Published:Updated:

ஆபரேஷன் செவ்வாய்!

ஆபரேஷன் செவ்வாய்!
பிரீமியம் ஸ்டோரி
ஆபரேஷன் செவ்வாய்!

உண்மையில் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தனவா என்ற கேள்விக்குக் காலமும் ‘பெர்ஸிவியரன்ஸ்’ ரோவரும்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆபரேஷன் செவ்வாய்!

உண்மையில் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தனவா என்ற கேள்விக்குக் காலமும் ‘பெர்ஸிவியரன்ஸ்’ ரோவரும்தான் பதில் சொல்ல வேண்டும்.

Published:Updated:
ஆபரேஷன் செவ்வாய்!
பிரீமியம் ஸ்டோரி
ஆபரேஷன் செவ்வாய்!
செவ்வாயை ஜோசியக் கட்டத்தில் மட்டுமே பார்த்து வந்த நமக்கு அதில் குடிபுகும் ஆசையைத் தூண்டிவிட்டிருக்கிறது தற்போது நடக்கும் சம்பவங்கள். ‘என் வாழ்நாள் முடிவதற்குள் செவ்வாய்க் கிரகத்தில் குடிபுகுவேன்!’ என எலான் மஸ்க் சொன்னபோது வெடித்துச் சிரித்தவர்களும் இன்று அது நடக்க வாய்ப்பிருக்கிறதா என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். நிலவில் கால்தடம் பதித்ததுதான் இன்றுவரை விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் செய்த ஆகப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. 1969-ம் ஆண்டே இதைச் சாத்தியப்படுத்திய நாசா, இப்போது அடுத்த இலக்கைக் குறிவைத்துவிட்டது. அது செவ்வாய். கடந்த வாரம் இதற்கான முக்கிய முன்னெடுப்பில் வெற்றியும் கண்டிருக்கிறது. ‘பெர்ஸிவியரன்ஸ்’ (Perseverance) என்னும் ரோவரை வெற்றிகரமாகச் செவ்வாயில் தரையிறக்கியிருக்கிறது நாசா. இந்த மிஷனின் முக்கியத்துவம் என்ன?
ஆபரேஷன் செவ்வாய்!
ஆபரேஷன் செவ்வாய்!

செவ்வாய்க் கிரகத்தில் இப்போது இல்லையென்றாலும் முன்னொரு காலத்தில் ஏதோ ஒரு வடிவில் உயிர்கள் இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றன சமீபத்திய ஆய்வுகள். பல நாடுகளும் போட்டிபோட்டு செவ்வாய்க்கு விண்கலங்கள் அனுப்பக் காரணம் இதுதான். பூமிக்கு வெளியே எந்த ஒரு வடிவிலாவது உயிர்கள் வாழ்வதோ, வாழ்ந்ததோ அறியப்பட்டால், விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய மைல்கல்லாக அது அமையும். ஏற்கெனவே 2012-ல் ‘க்யூரியாசிட்டி’(Curiosity) என்னும் ரோவரை செவ்வாயில் தரையிறக்கியது நாசா. செவ்வாயில் தண்ணீர்த் தடங்கள் இருக்கின்றனவா, உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இருக்கின்றன என ஆய்வு செய்தது ‘க்யூரியாசிட்டி’. அந்த வேலைகளை இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் தொடரவிருக்கிறது ‘பெர்ஸிவியரன்ஸ்’. ‘க்யூரியாசிட்டி’, ‘பெர்ஸிவியரன்ஸ்’ எனப் பெயரிலேயே மிஷன்களின் நோக்கத்தைச் சொல்லிவிடுகிறது நாசா.

கடந்த வருடம் ஜூலை 30-ம் தேதி ‘பெர்ஸிவியரன்ஸ்’ விண்ணில் ஏவப்பட்டது. பூமியும் செவ்வாயும் மிக அருகில் இருக்கும் காலம் அது. சுமார் 293 மில்லியன் மைல்கள் பயணத்திற்குப் பிறகு ஜெஸிரோ பள்ளத்தில் (Jezero Crater) பிப்ரவரி 18-ம் தேதி பெர்ஸிவியரன்ஸ் இறங்கியது. என்னதான் ஏழு மாதங்கள் விண்ணில் பயணித்திருந்தாலும், தரையிறங்கும் இறுதி ஏழு நிமிடங்கள்தான் மொத்தப் பயணத்திலுமே மிகவும் சிக்கலான படலம். அந்த ஏழு நிமிடங்களை ‘7 Minutes of Terror’ என அழைப்பார்கள். ‘மணிக்கு சுமார் 20,000 கிலோமீட்டர் வேகத்தில் செவ்வாயின் வளிமண்டலத்திற்குள் புகுந்து வெறும் ஏழு நிமிடங்களில் வேகம் குறைந்து தரையிறங்க வேண்டும்’ என்பது கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறதல்லவா?!

ஆபரேஷன் செவ்வாய்!
ஆபரேஷன் செவ்வாய்!

செவ்வாயிலிருந்து ரேடியோ சிக்னல்கள் பூமிக்கு வந்துசேர சுமார் 11 நிமிடங்கள் ஆகுமென்பதால், இங்கு இருக்கும் மிஷன் கன்ட்ரோல் அணியாலும் எந்த விதத்திலும் இந்தத் தரையிறங்குதலுக்கு வழிகாட்ட முடியாது. கேமரா ஒன்றைக் கண்களாகக் கொண்டு, ரோவரே அதுவாகப் பார்த்துத் தன்னைத் தரையிறக்கிக்கொள்ள வேண்டும். இறங்கும் பகுதியும் பெரிய பாறைகளும் கற்களும் மணல் படலங்களும் நிறைந்த கரடுமுரடான பகுதி. இந்த சவாலான ஏழு நிமிடங்களைக் கடந்து மீண்டும் சாதனை படைத்திருக்கிறது நாசா. பாதுகாப்பாகச் செவ்வாய்ப் பரப்பில் இறங்கிய குஷியில் முதல் புகைப்படத்தையும் பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பிவைத்தது ‘பெர்ஸிவியரன்ஸ்.’

சரி, இத்தனை சவாலான ஜெஸிரோ பள்ளத்தில் பெர்ஸிவியரன்ஸ் தரையிறங்கியது ஏன் தெரியுமா? இதற்கு முன்பு செவ்வாயைச் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவந்த ஆர்பிட்டர்கள் ‘இங்குதான் உயிர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக’ தெரிவித்தன. 400 கோடி வருடங்களுக்கு முன்பு இது ஒரு டெல்டா பகுதியாக இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை, செவ்வாய் கால அளவில் சுமார் ஒரு வருடம் (பூமி கால அளவின்படி 687 நாள்கள்) ஆய்வு செய்யும் பெர்ஸிவியரன்ஸ்.

ஆபரேஷன் செவ்வாய்!
ஆபரேஷன் செவ்வாய்!

இது அல்லாமல் செவ்வாயின் நிலவியலையும் ஆய்வு செய்யும் இந்த ரோவர். மண் மாதிரிகளையும் எடுத்துவைக்கும். வருங்கால மிஷன்களில் இதை மீண்டும் பூமிக்கு எடுத்துவந்து ஆய்வு நடத்தவிருக்கிறது நாசா. மேலும் மனிதனைச் செவ்வாயில் உயிர்வாழ வைக்கும் தொழில்நுட்பங்களையும் இந்த ரோவர் கொண்டு சோதனை செய்யப்போகிறார்கள். அப்படித்தான் கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றும் கருவி அனுப்பப்பட்டிருக்கிறது. ரோவரில் ஒரு ஸ்பெஷல் குட்டி ஹெலிகாப்டரும் இருக்கிறது. ‘இன்ஜெனுவிட்டி’ (Ingenuity) என அழைக்கப்படும் இது செவ்வாயின் அழுத்தம் குறைந்த வளிமண்டலத்தில் பார்ப்பதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. அந்த வளிமண்டலத்தில் பறப்பது எப்படி இருக்கும் என்பதை ஆராய்ச்சி செய்யும் அது. இதுவும் செவ்வாயில் வெற்றிகரமாகப் பறக்கத் தொடங்கிவிட்டது.

உண்மையில் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தனவா என்ற கேள்விக்குக் காலமும் ‘பெர்ஸிவியரன்ஸ்’ ரோவரும்தான் பதில் சொல்ல வேண்டும். வீ ஆர் வெயிட்டிங்!

ஆபரேஷன் செவ்வாய்!

இதற்குப் பின்னும் ஓர் இந்தியப் பெண்!

ந்த மிஷனின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் என்கிற முக்கியப் பொறுப்பிலிருப்பவர், இந்திய வம்சாவளிப் பெண் ஸ்வாதி மோகன். இவர்தான் பெர்ஸிவியரன்ஸ் பயணத்தின் தொடக்கம் முதல் அது வெற்றிகரமாகச் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கும் வரை அனைத்திற்கும் பொறுப்பு. இந்தியாவில் பிறந்த ஸ்வாதிக்கு ஒரு வயதிருக்கும்போதே குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. சிறுவயதில் ‘ஸ்டார் ட்ரெக்’ தொடர் பார்த்து விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டதாகச் சொல்லும் இவர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். அதன்பின் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பிரிவில் முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாசாவின் ‘மார்ஸ் 2020’ திட்டத்தில் வேலை பார்த்து வரும் இவர், செவ்வாயில் பெர்ஸிவியரன்ஸ் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கட்டுப்பாட்டு அறையில் சிவப்புப் பொட்டுடன் அறிவிக்கும் வீடியோ இணையத்தில் செம வைரல்!