Published:Updated:

`ரிசல்ட் தகவல் போலியானது; தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை!’ - சி.பி.எஸ்.இ விளக்கம் #NowAtVikatan

சி.பி.எஸ்.இ விளக்கம்
சி.பி.எஸ்.இ விளக்கம்

9.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Jul 2020 9 PM

தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவு!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கேரள ஐ.டி துறையில் பணி செய்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வப்னா சுரேசுடன் நட்பில் இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கரன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னாவுக்கும் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதை சுங்கத்துறை இணை இயக்குனர் அனிஷ் ராஜன் மறுத்துள்ளார். தலைமறைவான ஸ்வப்னா சுரேஷையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்த பிரச்னை மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ``மத்திய அரசின் அனைத்து துறைகளையும் களத்தில் இறக்கி தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். தங்கம் கடத்தலின் தொடக்கம் முதல் அது எங்கு சென்று சேருகிறது என்பது வரை விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து ஒத்துழைப்பையும் கேரள அரசு வழங்கும்” என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகமானது இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 Jul 2020 5 PM

சி.பி.எஸ்.இ விளக்கம்

சி.பி.எஸ்.இ 12 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியாகும் தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதன்படி ஜூலை 11 மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும், ஜூலை 13-ம் தேதி மாலை 4 சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சிபிஎஸ்இ இந்தத் தகவலை மறுத்துள்ளது. `10-ம் வகுப்பு மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் 2020 அறிவிப்பு தொடர்பாக ஒரு போலி செய்தி பரப்பப்படுவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. வாரியம் இன்னும் முடிவு தேதிகளை அறிவிக்கவில்லை. சிபிஎஸ்இ அதிகாரபூர்வ வலைதளம் அல்லது சமூக ஊடக கணக்கில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்’ என சிபிஎஸ்இ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

09 Jul 2020 4 PM

நாளை முதல் விசாரணையைத் தொடங்குகிறது சி.பி.ஐ!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான கொலை வழக்கில் நாளை முதல் விசாரணையைத் தொடங்க இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

சாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் தாக்கியதாலேயே அவர்கள் மரணமடைந்தததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்
சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்

இதை ஏற்ற நீதிமன்றம், அதுவரை சிபிசிஐடி போலீஸார் வசம் விசாரணையை ஒப்படைத்தது. இந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

சிபிஐ
சிபிஐ

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றது. இந்தநிலையில், சாத்தான்குளம் வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை தொடங்குவது குறித்து சிபிஐயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சாத்தான்குளம் வழக்கில் நாளை முதல் விசாரணையைத் தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் பதில் தரப்பட்டது.

சாத்தான்குளம்: தலையில் உறைந்த ரத்தம்; மருத்துவச் சான்று! - அடுத்த சிக்கலில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ
09 Jul 2020 1 PM

கல்வியில் அரசியல் வேண்டாம்!

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவே சி.பி.எஸ்.இ பாடப்பிரிவுகள் நீக்கம் என்று கூறியுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், இதில் வேறு உள்நோக்கமில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்
மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ``நிபுணர்கள் ஆலோசனை, பரிந்துரைகளின்படியே சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கல்வியில் அரசியலைப் புகுத்துவதை விடுத்து, அரசியலில் அதிகக் கல்வியைப் புகுத்துவோம்’’ என்றார்.

சிபிஎஸ்இ: குடியுரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகள் பாடங்கள் நீக்கம்!
09 Jul 2020 1 PM

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், நாமக்கல், தேனி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 Jul 2020 1 PM

கிரண்பேடிக்கு கொரோனா நெகட்டிவ்!

கிரண் பேடி
கிரண் பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனாத் தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜ்நிவாஸ் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

அடுத்த கட்டுரைக்கு