Published:Updated:

3 மாதங்கள்... 97 உயிர்ப்பலிகள்... மின்வாரிய ஷாக்!

மின்வாரிய ஷாக்!
பிரீமியம் ஸ்டோரி
மின்வாரிய ஷாக்!

இது போன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் ஊழியர் பற்றாக்குறைதான். 50 சதவிகித இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

3 மாதங்கள்... 97 உயிர்ப்பலிகள்... மின்வாரிய ஷாக்!

இது போன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் ஊழியர் பற்றாக்குறைதான். 50 சதவிகித இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

Published:Updated:
மின்வாரிய ஷாக்!
பிரீமியம் ஸ்டோரி
மின்வாரிய ஷாக்!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 97 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்திருக்கிறது. அவர்களில், பெரும்பாலானோர் மின்சாரத்துறை ஊழியர்கள்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில், திருச்சியில் 21 உயிரிழப்புகளும், மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் தலா 16 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும், வேலூர் மற்றும் சென்னையில் (தெற்கு) முறையே 9 மற்றும் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். ஈரோட்டில் 6 உயிரிழப்புகள், கோயம்புத்தூரில் 5 இறப்புகள், சென்னையில் (வடக்கு) 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இப்படி 97 உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் 61 விபத்துகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30 விலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் பணிக்கு வந்து உயிரிழந்த சம்பவமும் சென்னையில் நிகழ்ந்திருக்கிறது.

3 மாதங்கள்... 97 உயிர்ப்பலிகள்... மின்வாரிய ஷாக்!

இதைத் தொடர்ந்து, விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு, அனைத்துத் தலைமை மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், ``அடிப்படையான சில விஷயங்களைச் சரிசெய்யாமல் இந்த விபத்துகளைத் தடுக்க முடியாது’’ என்கிறார்கள் மின்துறை ஊழியர்கள்.

இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசினோம். “இது போன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் ஊழியர் பற்றாக்குறைதான். 50 சதவிகித இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக பணிச்சுமை அதிகரித்து மனரீதியாக ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஊழியர்களைக் கண்காணிக்க அதிகாரிகளும் இல்லை. ஒரே அதிகாரி மூன்று, நான்கு இடங்களைக் கண்காணிக்கவேண்டியிருக்கிறது. 2018-ல் கள உதவியாளராக 2,900 பேரை எடுப்பதாகச் சொன்னார்கள். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏதோ குளறுபடியால் ஒரு வாரத்துக்கு முன்பு அதை ரத்துசெய்துவிட்டார்கள். ‘மின் தடை இல்லாமல் இருக்க வேண்டும்; எல்லா இடங்களிலும் மின்சாரம் தடைப்படாமல் வழங்கப்பட வேண்டும்’ என மின்துறை அமைச்சர் சொல்கிறார். ஆனால் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் இவ்வளவு வேலைகளையும் எப்படிச் செய்வது... இதற்கு மேலும் மனித உயிர்களை இழக்க நாங்கள் தயாராக இல்லை. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உயிரிழந்த மின்துறை ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, எங்களுக்கான சலுகைகள், தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி காத்திருப்புப் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்’’ என்றனர்.

3 மாதங்கள்... 97 உயிர்ப்பலிகள்... மின்வாரிய ஷாக்!

ஆனால், “மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பினாலும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதைச் சரியாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம்’’ என்கிறார் ஓய்வுபெற்ற பொறியாளரும், ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்பு கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான செல்வராஜ். மேலும் இதுகுறித்து விரிவாகப் பேசுபவர்,

``ஊழியர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்வதில்லை. கையூட்டு, கமிஷனுக்கு வாய்ப்பிருந்தால் மட்டுமே பலர் வேலையே செய்கிறார்கள். முறையான பயிற்சி வகுப்புகள் நடத்தாமல், நடத்தியதுபோல் ஊழியர்களிடம் கையொப்பம் பெற்று பதிவுசெய்துவிடுகிறார்கள். ‘நாம் ஓர் ஆபத்தான பணியைச் செய்கிறோம். இதில் கவனமாக இருக்க வேண்டும்’ என்ற உணர்வை முதலில் ஊழியர்களுக்கு உண்டாக்க வேண்டும். ஏனென்றால், பணியின்போது அசிரத்தையாக இருப்பதாலும், பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தாலும் அவற்றைக் கொண்டு செல்லாமல் இருப்பதாலும்தான் விபத்துகள் அதிகரிக்கின்றன. ஒருசில இடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதும் உண்மைதான். உபகரணங்களை வாங்கி சப்ளை செய்ய மறுக்கிறார்கள். அதில் ஏதாவது கமிஷன் அடிக்க முடியுமா என்றே யோசிக்கிறார்கள். மேலும் தவறுகள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தாமல் அங்கேயும் கமிஷன் என்ன கிடைக்கும் என்றே சிலர் பார்க்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கு பய உணர்வு இல்லாமல் போய்விடுகிறது. அதுமட்டுமல்ல, மின்சாரத்துறையில் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கிறது. இது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தி கவனச் சிதறலுக்கு வழிவகுக்கிறது. இதனாலும் விபத்துகள் நிகழ்கின்றன. மின்துறைக்குத் தொடர்பில்லாத வெளி ஆட்களை நேரடியாக நியமித்து வேலையில் ஈடுபடுத்துவதாலும் விபத்துகள் நடக்கின்றன’’ என்றார்.

இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்க, பலமுறை முயன்றும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

செல்வராஜ்
செல்வராஜ்

தமிழ்நாடு மின் வாரியத்துறைச் செயலாளர் மணிகண்ணனிடம் பேசினோம். ``ஆள் பற்றாக்குறை என்பது சரியான காரணமல்ல. சாலை விபத்து உள்ளிட்ட மற்ற விபத்துகளைப்போலத்தான் இதுவும். ஆனால், உயர் மின் அழுத்தத்தில் மின்சாரம் வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பாதுகாப்பாகப் பணியாற்றுவது குறித்து பல்வேறு விழிப்புணர்வுப் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக அளித்து வருகிறோம். மின் விபத்துகளைக் குறைப்பது தொடர்பாக அடிக்கடி ஆய்வு செய்து, பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறோம்’’ என்றார்.

மழைக்காலம் வேறு வந்துவிட்டது... விழிப்படையட்டும் மின்வாரியம்!