Published:Updated:

ராணி மங்கம்மாள், சோழமன்னன் காலத்தில் தொடங்கிய 'காவிரி'ப்போர் ! - ஒரு வரலாற்றுப் பார்வை !

ராணி மங்கம்மாள், சோழமன்னன் காலத்தில் தொடங்கிய  'காவிரி'ப்போர் ! - ஒரு வரலாற்றுப் பார்வை !
ராணி மங்கம்மாள், சோழமன்னன் காலத்தில் தொடங்கிய 'காவிரி'ப்போர் ! - ஒரு வரலாற்றுப் பார்வை !

ராணி மங்கம்மாள், சோழமன்னன் காலத்தில் தொடங்கிய 'காவிரி'ப்போர் ! - ஒரு வரலாற்றுப் பார்வை !

திகள், ஆறுகள், ஏரிகள் எத்தனை இருந்தாலும் குறையாத நிலையில் இருக்கிறது, தண்ணீர் பஞ்சமும், நீருக்கான பஞ்சாயத்தும் !
சிந்து ( 3,200 கிமீ), பிரம்மபுத்திரா ( 2,900 கிமீ), கங்கை ( 2,510 கிமீ), கோதாவரி ( 1,465 கிமீ), யமுனா (1,376 கிமீ), நர்மதா (1.312 கிமீ), கிருஷ்ணா (1,300 கிமீ), மகாநதி( 858 கிமீ), ஜீலம் ( 813 கிமீ) சம்பல் (960 கிமீ), காவிரி ( 765 கிமீ), துங்கபத்ரா ( 531 கிமீ) ,சபர்மதி (371 கிமீ) சாத்தியமாகுமா தேசிய நதிநீர் இணைப்பு என்ற கேள்வி அன்பையும், சகோதரத்துவத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு உள்ளத்திலும் எழும் கேள்வி.

தனிநபரின் தண்ணீர்த்தேவை:

இந்தியாவின் தனிநபர் ஒருவருக்கான நீர் கிடைப்பு, 1951- ஆம் ஆண்டில், 15,531 கன அடியாக இருந்தது. அதுவே, 2011-ஆம் ஆண்டில், 4,635 கன அடியாக, சரிந்தது. 2025-ஆம் ஆண்டில், அது, 4,020 கன அடியாகவும், 2050-ம் ஆண்டில், அதுவே 2,850 கன அடியாகவும் குறையும் என, புள்ளி விவர குறிப்புகள் எச்சரிக்கின்றன.

மழைக் காலத்துக்குப் பின்னர் ஏற்படும் குடி நீர் தட்டுப் பாட்டைத் தீர்க்கவோ, இருக்கிற நீரை சேமித்து வைக்கவோ எந்த ஆய்வோ, முன் முயற்சியோ இதுவரையில் எடுக்கப் படவில்லை.

நம்முடைய நீர் பலவீனம் குறித்து சொல்லப் படும் ஒரு கணக்கைப் பார்ப்போம். "அமெரிக்காவில் தனிநபர் ஒருவருக்கான நீர்த்தேக்க வசதியின் அளவு, 15 ஆயிரம் கன அடி என்ற கணக்கில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது. நடுத்தர வருவாய் கொண்டிருக்கும் சீனா, மெக்சிகோ போன்ற நாடுகளில், அந்தத் தொட்டி 3,000 கன அடி நீரைக் கொள்ளுமளவு வைக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் நீர் தேக்க கொள்ளளவு தனி நபர் ஒருவருக்கு, 600 கன அடி மட்டுமே" இதுதான் நம்முடைய நிலை. தனிநபர் தேவைக்கான நீர்க் கொள்ளளவை, உயர்த்துவது எப்படி என்பது, மிகப்பெரிய சவாலாக தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

வீணாகும் நீராதாரங்கள்

பெரிய ஆற்றுப் பாசனங்கள் 17, பெரிய மற்றும் சிறிய நீர் பாசன அணைகள் 61, கண்மாய்கள் 41,948, இவைகள் தவிர ஆயிரங்களில் ஏரிகள், குளங்கள் என கணக்கில் இருந்தும் குடிக்க நீரின்றி வீதிகளில் தமிழக மக்கள் அலையும் நாட்கள் வெகு அருகில் வந்துள்ளதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை.

மஹாராஷ்டிராவில் உற்பத்தியாகி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை வளம் கொழிக்க வைக்கும் கோதாவரி நதி 1,465 கிலோ மீட்டர் ஓடி, பின் வங்கக் கடலில் கலக்கிறது. இந்தியாவில் கங்கைக்கு அடுத்து 2-வது நீளமான நதி கோதாவரிதான். கோதாவரி ஆற்றில்தான் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று வீணாகிறது. அதே போன்று, கிருஷ்ணா நதி மகாராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது.

காவிரியின் கதை என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய 'குடகு' தான் காவிரி உற்பத்தியாகும் இடம். மலைகளும், காடுகளும், பச்சையம் விரித்த படுக்கையுமாய் அத்தனை அழகு இந்த குடகு.மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள 'குடகு' மலைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழியின் பெயர் "துளு" . இம்மொழியின் மூலம் தமிழ். இதிலிருந்தே, திராவிட இனத்தின் நீட்சியும், மிச்ச சொச்சமும் கர்நாடகத்தின் வேர்களில், உயிர்- நீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதை உணர முடியும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தனி சமஸ்தானமாக இருந்து வந்த குடகு, (இப்போதும் அப்படியே இருந்திருந்தால் காவிரிக்காக கர்நாடகமும் 'குடகு' சமஸ்தானத்திடம்தான் பேச்சு வார்த்தைக்கு போக வேண்டி இருந்திருக்கும்) 1956- ஆம் ஆண்டில் மொழிவாரி மாநில பிரிப்பின் போது, கர்நாடகத்தில் இணைக்கப்பட்டது.


கர்நாடகாவில் 350 கி.மீ. தூரமும், தமிழகம், புதுவையில் 450 கி.மீ தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிற காவிரியின் மொத்த பயண தூரம் 800 கிலோ மீட்டர். கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீரோ, கபினி நதி மூலமாக காவிரியில் கலக்கிறது.
தமிழக நிலப்பரப்பில், காவிரிக்கு 34 சதவீதம் !

கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி என நான்கு மாநிலங்களுக்கும் காவிரி சமவெளி மாநிலம்தான். இதனால்தான் கிபி. 2- ஆம் நூற்றாண்டில் காவிரி மீது கல்லணையை கரிகாலன் கட்டி வைத்தான். தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதமும் காவிரி சமவெளி யில்தான் இருக்கிறது.

காவிரிக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும் கர்நாடகாவில் காவிரியின் நிலப்பரப்பு 18 சதவீதம் மட்டும்தான். கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பு காவிரி சமவெளியில் கலந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாகத்தான் விளைகிறது.
 

கி.பி. 11- ஆம் நூற்றாண்டிலேயே காவிரிப்போர்:

கி.பி. 11- மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் மைசூர் சமஸ்தான அரசர்கள் காவிரியை தடுத்து அணைகட்ட முயன்றதும், இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று அந்த ஏற்பாடுகளை (தடுப்புகளை) தடுத்ததும் வரலாறு. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பேரரசி ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் காவிரியைக் காக்கச் சென்ற போது, திடீரென்று ஏற்பட்ட பெரு மழையால் அணை தானே உடைந்து ஓடியதால் போர் இல்லாமலே தடுப்பணை தகர்ந்ததாக வரலாறு சொல்கிறது.

18-ம் நூற்றாண்டு பஞ்சத்தால் வந்த ஒப்பந்தம்

மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் 1867-லும், 1877-ல் சென்னை மதராஸ் பட்டினத்திலும் ஏற்பட்ட பஞ்சத்தில் ஏராளமான மக்கள் இறந்தனர். இதை தடுத்து பயிர்களை காக்கத்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள மேட்டூர் அணையும் கட்டப்பட்டது.

ஆக, பஞ்சத்தின் அடையாளமாகவும், இனி இப்படிக் கொத்துக் கொத்தாக மக்கள் இறக்கக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையிலும்தான் 1892- 1924-ஆம் ஆண்டில் காவிரி நீர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கர்நாடகாவுக்கு, கிருஷ்ணா கொடுப்பது அதிகம்

தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி ஒன்றுதான் பெரியநதி. கர்நாடகாவில் காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம் கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. 'கிருஷ்ணா' மூலம் மட்டுமே காவிரியில் உற்பத்தியாகும் நீரைவிட 63 டிஎம்சி அதிகமான கணக்கைக் கொண்ட 734 டி.எம்சி. தண்ணீர், ஆண்டொன்றுக்கு கர்நாடகாவிற்கு கிடைக்கிறது.

" மைசூர் மகராஜ சமஸ்தானத்துடன் நீங்கள் வைத்துக் கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது" என்று கூறி காவிரியின் உப-நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறது கர்நாடகா.

தலைக்காவிரியின் உயரம், 4,400 அடி:

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இடுப்புப் பகுதியின் பெரும்பான்மை கர்நாடகாவுக்குள் இருக்கிறது. மைய இடுப்பில் 4,400 அடி உயரத்தில்தான் பெருக்கெடுக்கிறது, தலைக்காவிரி. குடகு, ஹாசன், மைசூர் , மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவ ட்டங்கள் வழியாக குடகிலிருந்து பெருகி காவிரி ஓடுகிறது.

துணை நதிகளால் பலம்பெறும் காவிரி

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சு மண தீர்த்தம், கபினி, சுவர்ண வதி போன்ற துணை நதிகளும் காவிரியுடன் வந்து கலப்பதால், கடலே வெட்குமளவிற்கு காவிரி தன்னுடைய பிரமாண்டத்தைக் கொடுக்கிறது.

காவிரியின் வேகமும், திரளான நீர்ப்பரவலும். சிம்ஷா, அர்க்காவதி ஆகிய ஆறுகளும் இவைகளோடு இணைகிற சூழலும் இயற்கையாகவே அமைந்து விட்ட நீர் வழிப் பாதைகள் என்பதால் பிரமாண்டத்தின் விசிட்டிங் கார்டாக பல மாநிலங்களில் எல்லைகளில் நுழைந்தும், வளைந்தும் காவிரியின் கம்பீரம் பசுமைக்கு உத்திரவாதமானது.
 

காவிரி மீதான அணைகள்

தமிழகத்தின் மேட்டூருக்கு கீழாக தெற்கு நோக்கி திரும்பும் காவிரியுடன் பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகள் கலப்பும் காவிரியை மேலும் அடர்த்தியாக்குகிறது. மேட்டூர் அணை, கிருஷ்ணராஜசாகர் அணை, கல்லணை, மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்ட தடுப்பணைகளே என்பதை அறியும் போது தேசத்தின் நீர்ச் சொத்து, காவிரியின் ஆளுமை பளிச்சென புரிந்து விடும்.
 

மனிதமனங்களே தீர்ப்பெழுதட்டும் !

சட்டங்களும், திட்டங்களும் ஆயிரமாயிரம் வகுத்துக் கொடுத்தாலும் மனித மனங்களில் சமத்துவமும், பொதுவுடமையும் பூக்காதவரையில் காவிரி போன்ற இயற்கையில் அமைந்த தேசிய சொத்துக்கள் தனி மாநில சொத்தாகத்தான் இருக்கும். தகராறுகள் தீரா, தாகமும் தீரா, பஞ்சமும் தீரா, பகைமை நிரந்தரமே என்ற முத்திரையும் மாறா....!


ந.பா.சேதுராமன்

அடுத்த கட்டுரைக்கு