Published:Updated:

‘தோனி பாணியில் ஃபினிஷிங் செய்த கோலி’ - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி #INDvSL #NowAtVikatan

கோலி
கோலி

07.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 Jan 2020 10 PM

தோனி பாணியில் ஃபினிஷிங் செய்த கோலி!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடந்தது.இந்தத் தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தவான், பும்ரா அணிக்கு திரும்பியுள்ளனர். இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ஷ்ரதுல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

‘தோனி பாணியில் ஃபினிஷிங் செய்த கோலி’ - 7 விக்கெட் வித்தியாசத்தில்  இந்தியா வெற்றி #INDvSL #NowAtVikatan

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், தவான் நிதானமாக தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 45 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. கோலி சிக்ஸர் அடித்து தோனி பாணியில் போட்டியை தித்திப்பாக முடித்து வைத்தார்.

07 Jan 2020 8 PM

இந்திய அணிக்கு 143 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 142 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷ்ரதுல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த மூன்று விக்கெட்டுகளையும் அவர் ஒரே ஓவரில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

07 Jan 2020 6 PM

பும்ரா இஸ் பேக்... - இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் இந்தியா பந்துவீச்சு

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி-20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கார் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் 2-வது போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளார்.

07 Jan 2020 4 PM

நிர்பயா வழக்கு - ஜனவரி 22-ல் தூக்கு

நிர்பயா
நிர்பயா

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

07 Jan 2020 2 PM

உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரஜினியின் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ.23 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று மலேசிய நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.4.9 கோடி டெபாசிட் தொகை செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது. அதேநேரம் லைக்கா நிறுவனம் டெபாசிட் தொகையைச் செலுத்தினால் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

07 Jan 2020 1 PM

என்.ஆர்.சியை அ.தி.மு.க எதிர்க்கும்!

தமிழகத்தில் என்.ஆர்.சியைக் கொண்டுவந்தால் முதல் குரலாக அ.தி.மு.க எதிர்க்கும் என்று அமைச்சர் உதயகுமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமைச் சட்டம் தொடர்பான விவாதத்தின்போது ஸ்டாலின் கேள்விக்குப் பதிலளித்த ஆர்.பி உதயகுமார் இப்படி தெரிவித்தார். அஸ்ஸாமைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படவில்லை. ஒருவேளை தமிழகத்தில் என்.ஆர்.சி அமல்படுத்த நினைத்தால் அதை அ.தி.மு.க எதிர்க்கும் என்று உதயகுமார் பேசியுள்ளார்.

07 Jan 2020 1 PM

கூட்டத் தொடர் முழுவதும் ஜெ.அன்பழகன் பங்கேற்கத் தடை!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஒருமையில் பேசிய விவகாரத்தில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

07 Jan 2020 12 PM

10% இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு அறிவிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு தனது அதிகாரத்தின் கீழ் உள்ள துறைகளில் மட்டுமே பயன்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுத் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07 Jan 2020 12 PM

ஒருமையில் பேசிய ஜெ.அன்பழகன்?

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியை ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசியதாக சபாநாயகர் கண்டிப்பு தெரிவித்துள்ளார். விவாதத்தின்போது எஸ்.பி வேலுமணியை உட்கார் என்றும் ஒருமையில் ஜெ.அன்பழகன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து. அன்பழகனை அவையிலிருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டுவந்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

07 Jan 2020 9 AM

வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீஸ்!

ஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’ பகுதியில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். விடிய, விடிய நடந்த இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர். அதிகளவு மாணவர்கள் கூடிய நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களான அனுராக் காஷ்யாப், ஸ்வரா பாஸ்கர் ஆகியோரும் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

07 Jan 2020 9 AM

மோடி - ட்ரம்ப் பரஸ்பர வாழ்த்து!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைத் தொடர்புகொண்டு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், அமெரிக்க அதிபருக்குப் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு, தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும், கடந்த ஆண்டு, இருநாடுகளுக்கு இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு இருப்பதையும் பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் பேசியதாக கூறப்பட்டுள்ளது. பதிலுக்கு ட்ரம்ப் இந்திய மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

07 Jan 2020 9 AM

மறைமுக தேர்தல் மசோதா!

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தத் தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு