Published:Updated:

காவிரிக்காக இப்படி நடந்தது... முல்லை பெரியாறுக்காக எப்படி நடந்தது தெரியுமா?

காவிரிக்காக இப்படி நடந்தது... முல்லை பெரியாறுக்காக எப்படி நடந்தது தெரியுமா?
காவிரிக்காக இப்படி நடந்தது... முல்லை பெரியாறுக்காக எப்படி நடந்தது தெரியுமா?

2011-ன் இறுதியில் ஒருநாள்:

இரு மாநில எல்லைகளிலும் கடுமையான பதற்றம். வயிற்றுப்பாட்டிற்கு மாநிலம் விட்டு மாநிலம் சென்றவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி காற்றில் பரவி நெருப்பை ஊதி பெரிதாக்கிக்கொண்டிருந்தது. 'நம்ம பிரச்னை, நாமதானே களத்துல இறங்கணும், அப்பாவிங்க என்ன செஞ்சாங்க?' - யாரோ ஒரு பெண்ணின் மனதில் தோன்றிய கேள்வி இது. மெல்ல மெல்ல பெண்கள் கூட்டம் அணி திரண்டது. அவர்களுக்குப் பின்னால் மொத்த கிராமமும். ஒற்றை கிராமத்துக் கூட்டம் அடுத்த சிலமணி நேரங்களில் ஐந்து மாவட்டக் கூட்டமானது. சாரை சாரையாக நீதி கேட்டுப் பேரணி போனார்கள் விவசாயிகள். 

எந்தக் கட்சியும் மைக் செட் போட்டு அழைக்கவில்லை. எந்த இயக்கமும் கூட்டத்திற்குத் தலைமையேற்கவில்லை. தானாகச் சேர்ந்து தன்னாலே போராடிய கூட்டம் அது. எந்த இடத்திலும் துளி வன்முறையில்லை. 'எந்த இனத்தான்டா நீ?' எனக் கேட்டு அடிக்க அந்தக் கூட்டத்தில் எவரும் இல்லை. தேனியின் தென்கோடியில் எழுந்த முழக்கம் இறுக்கப் பூட்டியிருந்த அதிகார வர்க்கத்தின் கதவுகளை அசைத்துப் பார்த்தது. விளைவு - சர்வதேச கவனம் பெற்றது முல்லைப் பெரியாறு பிரச்னை. தீர்வு இன்னும் எட்டியபாடில்லைதான். ஆனால், அணையை அரசியலாக்கி அழகு பார்த்தவர்களுக்கு, வன்முறை நெருப்பில் குளிர் காய நினைத்தவர்களுக்கு... விவசாயிகள் ஓங்கி அடித்த எச்சரிக்கை மணி அது. கத்தியின்றி ரத்தமின்றி நடந்த ஓர் உன்னத மக்கள் போராட்டம் அது. 


இன்று...

காவிரி பிரச்னையில் கண்ணில்படும் தமிழக வாகனங்களை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்கள் பெங்களூருவில். விமர்சனம் செய்யும் இளைஞர் வதைக்கப்படுகிறார். வாட்ஸ் அப் குரூப்களில் எல்லாம் சண்டை வலுக்கிறது என ஸ்க்ரீன்ஷாட் அனுப்புகிறார் நண்பர் ஒருவர். நிற்க, வன்முறைகள் எதிலுமே கர்நாடக விவசாயிகள் சம்பந்தப்படவில்லை. கர்நாடக கிராமப்புறங்கள் இன்றும் அமைதியாகத்தான் இருக்கின்றன. ஐ.டி சிட்டி, இந்தியாவின் பாதுகாப்பான நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மெத்தப் படித்தவர்கள் இருக்கும் பெங்களூருவில்தான் பிரச்னை கொழுந்துவிட்டு எரிகிறது. கைகளில் கம்போடு சுற்றிவரும் இளைஞர்களில் எத்தனைப் பேருக்கு காவிரிப் பிரச்னை பற்றி முழுதாகத் தெரியும்?

ஊடகங்களில் வெளியாகும் அத்தனை வீடியோக்களிலும் ஒரே ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. தாக்கும் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் ஃபார்மல் டிரெஸ்ஸில் ஷோல்டர் பேக்கோடு ஆபீஸ் போகும் தோரணையில் காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் மனதில் போராட வேண்டும் என்றெல்லாம் எண்ணமில்லை. 'கூட்டமா ஏதாவது செஞ்சா ஊரே பார்க்கும், கெத்தா இருக்கும்' என்ற சாமானியனின் எண்ணம் அது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றன கன்னட அமைப்புகள்.

இங்கே அதே கொடுமை வேறுவிதமாக நடக்கிறது. ஒரு அப்பாவியை அடித்து உதைத்து, 'காவிரி தமிழ்நாட்டுக்குத்தான்னு சொல்லுடா' என மிரட்டுகிறார்கள். அவர் அப்படி சொல்லும்வரை அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். சரி, அவர் சொல்லிவிட்டார். உடனே குபீர் எனக் கரைபுரண்டு ஓடி நம் எல்லையைத் தொட்டுவிடுமா காவிரி? ஏறக்குறைய இதே நேரத்தில் ராமேஸ்வரத்தில் எட்டாத பஸ் கண்ணாடியை எம்பி எம்பி அடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார் இன்னொருவர். 

இங்கே ஒரு நண்பர் இருக்கிறார். 'ஒரு கன்னடத்தானையாவது அடிக்கணும் ஜி' என்றார் நரம்பு புடைக்க. 'அதுக்கப்புறம்?' என்றேன். 'நல்லா ரத்தம் வர அடிக்கணும் ஜி' என்றார். 'சரிங்க, அதுக்கப்புறம்?' என்றேன். தலையைச் சொறிகிறார். ஆக, காவிரிப் பிரச்னை பற்றியோ அதன் தீர்வு பற்றியோ எல்லாம் வன்முறையாளர்களுக்கு அக்கறை இல்லை. அவர்கள் விரும்புவது எல்லாம் ஓர் உடனடியாகக் கவன ஈர்ப்புதான். 

உண்மையில் வன்முறைதான் தீர்வு என்றால் 1991-லேயே காவிரிப் பிரச்னைக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி தீர்ப்பளித்தது காவிரி நதி நீர் தீர்ப்பாணையம். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 160 கோடி ரூபாய் பொருட்சேதம். அதன்பின் பொருட்சேதங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. கட்சிகளும் தேர்தல் கூட்டணி அமைத்துக்கொண்டன. ஆனால் பலியான 18 உயிர்களுக்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை. 

சரி, கர்நாடகம் பிரச்னை இல்லாமல் தண்ணீர் திறந்துவிட்டாலும் அதை முழுக்க முழுக்க பயன்படுத்திக்கொள்ள நம்மால் முடியுமா? தென் இந்திய மாநிலங்களிலேயே மோசமான நீர் மேலாண்மை கொள்கைகளைக்கொண்ட மாநிலம் நாம்தான். நிறையப் பின்னோக்கிப் போக வேண்டாம். சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத வெள்ளம் வந்தது சென்னையில். பல தலைமுறைகளுக்குப் பின் கூவத்தில் முகம் பார்க்கும் வாய்ப்பு சென்னைவாசிகளுக்கு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி நீர்நிலைகளை சீர்படுத்துங்கள் எனக் கூக்குரலிட்டார்கள் சமூக ஆர்வலர்கள். ம்ஹூம்! ஒரு சில்லும் பெயரவில்லை. 'நீங்க எல்லாம் அவ்வளவுதான்' என தற்போது விரக்தியாய் முகம் சுளித்து ஓடுகிறது கூவம். 

இதே நிலைமைதான் வைகை, தாமிரபரணி, பாலாறு போன்ற ஜீவநதிகளுக்கும். ஆக, பாதுகாத்துக்கொள்ள முடியாத சொத்தை பிரித்துத் தரச் சொல்லித்தான் பங்காளிகளிடம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம் நாம். இதோ, வழக்கம்போல கடிதம் எழுதத் தொடங்கிவிட்டார் நம் முதல்வர். 'மன் கி பாத்' ரேடியோ உரை போல டெம்ப்ளேட் பதிலளிக்கிறார் பிரதமர். 'கலவரத்துக்குக் காரணம் உங்க கட்சிதான்' என பா.ஜ.க நோக்கி விரல் நீட்டுகிறார் கர்நாடக காங்கிரஸ் முதல்வர். அவர்களுக்கு அலட்டிக்கொள்ள எதுமில்லை. அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம். கவன ஈர்ப்பு கிடைத்ததும் கலவரக்காரர்களும் அடங்கிப் போய்விடுவார்கள். பாவம் மண்ணை நம்பி வாழ்பவர்கள்! தேனியில் நடந்தது டெல்டாவிலும் சீக்கிரமே நடக்கலாம். ஆனால் அதில் பொருட்சேதமோ உயிர்சேதமோ இருக்கப் போவதில்லை. காரணம், சோறு போடுபவனுக்குத்தான் தெரியும் உயிரின் மதிப்பு!

-நித்திஷ்

தரவுகள்: ரெ.சு.வெங்கடேஷ்