட்டி உட்பட பலர் முன்னிலையில் விலை நிர்ணயம் செய்துதான், ஐந்தே முக்கால் கோடிக்கு இடத்தை விற்பனை செய்திருக்கிறோம். முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் கூறிவரும் வேலாயுதத்தின் மீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் இருக்கின்றன’’ என்றார்.