Published:Updated:

திறமைகளின் தேசம்! - 75

இந்தியா

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைச் சொந்தமாக உருவாக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

திறமைகளின் தேசம்! - 75

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைச் சொந்தமாக உருவாக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

Published:Updated:
இந்தியா

ஜனநாயகம் தழைக்கும் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா இளம் தேசம். 75-வது சுதந்திர தினத்துக்கான கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கும் நம் இளம் தேசம் பல விஷயங்களில் மகத்தான சாதனைகள் செய்திருக்கிறது. நாம் நினைத்து நினைத்துப் பெருமிதப்பட வேண்டிய அந்த சாதனைகளின் ஒரு துளி இங்கே...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. அமெரிக்கா சுதந்திரம் பெற்றபிறகு அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க 150 ஆண்டுகள் ஆனது. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலிலேயே எல்லோருக்கும் வாக்குரிமை வந்துவிட்டது.

2. பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் போனது. சீனாவோ ஒற்றைக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவசரநிலை கால கறுப்பு வரலாற்றைத் தாண்டி, உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக தழைத்து நிற்கிறது இந்தியா.

3. உலகின் மிக நீளமான அரசியல் சட்டம் இந்தியாவுடையது. தேவைப்படும் இறுக்கமும், அவசியமான நெகிழ்வுத்தன்மையும் கொண்டது இது.

4. உலகின் மிக உயரமான எல்லைப் பிரதேசம் எனக் கருதப்படும் சியாச்சின் மலையை இந்திய ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

5. 1974-ம் ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை செய்து, உலகின் ஐந்து அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துவிட்டது.

6. கிழக்கு பாகிஸ்தானில் அரச வன்முறை நிகழ்ந்தபோது இந்தியா தலையிட்டு வங்க தேசம் என்ற நாடு உருவாகக் காரணமானது.

7. இந்தியா - பாகிஸ்தான் போரின்போது 80,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். உலகின் மிகப்பெரிய ராணுவ வெற்றி இது.

8. கார்கில் பகுதியில் 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியபோது நம் ராணுவம் தீரத்துடன் போரிட்டு வெற்றி அடைந்தது. உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் நிகழ்ந்த போர் இது.

9. மியான்மர் காடுகளில் பதுங்கியிருந்து இந்தியா மீது தாக்குதல் தொடுத்த போராளிக் குழுக்களை அங்கே சென்று தாக்கி அழித்தது இந்திய ராணுவம். இதேபோன்ற சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை பாகிஸ்தானுக்குள் சென்றும் நடத்தியிருக்கிறது நம் ராணுவம்.

10. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைச் சொந்தமாக உருவாக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2009-ம் ஆண்டு இந்தியா உருவாக்கிய ஐ.என்.எஸ் அரிஹந்த் அப்படிப்பட்டது. 3,500 கி.மீ தூரம் வரை தாக்கும் ஏவுகணைகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

11. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டனுடன், விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களை உருவாக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது இந்தியா. ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் இந்த மாதம் பரிசோதனைப் பயணம் செய்கிறது.

12. அதே ஐந்து நாடுகளுடன், ஏவுகணை வல்லமை பெற்ற ஆறாவது நாடாக இணைந்திருக்கிறது இந்தியா. 2006-ம் ஆண்டில் நாம் உருவாக்கிய பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, மணிக்கு 3,675 கி.மீ தூரம் பயணிக்கும் வல்லமை பெற்றது.

13. குறைந்த எடையுள்ள போர் விமானங்களைச் சொந்தமாக உருவாக்கும் திறனை இந்தியா பெற்றுவிட்டது. இந்த தேஜாஸ் விமானங்கள் 2019-ம் ஆண்டு விமானப்படையில் இணைக்க ஒப்புதல் பெற்றுவிட்டன.

14. விண்ணில் சுற்றி நம்மை உளவுபார்க்கும் செயற்கைக்கோள்களை ஏவுகணைகளால் தாக்கி அழிக்கும் வல்லமையை நாம் பெற்றுவிட்டோம். `மிஷன் சக்தி' என்ற இந்தத் திட்டம் 2019-ல் வெற்றியடைந்தது.

15. ராணுவச் சேவையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களையும் நாம் இணைத்திருக்கிறோம். போர் விமானங்களையே பெண்கள் இயக்குகிறார்கள்.

16. கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் இந்தியா வென்றது. ஒட்டுமொத்த தேசத்திலும் விளையாட்டைத் தாண்டியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வெற்றி இது. சாமானியர்களுக்கு நம்பிக்கையாய் விளங்கியது. சச்சின்களை, டிராவிட்களை பேட் பிடிக்க வைத்தது.

திறமைகளின் தேசம்! - 75

17. சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த முதல் வீரரானார். 80’ஸ் கிட்கள் முதல் 2k கிட்ஸ்வரை கிரிக்கெட் மீதான காதலைக் கடத்தி வந்த அந்த ஒற்றைப் புள்ளி - சச்சின் டெண்டுல்கர்.

18. விஸ்வநாதன் ஆனந்த் 2000-ம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றார். மாஸ்கோவில் குடிகொண்டிருந்த சதுரங்கக் கடவுள்களை மெட்ராஸுக்கு இடம்பெயரச் செய்தார் ஆனந்த். பல கிராண்ட் மாஸ்டர்களை இந்தியா உருவாக்க, ஆனந்த் விதையாக இருந்தார்.

19. பேட்மின்டனில் 1980-ம் ஆண்டு பிரகாஷ் படுகோன் `ஆல் இங்கிலாந்து' பதக்கம் வென்றார். சீன, இந்தோனேஷிய, டென்மார்க் வீரர்களின் ஆதிக்கத்தை உடைக்க முடியும் என்ற நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு அது கொடுத்தது. சிந்துவும் சாய்னாவும் பேட்மின்டனில் 3 ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்ல அது காரணமானது.

20. ஒலிம்பிக்கில் வெண்கலமே கனவாக இருந்தபோது, அபினவ் பிந்த்ரா 2008-ம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்று மொத்த தேசத்தையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இன்று பல இளம் வீரர்கள் ஒலிம்பிக் அரங்கில் நிற்பதற்கு பிந்த்ராவின் தோட்டா முக்கிய காரணம்.

21. இந்தியா அரங்கேற்றிய மிகப்பெரிய விளையாட்டுத் தொடர், 2010 காமன்வெல்த் போட்டிகள். ஒரு மிகப்பெரிய தொடரில் சொந்த மண்ணில் நெருக்கடியை வென்று சாதித்தது, 2012 ஒலிம்பிக்கில் இந்தியர்கள் சிறப்பாகச் செயல்பட உதவியது.

22. ஃபிஃபா அண்டர் 17 கால்பந்து உலகக் கோப்பையை 2017-ம் ஆண்டு இந்தியா நடத்தியது. இது கால்பந்தின் அவசியத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது. ஜேடன் சான்சோ, ஃபில் ஃபோடன் போன்ற ஜாம்பவான்கள் இந்தியாவில்தான் தங்களை முதல்முறையாக நிரூபித்தார்கள்.

23. ரிலையன்ஸின் வருகை - தனியார்மயத்தால் இந்திய விளையாட்டின் முகம் மாறியுள்ளது. ஐ.எஸ்.எல், புரோ கபடி, புரோ வாலிபால் போன்ற தொடர்கள் இளம் வீரர்களை அடையாளம் காண உதவின. ரிலையன்ஸ் - ஐ.எம்.ஜி கூட்டணியின் `கேலோ இந்தியா' திட்டம், பள்ளி அளவிலேயே வீரர்களை அடையாளம் காணும் புதுமை முயற்சி.

24. இந்திய ஹாக்கி அணி டோக்கியோவில் வென்ற வெண்கலம், இந்திய ஹாக்கியின் அழிவைத் தடுக்கவும், அதன் பெருமையை மீட்கவும் உதவும்.

25. தடகளத்தில் இந்தியா வென்றிருக்கும் முதல் தங்கப்பதக்கம், நீரஜ் சோப்ராவின் ஈட்டி முனையால் கிடைத்தது. இன்னும் பல நம்பிக்கைகளுக்கு முதல் புள்ளி இது.

திறமைகளின் தேசம்! - 75

26. கல்வியறிவில் கடைசி வரிசையில் இருந்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பிறகு செய்தது அசுரப் பாய்ச்சல். 1989-ம் ஆண்டு கேரளாவின் கோட்டயம், முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டம் ஆனது. இன்று உலகின் பெருநிறுவனங்களை நிர்வாகம் செய்கிறார்கள் இந்தியர்கள்.

27. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கிராமப்புற மக்களுக்கு ஆண்டில் 100 நாள் வேலையை உறுதி செய்தது. வறுமையும் பசியும் நீங்குவதற்கான ஆதாரமாக இது இருந்தது.

28. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழலை எளியவர்களும் கேள்வி கேட்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

29. கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டாய இலவசக் கல்வியை ஏழைக் குழந்தைகளுக்கும் சாத்தியமாக்கிய நடைமுறை இது.

30. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-ம் ஆண்டு அமலானது. மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் இந்தத் திட்டம், வறிய குடும்பங்களின் பசி நோயைப் போக்கி உணவு உரிமையை வழங்கியது.

31. இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்று விண்ணில் ஏவப்பட்டது. இன்று விண்வெளியை வசப்படுத்திய டாப் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

32. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் சென்று நிலைநிறுத்தியது இந்தியா. 2017-ம் ஆண்டு செய்யப்பட்ட உலக சாதனை இது.

33. நிலவுக்கு சந்திரயான் 1 விண்கலத்தை 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக ஏவியது இந்தியா. நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் கண்டறிந்தது.

34. செவ்வாய் கிரகத்தை எட்ட மங்கள்யான் விண்கலத்தை 2013-ம் ஆண்டு இந்தியா ஏவியது. 2014 செப்டம்பரில் இது செவ்வாயை அடைந்தது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு அடுத்து செவ்வாயை எட்டிய நாடானது இந்தியா. முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தது இந்தியா மட்டுமே!

35. சந்திரயான் 2 விண்கலத்தின் ரோவர் நிலவில் இறங்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும், அந்த விண்கலம் இன்னமும் நிலவை ஆராய்ந்துகொண்டிருக்கிறது.

36. அமெரிக்கா உருவாக்கி வைத்திருக்கும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துக்கு இணையாக NAVIC (Navigation with Indian Constellation) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது ஜி.பி.எஸ்-ஸைவிடத் துல்லியமானது.

37. அமைதிக்கான நோபல் பரிசை இந்தியா இரண்டு முறை வென்றிருக்கிறது. அன்னை தெரசாவும் கைலாஷ் சத்யார்த்தியும் அந்தப் பெருமைக்குரியவர்கள்.

38. அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி இருவரும் இந்தியப் பொருளாதார ஞானத்தின் அடையாளங்களாக நோபல் வென்றார்கள்.

திறமைகளின் தேசம்! - 75

39. இந்தியா 21 மொழிகளில் திரைப்படங்களை உருவாக்குகிறது. இவ்வளவு மொழிகளில் படங்கள் உருவாகும் நாடு இதுதான்.

40. உலகிலேயே அதிக திரைப்படங்கள் இந்தியாவில்தான் வெளியாகின்றன.

41. இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருதை வென்றவர் ஒரு பெண். `காந்தி' படத்தின் ஆடை வடிவமைப்புக்காக பானு அத்தையா வென்றார்.

42. தன் வாழ்நாள் முழுக்க ஏராளமான தேசிய விருதுகளை வென்ற சத்யஜித் ரே, சினிமா சாதனைகளுக்காக கௌரவ ஆஸ்கர் விருது பெற்றார்.

43. இந்தியாவின் ஆஸ்கர் ஏக்கத்தைத் தீர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். `ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இரட்டை ஆஸ்கர் வென்றார். ஒலிக்கோப்புக்காக ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் வென்றார்.

44. இலக்கியத்துக்காக புக்கர் பரிசை முதலில் வாங்கிப் பெருமை சேர்த்தவர்கள் இரண்டு பெண்கள். அருந்ததி ராய் தன் முதல் நாவலுக்காக 1997-ல் வாங்கினார். கிரண் தேசாய் 2006-ல் வாங்கினார். அதன்பின் அரவிந்த் அடிகா 2008-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வென்றார்.

45. பாலுக்காக ஏங்கிய இந்தியாவை, டாக்டர் வர்கீஸ் குரியன் ஏற்படுத்திய வெண்மைப் புரட்சி, உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றியது.

46. அதிக விளைச்சல் தரும் பயிர்கள், உரங்கள், பாசன வசதிகள் எனப் பசுமைப் புரட்சியே இந்திய விவசாயத்தின் முகத்தை மாற்றியது. சர்ச்சைகள் இருந்தாலும், இதுவே பட்டினிச் சாவுகளைத் தடுத்தது.

47. இந்தியாவிலேயே 100% இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக சிக்கிம் மாறியிருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு இது ரோல்மாடல்.

48. சட்லெஜ் நதியில் கட்டப்பட்டிருக்கும் பக்ரா அணை, முழுவதும் கான்க்ரீட்டில் கட்டப்பட்ட உலகின் பெரிய அணைகளில் ஒன்று.

49. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் இருக்கும் நாடு இந்தியா. காஷ்மீரின் தால் ஏரியில் படகு ஒன்றில் மிதக்கும் தபால் நிலையமும் செயல்படுகிறது.

50. 1,19,630 கி.மீ நீளப்பாதை, 7,216 ரயில் நிலையங்கள் என உலகின் பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் இந்திய ரயில்வேயும் ஒன்று.

51. இந்தியாவில் அதிகம் பேர் பணிபுரியும் நிறுவனம், இந்திய ரயில்வே. 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணி செய்கிறார்கள்.

52. ஈஃபிள் டவரைவிட 35 மீட்டர் உயரமாக இருக்கும் செனாப் பாலம், உலகின் அதி உயர ரயில் பாலம். செனாப் நதிக்கு மேலே 1,178 அடி உயரத்தில் இது இருக்கிறது.

53. அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் சாலைகள் இருப்பது இந்தியாவில்தான். 19 லட்சம் மைல் நீளத்துக்குச் சாலைகள் உள்ளன.

54. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு நகரங்களையும் இணைக்கும் 5,846 நீள தங்க நாற்கரச் சாலைப் பணி 2012-ம் ஆண்டு முடிந்தது. நம் பயணத்தை இது எளிதாக்குகிறது.

55. லடாக் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் இருக்கும் சாலையே, உலகின் மிக உயரமான இடத்தில் வாகனங்கள் பயணிக்கும் சாலை.

56. இமயமலையில் டிராஸ் மற்றும் சுரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ள பெய்லி பாலம், உலகின் மிக உயரமான பகுதியில் இருக்கும் பாலம். இந்திய ராணுவம் இதைக் கட்டியது.

57. மும்பையில் பாந்த்ரா மற்றும் வோர்லி பகுதிகளை இணைக்க கடல்மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்திய இரும்புக் கம்பிகளைப் பிணைத்தால், இந்த பூமியை ஒரு சுற்றுச் சுற்றிவிடலாம்.

58. குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த 1990-ம் ஆண்டில் 1,75,000 இந்தியர்களை அங்கிருந்து காப்பாற்றி விமானத்தில் அழைத்து வந்தது இந்தியா. உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை இது.

59. உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற விருதை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் 2015-ம் ஆண்டு பெற்றது.

60. மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் ஆயுத சோதனைக்கும் உதவும் நியூக்ளியர் ரீயாக்டரை ஆசியாவிலேயே முதலாவதாக 1956-ம் ஆண்டில் இந்தியா உருவாக்கியது. அப்சரா என்ற பெயருள்ள அது இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.

61. 1953-ம் ஆண்டே சிறிய அனலாக் கம்ப்யூட்டர் ஒன்றை இந்தியா உருவாக்கிவிட்டது. 1955-ல் HEC 2M என்ற கம்ப்யூட்டர் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது.

62. `பரம்' என்ற வரிசையில் அதிவேகமுள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

63. உலகில் இணையத்தை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். ஐ.டி தொழிலிலும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

64. 2004-ம் ஆண்டில் சுனாமி இந்தியாவைத் தாக்கியபோது, `அந்நிய உதவிகள் தேவையில்லை' என இந்தியா மறுத்தது. பேரிடர்க் காலங்களில் நிவாரணப் பணிகளைச் செய்ய மேற்கு உலகின் உதவி இப்போது நமக்குத் தேவைப்படுவதில்லை.

65. ஐ.நா அமைதி காக்கும் படையில் இணைந்து உலகெங்கும் கலவரப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது.

66. போலியோவை முற்றிலுமாக ஒழித்த நாடுகளின் பட்டியலில் 2014-ம் ஆண்டு இந்தியா இணைந்தது.

67. பெரிய தனியார் வங்கிகளை 1969-ம் ஆண்டு தேசியமயமாக்கியது இந்தியா. கிராமங்களிலும் வங்கிகள் வருவதற்கு இந்த நடவடிக்கை காரணமானது.

68. பொருளாதார தாராளமயமாக்கலை 91-ம் ஆண்டு அனுமதித்தது இந்தியா. இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தி இந்தியா.

69. சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ரஷ்யாவுக்கு அடுத்து அமெரிக்க டாலரில் அதிக அந்நியச் செலாவணி வைத்திருக்கும் ஐந்தாவது நாடு இந்தியா.

70. உலகிலேயே மிக வேகமாக வர்த்தகம் நடைபெறுவது மும்பைப் பங்குச்சந்தையில்தான்.

71. பிரம்மபுத்திரா நதிப்பகுதியில் இருக்கும் மஜுலி தீவு, தனி மாவட்டம் ஆகியுள்ளது. இது உலகின் முதல் தீவு மாவட்டம்.

72. மேகாலயாவின் மேசின்ராம் பகுதி, உலகிலேயே அதிக மழைப்பொழிவு பெறும் பகுதி. ஆண்டுக்கு 11,873 மி.மீ மழை பெய்கிறது.

73. குடும்ப அமைப்பு பெருமைப்படுத்தப்படுவது இந்தியப் பண்பாட்டில்தான். 181 பேர் கொண்ட உலகின் பெரிய குடும்பம், மிசோரம் மாநிலத்தின் பக்தாங் கிராமத்தில் வசிக்கிறது.

74. புலிகளைக் காக்க `புராஜெக்ட் டைகர்' திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது. தேசிய சரணாலயங்களை அமைத்து, புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

75. பொதுநல வழக்கு என்ற ஆயுதத்தை எளிய இந்தியர்களின் கையில் 1979-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்தது. நீதி தேவதையின் கரங்களை எந்தப் பிரச்னைக்கும் எவரும் இறுகப் பற்ற முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.