Published:Updated:

வடமாவட்டங்களில் கனமழை - வர்தா புயல் அப்டேட்ஸ்

Vikatan Correspondent
வடமாவட்டங்களில் கனமழை - வர்தா புயல் அப்டேட்ஸ்
வடமாவட்டங்களில் கனமழை - வர்தா புயல் அப்டேட்ஸ்
வடமாவட்டங்களில் கனமழை - வர்தா புயல் அப்டேட்ஸ்

வர்தா புயல் அதிதீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் கனமழை உறுதி என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகப்படியாக 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 36 மணிநேரம் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வர்தா புயல் தொடர்பாக, உதவிக்கு எண்களை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. 

044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570. வாட்ஸ் அப் எண்கள் 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 99445477205.

மின்னஞ்சல் முகவரி gccdm1@chennaicorporation.gov.in, gccdm2@chennaicorporation.gov.in, gccdm3@chennaicorporation.gov.in, gccdm4@chennaicorporation.gov.in, gccdm5@chennaicorporation.gov.in, இவைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 1070 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

வர்தா புயல் காரணமாக சென்னையில் நாளை(திங்கட் கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி சென்னையில் இருந்து 480 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது அதி தீவிர புயலான வர்தா. சென்னை அருகே நாளை வர்தா புயல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.  தமிழகத்தின் வடமாவட்டங்களில் வர்தா புயலால் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். சென்னையை நெருங்கிய மிகப்பெரிய புயல்களில் வர்தாவும் ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது. 

தெற்கு ஆந்திரா - சென்னை இடையே நாளை கரையை கடக்க உள்ள வர்தா புயலால், இன்று மாலை முதல் மிக பலத்த மழை பெய்யும் எனவும் தேவையான உணவு மற்றும் குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு சென்னை வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல். மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான உணவுகள், மருந்துகள் அனைத்தும் கப்பலில் தயாராக உள்ளன. மேலும், ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள், மீட்பு உபகரணங்களும் தயார்.