Published:Updated:

அ.தி.மு.க-வில் இணைந்தார் பெங்களூரு புகழேந்தி! #NowAtVikatan

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

06.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

06 Jan 2020 8 AM

வைகுண்ட ஏகாதசி! - வைணவத் தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு

உலகளந்த பெருமாளை தரிசிப்பதற்கு உகந்த காலம், மார்கழி. குறிப்பாகப் பகல்பத்து முடிந்து ராப்பத்து தொடங்கும் இந்த ஏகாதசித் திருநாள், பெருமாளுக்கு மிகுந்த சிறப்புடையது. இன்று வைகுண்ட ஏகாதசி. 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் நிகழ்வான பரமபத வாசல் திறப்பு வைபவம் அதிகாலையில் நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் காலை சரியாக, 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர், அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபத வாசலை நம்பெருமாள் கடந்து வந்தார். அதேபோல், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பக்தர்களின் ரெங்கா ரெங்கா கோஷத்துக்கு மத்தியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

06 Jan 2020 8 AM

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை 2020-ம் ஆண்டில் முதல்முறையாக இன்று கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

06 Jan 2020 10 AM

தி.மு.க வெளிநடப்பு!

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் கலந்துகொண்டு பேசினார். ‘என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ எனத் தமிழில் வாழ்த்துக் கூறி தன் உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆனால் அவரை பேசவிடாமல் தடுத்த எதிர்க்கட்சி தலைவர்கள், தொடர்ந்து தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஆளுநர் அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறினார். அதைக் கேட்காமல் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க வெளிநடப்பு செய்தது. டிடிவி தினகரன் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

06 Jan 2020 11 AM

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.512 விலை உயர்ந்து ரூ31,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.64 விலை உயர்ந்து 3,896 விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாள்களில் தங்கத்தின் விலை ரூ 1,280 அதிகரித்துள்ளது. இரான் - அமெரிக்கா இடையிலான போர்ப்பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. போர்ப்பதற்றம் தொடரும்வரை தங்கத்தின் விலையேற்றம் தொடருமென்றும் தெரிகிறது.

அ.தி.மு.க-வில் இணைந்தார் பெங்களூரு புகழேந்தி! #NowAtVikatan
06 Jan 2020 12 PM

9-ம் தேதி வரை நீடிக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

இந்த ஆண்டுக்கான முதல் தமிழகச் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை வரும் 9-ம் தேதிவரை நடத்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர்
ஆளுநர்

சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசுக் கொறடா, தி.மு.க சார்பில் துரைமுருகன் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதன் முடிவிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற செயலரிடம் மனு அளித்துள்ளார், அது தொடர்பான விவாதமும் உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக விவாதமும் வரும் நாள்களில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

06 Jan 2020 2 PM

ஜூ.வி நிருபர், புகைப்படக் கலைஞருக்கு ஜாமீன்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இலங்கை தமிழ் அகதிகளிடம் சர்வே நடத்தியதற்காக ஜூனியர் விகடன் நிருபர் சிந்து மற்றும் புகைப்படக் கலைஞர் ராம்குமார் ஆகியோர் மீது மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை காவல் நிலையங்களில் மூன்று பிரிவுகளின்கீழ் கடந்த டிசம்பர் 28ம் தேதி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பிரிவு 447 - குற்றம்புரியும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைதல்; பிரிவு - 188 அரசாங்க அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படியாமல் இருத்தல். அதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்; பிரிவு-505 (1) பி மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராகக் குற்றம்புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், பிரசுரங்களை விநியோகித்தல் ஆகியவைதான் அந்தப் பிரிவுகள். இதில் பிரிவு-505 (1) பி என்பது, பிணையில் விட முடியாத சட்டப்பிரிவாகும்.

வழக்கு
வழக்கு

இந்தநிலையில், ஜூ.வி நிருபர்களுக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவர்கள் இருவருக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

06 Jan 2020 3 PM

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி, 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 11-ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 Jan 2020 8 PM

அ.தி.மு.க-வில் இணைந்தார் பெங்களூரு புகழேந்தி!

அ.ம.மு.க கர்நாடக செயலாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். சில நாட்களாகவே தினகரன் உடன் ஏற்பட்ட மோதலால் அ.ம.மு.க போட்டிக் கூட்டம் நடத்திவந்தார் புகழேந்தி.

அடுத்த கட்டுரைக்கு