Published:Updated:

`குழந்தை இறந்து 2 மணி நேரம் ஆகுது!’- சென்னைப் பெண்மணிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்

ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்த பயணியின் குழந்தை விமான நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழந்தை
குழந்தை

சென்னை சேலையூரைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் ஆஸ்திரேலியாவில் தன் மனைவி கீதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். சக்தி முருகன் - கீதா தம்பதியருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கேயே குழந்தை பிறந்ததுள்ளது. மகளையும் குழந்தையையும் பார்த்துக்கொள்வதற்காக கீதாவின் தாய் பிரிட்டோ குயின் என்பவரும் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இந்நிலையில் கீதா, ஆறு மாத குழந்தை ரித்தீஸ் மற்றும் கீதாவின் தாய் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு கோலாலம்பூர் வழியாகச் சென்னை வந்துள்ளனர். அவர்கள் வந்த விமானம் நள்ளிரவு 1 மணியளவில் விமான நிலையம் வந்துள்ளது. இதையடுத்து விமானநிலையத்தில் சோதனைக்காக கீதா நின்று கொண்டிருக்கும்போதுதான், குழந்தை ரித்தீஸ் சுயநினைவு இழந்து இருப்பதைக் கவனித்துள்ளார்.

`திடீரென கத்தினான்; வண்டியை நிறுத்துவதற்குள்..!'- மாஞ்சா நூலால் உயிரிழந்த குழந்தையின் தந்தை கதறல்

பின், உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார் கீதா. அங்கே குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரித்தீஸ் இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கீதா மற்றும் அவரது தாய் விமான நிலையத்திலேயே கதறி அழுதுள்ளனர்.

குழந்தை
குழந்தை

இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது பிரேதப் பரிசோதனை முடிவிலேயே தெரியவரும். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள விமான நிலைய காவலர்கள், குழந்தை இறப்புக்கான காரணம் தொடர்பாகக் குழந்தையின் தாய், விமான நிலைய அதிகாரி மற்றும் விமான ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இறந்தது தெரியாமல், தாய் இரண்டு மணி நேரமாக அதைத் தூக்கிவைத்திருந்த சம்பவம் விமான நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.