Published:Updated:

நடிகர் விஜய் இல்லத்தில் நடந்த ஐ.டி சோதனை நிறைவு #NowAtVikatan

நடிகர் விஜய் இல்லம்
நடிகர் விஜய் இல்லம்

6.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

06 Feb 2020 9 PM

23 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனை நிறைவு

சென்னை அருகே பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வருமானவரித்துறையினர் சம்மன் அளித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்டார். நேற்று இரவு முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் இல்லத்தில் 23 மணிநேரத்துக்கும் மேலாக நடத்து வந்த சோதனை தற்போது நிறைவு பெற்றது.

06 Feb 2020 7 PM

 'இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக்கூடாது!' - கே.எஸ்.அழகிரி

அறிக்கை
அறிக்கை

நடிகர் விஜய்-க்கு சொந்தமான இடங்களில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைகள் உள்நோக்கத்தை கொண்டதாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பா.ஜ.க அரசு கருதுமேயானால் அது வெறும் பகல் கனவாகத் தான் முடியும். இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கின்ற விஜய் அஞ்சக் கூடாது என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

06 Feb 2020 5 PM

`விஜய்யிடம் தொடரும் விசாரணை; அன்புச் செழியனிடமிருந்து ரூ.77 கோடி!' - ரெய்டில் குறித்து ஐ.டி அதிகாரிகள்

சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். அதேபோல் பைனான்சியர் அன்பு செழியனின் மதுரை, சென்னை அலுவலகம் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சமீபத்தில் தயாரித்த படம் பிகில். இதனடிப்படையில் நடிகர் விஜய்யிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விஜய்யின் பனையூர் வீட்டில் 18 மணி நேரமாக சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிகில் படத் தயாரிப்புக்கு நிதி அளித்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்து ஆவணங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் மூலம் ரூ.300 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், கடன் அளித்தவர் ஆகியோருக்கு தொடர்புடைய 38 இடங்களில் சோதனை நடந்தது. நடிகர் விஜய்யிடம் சொத்து விவரங்கள், திரைப்படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்தும் விசாரித்து வருகிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 Feb 2020 1 PM

முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இடைத்தரகரும் முக்கிய குற்றவாளியுமான ஜெயக்குமார் இன்று சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பல நாள்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சரணடைந்துள்ளார். ஜெயக்குமார் இருக்கும் இடத்தை கூறுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

06 Feb 2020 11 AM

பாதுகாப்புக் கோரி ஏ.ஆர் முருகதாஸ் நீதிமன்றத்தில் மனு!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் தர்பார். இந்த படம் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை என்பதால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் ரஜினியைச் சந்திக்க முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர் முருகதாஸ்
ஏ.ஆர் முருகதாஸ்

இதனால் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாகக் குற்றம்சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்.

06 Feb 2020 8 AM

விடிய விடிய தொடரும் சோதனை!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `பிகில்' படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. அப்படத்தின் ஃபைனான்ஸியரான அன்புச்செழியன் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் சென்னையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களிலும் அதன் உரிமையாளர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் `மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடமும் பிகில் பட சம்பளம் தொடர்பாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றனர்.

ரெய்டில் சிக்கிய நடிகர் விஜய்... மதுரையில் நடத்திய ரகசிய கூட்டம் காரணமா?
நடிகர் விஜய் வீடு
நடிகர் விஜய் வீடு

பின்னர் சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரை பகுதியில் உள்ள விஜய் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய் வீடுகளில் நடைபெறும் வருமானவரித்துறையின் சோதனை இன்று காலையிலும் தொடர்கிறது. சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

`சென்னை அழைத்துவரப்பட்ட விஜய்!' - நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது?
அடுத்த கட்டுரைக்கு