Published:Updated:

`நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை அது நடக்காது!’ - இரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் #NowAtVikatan

8.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

ட்ரம்ப்
ட்ரம்ப்
08 Jan 2020 10 PM

நான் அமெரிக்க அதிவராக இருக்கும் வரை...!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இரானுடனான மோதல் குறித்து இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. `இராக்கில் இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை. அமெரிக்க படைத்தளத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளத்தில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரானின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அணுஆயுதங்களை வைத்திருக்க இரானை அனுமதிக்க முடியாது. பயங்கரவாதத்தை முன்னெடுப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. இரான் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இரானை அனைத்து நாடுகளும் தனிமை படுத்த வேண்டும். நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை இரான் அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க விரும்புகிறது’ என்றார்.

08 Jan 2020 11 AM

புதுச்சேரியில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் கைது!

தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தத்தின் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் 10 மையங்களில் நடைபெற்ற மறியலில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

புதுச்சேரி பேருந்துநிலையம்
புதுச்சேரி பேருந்துநிலையம்

புதுச்சேரியில் நடைபெற்றுவரும் முழுஅடைப்புப் போராட்டத்தையொட்டி, காமராஜர் சிலை அருகே ராஜா தியேட்டர் சிக்னலில் பேரணி மற்றும் சாலை மறியலில் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனால் காமராஜர் சாலை, அண்ணாசாலை, நேரு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

இதனிடையே, பேருந்து நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்படவே, மாற்றுப்பாதையில் அரசுப் பேருந்துகள் அனுப்பப்பட்டன. அரைமணி நேரமாக போராட்டம் நீடித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைதுசெய்தனர். இதேபோல் புதுச்சேரியின் 10 மையங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில், பேருந்து நிலையம் நோக்கி அரசு ஊழியர்களின் பேரணி மேற்கொள்ளப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் பேருந்துநிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சம்மேளன நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

ஜெ.முருகன்

படங்கள்: அ.குரூஸ்தனம்

08 Jan 2020 11 AM

அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கேரளா, புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள், தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன. அதேபோல், கேரளாவுக்குள் இயக்கப்படும் தமிழகப் பேருந்துகள் குமுளியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. வேலை நிறுத்தப்போராட்டத்தால், தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் ,தாராப்பூர் டவர் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

படங்கள்: கே.ஜெரோம்

08 Jan 2020 10 AM

தமிழக அரசின் புதிய முயற்சி!

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் இயந்திரம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம்மூலம் பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டி-ஷர்ட் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படும் என்கிறார்கள். மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் பாட்டில்களை அளிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் ஒன்றில் 15 சதவிகித சலுகை அளிக்கும் வகையில் கூப்பன் ஒன்றும் இயந்திரம்மூலம் வழங்கப்படுகிறது.

படங்கள் : தே. அசோக் குமார்

08 Jan 2020 10 AM

இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

இராக், இரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அத்தியாவசியத் தேவை இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

இரான் - அமெரிக்கா இடையிலான போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது. இராக்கில் இருக்கும் இந்தியர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே எச்சரிக்கையாக இருக்கும்படியும், அந்நாட்டுக்குள் மற்ற இடங்களுக்குப் பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்நாடுகளில் இருக்கும் இந்தியர்கள், எந்த உதவிக்காகவும் பாக்தாத் மற்றும் எர்பில் ஆகிய நகரங்களில் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரகங்களைத் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08 Jan 2020 9 AM

பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்!

இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில், இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வணிகத்தைத் தொடங்கின.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் வணிக நேரத் தொடக்கத்தில், 374 புள்ளிகள் சரிந்து 40,495 புள்ளிகளில் வணிகமானது. அதேநேரம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, 123 புள்ளிகள் சரிந்து 11,929 புள்ளிகளில் வணிகமானது. இரான் - அமெரிக்கா போர்ப்பதற்ற சூழலால் கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவை விலை உயர்ந்து வருகின்றன. அதேபோல், உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிவுடனே காணப்படுகின்றன.

08 Jan 2020 9 AM

தெஹ்ரானில் 180 பேருடன் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்!

இரான் தலைநகர் தெஹ்ரானில், 180 பயணிகளுடன் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியதாக இரான் அரசு ஊடகமான ISNA தெரிவித்திருக்கிறது. அதேநேரம், அந்த விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. உக்ரைனைச் சேர்ந்த போயிங் 737, தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்தது. அமெரிக்கா - இரான் இடையே போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது.

08 Jan 2020 7 AM

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்!

மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு, கேரளாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதனால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.