Published:Updated:

`ஆதார் அட்டை இல்லாம எதுவும் நடக்கல!’ - 95 வயதில் ஆதார் எடுக்க வந்த அன்னபுஷ்பம் பாட்டி

95 வயது நிரம்பிய அன்னபுஷ்பம் என்ற மூதாட்டி நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு ஆதார் எடுக்க வந்தார்.

95 வயது மூதாட்டி அன்னபுஷ்பம்
95 வயது மூதாட்டி அன்னபுஷ்பம்

நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபுஷ்பம். 95 வயதான இவர் ஆதார் அட்டை எடுப்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்துக்கு வந்திருந்தார். வயோதிகம் காரணமாக நடக்கவே முடியாத நிலையில் உள்ள அவரை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மூன்று சக்கர தள்ளுவண்டியில் சேவை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வரிசையில் காத்திருந்து ஆதார் அட்டை எடுக்கும் நடைமுறைகளைக் கடைப்பிடித்து விட்டு வெளியே வந்தார்.

அன்னபுஷ்பம்
அன்னபுஷ்பம்

தள்ளாத வயதில் ஆதார் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அன்னபுஷ்பத்திடம் பேசினோம்.``எனக்கு 95 வயதாகிறது. எனது கணவர் அற்புதராஜ். அவர் 99 வயதான நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு 5 மகன்களும் 3 மகள்களும் இருக்கிறார்கள். எனக்கு 21 பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். ஆனாலும், நான் எனது மகள் வழிப்பேத்தியான மரியசுதா வீட்டில் வசித்து வருகிறேன்.

நானும் எனது கணவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டை எடுக்க பதிவு செய்தோம். அவருக்கு அட்டை வந்ததே தவிர எனக்கு மட்டும் ஏனோ வரவில்லை. நானும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்துவிட்டேன். ஆனால், எங்கே போனாலும் ஆதார் அட்டையைக் கேட்கிறார்கள். நான் செத்தால் கூட புதைப்பதற்கு ஆதார் அட்டையைக் கேட்டாலும் கேட்பார்கள். அதனால் ஆதார் அட்டை எடுப்பதற்காக வந்திருக்கிறேன்’’ என்றார்.

தள்ளாத வயதில் வந்திருந்த அன்னபுஷ்பம் பாட்டி அனைவரிடமும் பாசத்துடன் பேசி மகிழ்ந்தார். அவரது காதில் அணிந்திருந்த பாம்படம் அணிகலனை பெண்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்தார்கள்.