Published:Updated:

இந்தியா அசத்தல் வெற்றி - ரன் சேஸில் மிரட்டிய கோலி #INDvsWI #NowAtVikatan

விராட் கோலி
விராட் கோலி

6.12.2019 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

06 Dec 2019 10 PM

இந்தியா அசத்தல் வெற்றி - கோலி அபாரம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது.இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய கேப்டன் கோலி 50 பந்துகளில் 94 ரன்களை எடுத்தார். டி-20 போட்டியில் கோலியின் அதிகபட்ச ரன்னாக இது பதிவானது.

06 Dec 2019 10 PM

உடல்களைப் பதப்படுத்தி வையுங்கள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கடந்த நவம்பர் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலங்கானா என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை டிசம்பர் 9-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்க அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

06 Dec 2019 9 PM

ஒரே நாளில் நான்கு மறுசீராய்வு மனுக்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை வழங்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, கடந்த 2ம் தேதி முதல் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி இன்று ஒரே நாளில் 4 வெவ்வேறு மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மௌலானா முஃப்தி ஹஸ்புல்லா, முகமது உமர், மௌலானா மஹ்ஃபூசர் ரஹ்மான் மற்றும் மிஷ்பாவுதீன் என நான்கு பேர் தரப்பில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

06 Dec 2019 8 PM

207 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்!

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெட்மெயர் 56 ரன்களும், லூவிஸ் 40 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய தீபக் சஹார், 56 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணி 15 சிக்ஸர்களை விளாசியது.

06 Dec 2019 6 PM

இந்திய அணி ஃபீல்டிங் தேர்வு!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய விராட் கோலி, ``பேட்டிங் செய்ய சிறப்பான ஆடுகளம் இது. ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணிக்குத் திரும்பியிருப்பது பலம். சேஸிங்தான் எங்களது பலம்'' என்றார்.

06 Dec 2019 6 PM

இருக்குனு சொல்லல.. இல்லைனு சொல்லல!

தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக பாஜகவை அதிமுக அழைத்ததன் அடிப்படையில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``உள்ளாட்சித் தேர்தலை எப்படி அணுகுவது என்பது குறித்து அதிமுகவுடன் ஆலோசித்தோம். அதிமுக திடீரென அழைத்ததால் ஆலோசிக்க வந்தோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி இருக்கிறது என்றும் கூறவில்லை. இல்லை என்றும் கூறவில்லை" எனக் கூறியுள்ளார்.

06 Dec 2019 5 PM

டாப் 10-ல் 4வது இடம்!

தேனி மகளிர் காவல்நிலையம்
தேனி மகளிர் காவல்நிலையம்

2019ம் ஆண்டில் நாட்டின் சிறந்த டாப் 10 காவல்நிலையங்களுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் அபர்தீன் காவல்நிலையம் முதலிடம் பிடித்துள்ள இந்தப் பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் 4வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் குஜராத்தின் பலாசினோர் காவல்நிலையமும் மூன்றாவது இடத்தில் மத்தியப் பிரதேசத்தின் அஜ்க் பஹ்ரென்பூர் காவல்நிலையமும் இருக்கின்றன.

06 Dec 2019 5 PM

டிசம்பர் 8-ல் டிக்கெட் விற்பனை!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே டிசம்பர் 15ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் 8ம் தேதி காலை 10.30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

06 Dec 2019 5 PM

நித்யானந்தாவின் கோரிக்கை நிராகரிப்பு!

புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை இந்திய வெளியுறவுத் துறை நிராகரித்திருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ``நித்யானந்தா பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார்'' என்றார். அதேபோல், நித்யானந்தாவின் மற்ற பாஸ்போர்ட்டுகளையும் ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

06 Dec 2019 1 PM

மாயாவதி காட்டம்!

மாயாவதி
மாயாவதி

"பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஹைதராபாத் போலீஸ் போன்று உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்" என்று பிஎஸ்பி தலைவர் மாயாவதி கூறினார். ``உபி, டெல்லி போலீஸார் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். உ.பி-யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் மாநில அரசு தூங்குகிறது. மாநில விருந்தாளிகள் போன்று குற்றவாளிகள் நடத்தப்படுகிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.

06 Dec 2019 11 AM

அமித் ஷா துறைக்கு ஆலோசகரானார் விஜயகுமார் ஐ.பி.எஸ்!

விஜயகுமார்
விஜயகுமார்

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக விஜயகுமார் காஷ்மீரின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விஜயகுமார் ஜம்மு காஷ்மீருக்கும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும் ஒருவருடத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

06 Dec 2019 10 AM

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க தொடர்ந்த வழக்கில், நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. பலதரப்பு வாதங்களையும் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ``தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்.

06 Dec 2019 9 AM

வேட்புமனுவை வாங்க வேண்டாம்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்க இருந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும்வரை வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களைப் பெற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

06 Dec 2019 7 AM

பெண் மருத்துவர் கொலை வழக்கு - என்கவுன்டர்!

இந்தியா அசத்தல் வெற்றி - ரன் சேஸில் மிரட்டிய கோலி
 #INDvsWI  #NowAtVikatan

தெலங்கானா அருகே, கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது நால்வரும் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. முழுவிவரம்

`அதே இடம்; 4 பேரும் 4 திசை!- பெண் மருத்துவர் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
06 Dec 2019 7 AM

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

தீர்ப்பு - #NowAtVikatan
தீர்ப்பு - #NowAtVikatan

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க தொடர்ந்த வழக்கில், நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. பலதரப்பு வாதங்களையும் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

06 Dec 2019 7 AM

தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

கடந்த மாதம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக அது குறைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளென்பதால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடம் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

06 Dec 2019 7 AM

உள்ளாட்சித் தேர்தல் - அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்!

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்
விகடன்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், மாலையில் நடைபெறும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும்.

அடுத்த கட்டுரைக்கு