சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த ஜூன் 15-ம் தேதி வரை வெப்பமும், அனல் காற்றும் வாட்டி வதைத்தது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் அனல் காற்றும் வீசியது. அக்னி நட்சத்திர வெயில் காலம் முடிந்த பின்னரும், ஜூன் மாதத்தில் கூட 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் அளவு பதிவாகியது. இந்த சூழலில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதன் தாக்கத்தால் கொடைக்கானல், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, வால்பாறை ஆகிய இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

சிறிய மழைக்கே தேங்கும் தண்ணீர்

எனினும் சென்னை நகரில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. இந்த சூழலில்தான் ஞாயிறு அன்று இரவு 8 மணிக்கு சென்னையின் பல இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. அரை மணி நேரம்வரை பலத்த மழை பெய்த நிலையில், பின்னர் சிறு தூறலாக பெய்தது. இதனால், வெப்பம் வெகுவாகத் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

அதே நேரத்தில் இந்த சிறிய மழைக்கே சென்னையின் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. ஜி.என். செட்டி சாலையின் ஒரு பகுதியில் தண்ணீர் கணுக்கால் அளவுக்கு மேலே ஓடியது. பல்வேறு சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. மீண்டும் ஒரு பெரிய மழை பெய்தால், இந்த மாநகராட்சி நிர்வாகம் என்னதான் செய்யப்போகிறதோ தெரியவில்லை.

மழை அளவு

ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை தமிழகத்தில் 57.2 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 11 சதவிகிதம் குறைவாகும். இதே கால கட்டத்தில்  சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக 158. 3 மி.மீ பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 153.1 மி.மீ பெய்துள்ளது. அதற்கு அடுத்தாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 151.4 மி.மீ பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிக, மிகக் குறைந்த அளவாக 1.2 மி.மீ பெய்துள்ளது.

அடுத்த ஐந்து நாள்களுக்கு...

இதனிடையே, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், வரும் 13-ம் தேதி வரை மாலை அல்லது இரவு நேரங்களில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டமாகக் காணப்படும். மாலை நேரத்திலோ அல்லது இரவிலோ மழை பெய்யக் கூடும். அதிக பட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், குறைந்த பட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.  

தொடர்ந்து ஏமாற்றும் மழை

2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதப் பெரும் மழைக்குப் பின்னர், தமிழகத்தில் போதுமான மழை பெய்யவில்லை. 2016-ம் ஆண்டு வறட்சி ஆண்டாக கழிந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. எனினும், தென் மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளிலும், ஒரு சில மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதுபோன்று மழை தொடரும் பட்சத்தில் விவசாயிகளின் வேதனைகளுக்கு விடிவு கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு