Published:Updated:

தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அ.ம.மு.க பதிவு! #NowAtVikatan

07-12-2019 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

தினகரன்
தினகரன்
07 Dec 2019 8 PM

தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அ.ம.மு.க பதிவு!

தினகரன்
தினகரன்

தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அ.ம.மு.க பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து செந்தூர்பாண்டியன், ``தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அ.ம.மு.க பதிவு பதிவு செய்யப்பட்டது. அ.ம.மு.க பொதுச்செயலாளராக தினகரன் இருப்பார். அ.ம.மு.க பதிவு செய்யப்பட்ட விவரங்களை நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் வெளியிடும்" என்றார்.

07 Dec 2019 6 PM

நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறுவழியில்லை!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது கண்டனத்திற்குரியது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தவில்லை. உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறுவழியில்லை. அ.தி.மு.க அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையம் மாறியுள்ளது ” என ஸ்டாலின் கூறியுள்ளார்.

07 Dec 2019 6 PM

தெற்காசிய போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம்!

காமன்வெல்த் போட்டியில் அனுராதா தங்கம் வென்றபோது
காமன்வெல்த் போட்டியில் அனுராதா தங்கம் வென்றபோது

நேபாளத்தில் நடந்து வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கம் வென்றுள்ளார். 87 கிலோ பளுதூக்கும் பிரிவில் அனுராதா கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த வீராங்கனை அனுராதா ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். இவர் போலீஸ் எஸ்.ஐ என்பது குறிப்பிடத்தக்கது.

07 Dec 2019 5 PM

உள்ளாட்சித் தேர்தல் புதிய அறிவிப்பாணை வெளியானது!

புதிய அறிவிப்பாணை
புதிய அறிவிப்பாணை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி முதல் நடைபெறும். டிசம்பர் 17 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை. வேட்பு மனுக்களை திரும்ப பெற 19 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அறிவிப்பில் இட ஒதுக்கீடுகள் முறையாக, முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

07 Dec 2019 4 PM

`தர்பார்' ஆடியோ லாஞ்ச்!

ரஜினிகாந்த் நடித்துள்ள `தர்பார்' படத்தில் ஆடியோ லாஞ்ச் இன்று மாலை நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள விழாவுக்காக ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். அதன் புகைப்படத்தொகுப்பு

07 Dec 2019 4 PM

நயன்தாரா அறிக்கை!

நயன்தாரா
நயன்தாரா

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நமது கடமை. பெண்கள் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக, தீர்க்கமான பதில் அளித்துள்ளனர் போலீஸார். சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. நியாயமான மனிதநேய மிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்" என்று கூறியுள்ளார்.

சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன!

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு நேற்று மாநிலங்களவை சென்ற ப.சிதம்பரம் இன்று சென்னை வந்தார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய சிதம்பரம், ``பொருளாதார சூழலை பொறுத்தவரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது. பாஜகவை எதிர்ப்பதில் தென் மாநில மக்கள் விழிப்புடன் இருப்பது போல் நாடு முழுவதும் இருக்க வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது; சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள்; என் மன உறுதியை குலைக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.

07 Dec 2019 2 PM

தமிழ் ஆராய்ச்சி மையத்தில் இந்தி கற்பிக்கப்படமாட்டாது!

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் ஒரு உலக மொழி, ஒரு இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

07 Dec 2019 12 PM

உள்ளாட்சித் தேர்தல் புதிய அறிவிப்பாணை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகக் கடந்த 2ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பாணை இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை செய்தார். இந்தநிலையில், இன்று மாலை அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

07 Dec 2019 11 AM

மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் `ஆணி பிடுங்கும் திருவிழாவில்' டிக்டாக் அருண் | #Theni #SaveTrees

07 Dec 2019 11 AM

`இடியுடன் மின்னல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதேபோல், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் குமரிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

07 Dec 2019 9 AM

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதேபோல், தேர்தல் நடத்தும் அலுவலர்களையும் திரும்பப் பெறுவதாக தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம்தாழ்த்தி வந்தநிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கண்டிப்பு காட்டியது. இதையடுத்து, கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது தி.மு.க. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்தத் தடை விதித்தது. 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தத் தடை இல்லை என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

07 Dec 2019 8 AM

இது வெறும் தொடக்கம்தான்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கை, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.4 ஓவர்களில் இந்திய அணி எட்டியது. கேப்டன் கோலி 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

போட்டிக்குப் பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், ``எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், மோசமான பந்துவீச்சால் வெற்றியைப் பறிகொடுத்துவிட்டோம். இந்தப் போட்டியில், 23 எக்ஸ்ட்ராஸ்களை நாங்கள் கொடுத்தோம். அதில், 14-15 மட்டுமே வொய்டாக அமைந்தது. இது, பெரிய தொடர்; எதையும் இங்கு நாங்கள் இழந்துவிடவில்லை. இந்தப் போட்டியிலிருந்து நேர்மறையாகக் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களை நான் பார்க்கிறேன்'' என்றார்.

07 Dec 2019 8 AM

உன்னாவ் இளம்பெண் உயிரிழப்பு!

டெல்லி மருத்துவமனை
டெல்லி மருத்துவமனை
ANI

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், குற்றம் சாட்டப்பட்டவர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். அவர், 90 சதவிகித தீக்காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ``அவருக்கு எங்களால் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் செய்தோம். இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது'' என சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.