Published:Updated:

`பழம் விக்கிதோ இல்லையோ, பத்து தெரு சுத்தி வந்தாத்தான் நிம்மதி!’ - கலங்கவைக்கும் காமாட்சி பாட்டியின் கதை

வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி ( நா.ராஜமுருகன் )

காமாட்சி பாட்டியை, யதேச்சையாகதான் சந்தித்தேன். கனிந்த வாழைப்பழங்களை தாம்பூல தட்டில் அடுக்கி வைத்து, அதை தலையில் சுமந்தபடி நடந்து வந்துகொண்டிருந்தார்.

``கடைசிக் காலத்தில் என்னை உட்கார வச்சு சோறு போடுவாங்கனுதான் அஞ்சுப் பிள்ளைகளைப் பெத்தேன். ஆனா, என் கணவர் இறந்தபிறகு, என்னைத் தனியா நிராதரவா விட்டுட்டாங்க. கஞ்சி ஊத்தலை. `என் கை, கால் முடங்குற வரைக்கும் எனக்கென்ன கவலை. உழைச்சு சாப்பிடுவேன்'னு வைராக்கியமா வாழைப்பழக் கூடையை தலையில் சுமந்தேன்.

வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
நா.ராஜமுருகன்

இந்தா, கனவு போல 25 வருஷம் ஓடிருச்சு. இன்னும் என்னோட கால்கள் ஓயாம ஓடிக்கிட்டு இருக்கு" - உற்சாகமாகப் பேசுகிறார் காமாட்சி பாட்டி.

கரூர் மாவட்டம், புகளூர் ஒன்றியத்தில் உள்ள தோட்டக்குறிச்சியில் ஒரு சிறு குடிசையில் ஒண்டிக்குடித்தனம் நடத்தி வருகிறார், காமாட்சி பாட்டி. 90 வயது நிரம்பியும், உடலிலும், உள்ளத்திலும் `திடம்' குறையவில்லை. வாழைப்பழத்தை ஒரு தாம்பளத்தில் வைத்து தெருத்தெருவாக அலைந்து விற்பனை செய்து, அந்த வருமானத்தில் வாழ்க்கையை வசந்தமாக வாழ்ந்து வருகிறார்.

வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
நா.ராஜமுருகன்

காமாட்சி பாட்டியை, யதேச்சையாகதான் சந்தித்தேன். கனிந்த வாழைப்பழங்களை தட்டில் அடுக்கி வைத்து, அதை தலையில் சுமந்தபடி நடந்து வந்துகொண்டிருந்தார். கரகாட்டம் ஆடுபவர்களின் சிரத்தையோடு, கூடையைத் தலையில் வைத்து, அதைக் கைகளால் பிடிக்காமல், அசால்ட்டாக பாட்டி நடந்து வந்ததே வித்தியாசமாக இருந்தது.

`திருப்பூரிலிருந்து நடந்தே கரூர் வந்த தொழிலாளி!' -250 கி.மீ தூரத்தைக் கடக்க உதவிய செந்தில் பாலாஜி

``வாழை, வாழை... கூரு இருவது ரூபா. இயற்கையா வெளைஞ்சது தாயீ. கொம்புத் தேனா இனிக்கு... ’ என்று பொக்கை வாய் மொழியில் அந்தப் பாட்டி கூவிய விதமே வித்தியாசமாக இருக்கிறது. கொரோனா காலம் என்பதால், பெரிதாக யாரும் அவரை சீண்டவில்லை. சிலர் பாட்டியை நிறுத்தி, விலையை விசாரிக்கிறார்கள். அதில் ஓரிருவர் மட்டும் பழங்கள் வாங்குகிறார்கள்.

காமாட்சி பாட்டியிடம் பழம் வாங்கும் சிறுவன்
காமாட்சி பாட்டியிடம் பழம் வாங்கும் சிறுவன்
நா.ராஜமுருகன்

தலையை கிறுகிறுக்க வைக்கும் உச்சி வெயிலில், காமாட்சி பாட்டி சளைக்காமல் எல்லா பழங்களையும் விற்றுவிடும் யத்தனிப்போடு, சாலையில் நடைபோடுகிறார். அந்தப் பாட்டியின் உழைப்பைக் கண்டு வியந்த ஓர் இளைஞர், அவரது கூடையில் இருந்த மொத்தப் பழத்தையும் வாங்குகிறார். அனைத்தையும் விற்ற நிம்மதியோடு நிழல் பார்த்து அமர்ந்தவரிடம் பேசினேன்.

25 வருஷத்துக்கு முன்னாடி என் வீட்டுக்காரர் என்னைத் தனியா தவிக்கவிட்டுட்டு போய் சேர்ந்துட்டார். அதுலருந்து தனிமரமாயிட்டேன். என்னோட பிள்ளைகள் அதது குடும்பத்தை பாக்குதுங்களே ஒழிய, என்னைக் கண்டுக்கலை. பாரமா நெனக்க ஆரம்பிச்சிருச்சுக.
காமாட்சி பாட்டி

`யப்பப்பா, என்னா வெயிலு' என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒடுங்கிப்போன முகத்தில், வழிந்த வியர்வையை உழைப்புக்கான வெகுமதியாக பாவித்து, முந்தானையால் துடைக்கிறார்.

``நான் வாக்கப்பட்டு வந்த ஊரு இதுதான். என் வீட்டுக்காரர் பேரு மருதன். கூலி வேலதான் பார்த்தாரு. ஆனா, என்னை உள்ளங்கையில் வச்சு தங்கமா தாங்கினாரு. சோத்துக்கு வழியில்லன்னாலும், வாழ்க்கையில் சொகத்துக்குப் பஞ்சமில்லாம இருந்துச்சு. ரெண்டு ஆம்பளைப் பசங்க, மூணு பொம்பளப் பிள்ளைகள்னு அஞ்சுப் பிள்ளைகள் பிறந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் மாடா உழைச்சு, அஞ்சுப் பிள்ளைகளையும் ஆளா, தேளா ஆக்கினோம். எல்லா பிள்ளைங்களுக்கும், ஊர் சனங்களோட கண்ணடையுற மாதிரி கல்யாணம் பண்ணி வச்சோம்.

வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
நா.ராஜமுருகன்

25 வருஷத்துக்கு முன்னாடி என் வீட்டுக்காரர் என்னைத் தனியா தவிக்கவிட்டுட்டு போய் சேர்ந்துட்டார். அதுலருந்து தனிமரமாயிட்டேன். என்னோட பிள்ளைகள் அதது குடும்பத்தை பாக்குதுங்களே ஒழிய, என்னைக் கண்டுக்கலை. பாரமா நெனக்க ஆரம்பிச்சிருச்சுக. அதை சாடைமாடையா தெரிஞ்சுக்கிட்டேன். `நம்மை பிள்ளைங்க இனி சுமக்கமாட்டாங்க. நாமதான் இனி நம்மைப் பாத்துக்கணும்'னு முடிவெடுத்தேன். என்ன பண்றதுனு புரியலை.

இந்தப் பகுதிகள்ல வாழை விவசாயம் நல்லா நடக்கும். வாழைத்தோப்புகள்ல உதிர்ற பழங்களை வாங்கிட்டு வந்து, தட்டுக்கூடையில் வச்சு, தலைபாரமா சுமந்துகிட்டுப் போய் விற்க ஆரம்பிச்சேன். சுத்துப்பட்டுல உள்ள பத்து ஊர்களுக்கு நடந்தே போய் வியாபாரம் பார்க்க ஆரம்பிச்சேன். அதை வச்சு, இரண்டு வேளை கஞ்சி குடிச்சுடுவேன். பெருசா வருமானம் இருக்காது. எல்லா வீடுகள்லயும் வாழைமரம் இருக்கறதால, பலரும் வாழைப்பழம் வாங்க தயங்குவாங்க. சிலர் என்னோட நிலைமையைப் பார்த்துட்டு பாவப்பட்டு, என்கிட்ட வாழைப்பழம் வாங்குவாங்க.

வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
வாழைப்பழம் வியாபாரம் பார்க்கும் காமாட்சி பாட்டி
நா.ராஜமுருகன்

பெத்த புள்ளைங்களுக்கு இல்லாத பரிவு, மூணாம் மனுஷன்கிட்ட கிடைக்குறப்ப, முந்தானையை எடுத்து வாயில் பொத்திக்கிட்டு ஓன்னு அழுது தீர்த்துடுவேன். அப்படிதான் என் பொழப்பு, இத்தனை வருஷமா ஓடிக்கிட்டு இருக்கு. இப்போ எனக்கு 90 வயசாயிருச்சு. முன்னமாதிரி வெரசா நடக்க முடியலை. கண் வேற மங்கிருச்சு. வச்சப் பொருளை எங்கே வச்சேன்னு மறந்துபோயிடுது. இதுக்கிடையில, கொரோனா நோய் வேற வந்து, மக்களை முடக்கிருச்சு. இந்த 40 நாள்கள்ல நான் வியாபாரம் பார்க்க திணறிப்போயிட்டேன் தம்பி.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் குடியிருந்த வீடு, உடைஞ்சு விழுந்துருச்சு. அதனால, இருநூரு ரூபாய் வாடகைக்கு ஒரு ஓலைக்குடிசையில குடியிருக்கிறேன். காலையில் 6 மணிக்கு முன்னமே எழுந்து கஞ்சிக் காச்சிக் குடிச்சுட்டு, மதியத்துக்கு கொஞ்சம் தூக்குவாளியில எடுத்துக்கிட்டு கிளம்பிருவேன். மதியம் ரெண்டு மணி வரைக்கும் வியாபாரம் நடக்கும். சில நாள் எல்லாம் வித்துரும். ஆனா பல நாள், ஒரு பழம் கூட விக்காது. அன்னைக்கு முச்சூடும் பழம்தான் சாப்பாடு. உடம்புக்கு முடியலன்னா, அது சரியாவுற வரைக்கும் வீட்டுக்குள்ள முடங்கிருவேன்.

சமையல் வேலையில் காமாட்சி பாட்டி
சமையல் வேலையில் காமாட்சி பாட்டி
நா.ராஜமுருகன்

நான் ஒருநாள் போகலன்னாலும், `ஏன் பாட்டி நேத்து வரலை'னு பலர் அன்பா விசாரிப்பாங்க. பல குழந்தைகள், `உங்ககிட்ட வாழைப்பழம் வாங்கமுடியாம தவிச்சுப் போயிட்டோம் பாட்டி'னு ஏக்கமா சொல்வாங்க. அதுக்காகவே நானும் தினமும், பழம் வித்தாலும், விக்கலன்னாலும் வீதிவீதியா அலைஞ்சுக்கிட்டு இருக்கிறேன். பழம் விக்கிதோ இல்லையோ, பத்து தெரு சுத்தி வந்தாத்தான் நிம்மதி! என் கட்டை சாயுற வரைக்கும், இந்த அலைச்சல் ஓயாது" என்று முடித்தபோது, அவர் குரல் இளகிப் போயிருந்தது.

அதில் தெரிந்தது, அன்பின் ஏக்கம்!

அடுத்த கட்டுரைக்கு