Published:Updated:

வர்தா புயல் பணிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Vikatan Correspondent
வர்தா புயல் பணிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
வர்தா புயல் பணிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வர்தா புயல் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புயல் தொடர்பான பணிகளை கண்காணிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாக பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ராணுவம், கப்பல்படை, விமானப்படை ஆகியவைகள் உயர் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவைப்படும் நேரத்தில் அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். பலத்த காற்று வீசும் போது மரம் விழுதல், மின் கம்பிகள் அறுந்து விழுதல் மற்றும் சாலைகளில் தேங்கும் தண்ணீர்களை வெளியேற்ற பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவைப்படும் மருந்துகள், சுகாதார ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் உள்ளிட்ட கருவிகளை பாதுகாப்பாக வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வர்தா புயல் பணிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

மக்களுக்கு பால் வினியோகத்தை தட்டுப்பாடின்றி வழங்க ஆவினுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே போல் பொது மக்கள் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், கனமழை பெய்யும் நேரத்தில் வெளியில் வர வேண்டாம். உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மழை பெய்யும் போது இருசக்கர வாகனம் மற்று கார் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். ஆபத்தான நேரத்தில் மக்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும், மின்சார வாரியம், போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறையினரும் தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்"என கூறப்பட்டுள்ளது.