Published:Updated:

பிப்ரவரி 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்! #NowAtVikatan

NowAtVikatan
NowAtVikatan

07.02.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

07 Feb 2020 9 PM

பிப்ரவரி 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 14ல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாள் இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்கிறார்.

07 Feb 2020 7 PM

இளம் பெண்ணுக்கு அரசுப் பணி!

பிப்ரவரி 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்! #NowAtVikatan

கோவையில் அ.தி.மு.க கொடிகம்பம் விழுந்த விபத்தில் கால் அகற்றப்பட்ட இளம் பெண்ணிற்கு கிராம நிர்வாக உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. கோவை அவிநாசி சாலையில் 11-11-19 அன்று கோல்ட் வின்ஸ் பகுதியில் கொடிகம்பம் விழுந்த விபத்து ஏற்பட்டதில் படுகாயமடைந்த இளம் பெண் ராஜேஸ்வரி என்பவரது இடது கால் அகற்றப்பட்டது. இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு சங்கனூர் கிராமத்தில் கிராம உதவியாளராக பணி நியமன ஆணையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.

07 Feb 2020 5 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வில் சீர்திருத்தம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு முறைகேடுகள் விவகாரம் பூதாகரமான நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகள் முழுமையான நிறைவடைந்த பின்னர் தேர்வர்களின் அனைத்து விவரங்களும் இணையத்தில் வெளியிடப்படும். இனிவரும் காலங்களில் தேர்வர்கள் தங்களது விடைத்தாள்களை கட்டணம் செலுத்தி பெற முடியும்.

பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான கலந்தாய்வு நடைபெறும் நாளின் இறுதியில் துறை, மாவட்டம், இடஒதுக்கீடு மூலம் நிரப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியாகும். இந்த மூன்று மாற்றங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

07 Feb 2020 5 PM

பாஜக ஆர்ப்பாட்டம்!

என்.எல்.சி சுரங்கத்தில் நடந்து வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் பாஜகவினர் நடிகர் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம். அனுமதி வழங்கியது தவறு என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை ரெய்டு முடிந்த நிலையில் நடிகர் விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது அந்தப் பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

07 Feb 2020 2 PM

திருமாவளவன் மனு தள்ளுபடி! 

2016 -ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வின் முருகுமாறன் வெற்றிபெற்றார். அவர் வெற்றிபெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தற்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் முருகுமாறன் வெற்றி செல்லும்!

07 Feb 2020 11 AM

ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பதில் கால தாமதமாகி வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு, ஆளுநர் இந்த விவகாரத்தில் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

07 Feb 2020 11 AM

விஏஓ தேர்விலும் முறைகேடு? 

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தத் தேர்வு முறைகேடுகளை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இந்நிலையில், 2016 -ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி நடத்திய விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அது தொடர்பான ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீஸார் டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட்டுள்ளனர். 2016 முதல் 2019 வரையில் விஏஓ தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின் செல்ல