Published:Updated:

டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு: கருணாநிதி வலியுறுத்தல்!

டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு: கருணாநிதி வலியுறுத்தல்!
டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு: கருணாநிதி வலியுறுத்தல்!
டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு: கருணாநிதி வலியுறுத்தல்!

சென்னை:பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா விவசாயிகளின் நிலை தொடர்பாக உண்மையான ஆய்வு ஒன்றை நடத்தி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"முதல்வர் ஜெயலலிதா ஜூலை 25-ம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. 4.52 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

அந்த அறிக்கையிலேயே மே 25-ம் தேதி மற்றும் ஜூன் 15-ம் தேதிகளில் நீர்வரத்து நிலை தொடர்பாக ஆய்வு செய்ததாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

ஆனால், பாரதிய கிசான் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் அய்யாக்கண்ணு, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் ராஜாராம், மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்பட பலர் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனைத்து உத்திகளையும் கடைப்பிடித்து வருவதாக முதல்வர் கூறியுள்ளார். ஆடிப்பெருக்கு விழாவைக்கூட கொண்டாட முடியாத வேதனையில் டெல்டா விவசாயிகள் இருக்கும்போது உண்மைக்கு மாறான அறிக்கைகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார்.

மே 28-ம் தேதியன்று நீர்வரத்துத் தொடர்பாக ஆய்வு நடத்தியதாகக் கூறும் ஜெயலலிதா, அதே நாளில் டெல்லியில் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித் துறை செயலாளர் எம்.சாய்குமார், பொறியாளர்கள் சிவசங்கரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.டெல்லியில் தலைமைச் செயலாளரும், பொதுப்பணி துறை பொறியாளர்களும் இருக்கும் நிலையில் சென்னையில் எவ்வாறு ஆய்வுக் கூட்டம் நடத்தினர் என்றுதான் தெரியவில்லை.

அதைப்போல ஜூன் 15-ம் தேதியன்று பயிர் சாகுபடி மற்றும் நீர்வரத்து நிலையினை ஆய்வு செய்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால் அன்றைய தினம் புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்தனர். அதற்கிடையில் எவ்வாறு ஆய்வு நடத்தினர் என்று தெரியவில்லை.

எனவே, குறுவை பாதிப்பு இல்லை என்றும் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என்றும் முதல்வர் கூறியிருப்பது முற்றிலும் தவறான செய்தியாகும்.

இனியாவது உண்மையான ஆய்வு ஒன்றினை அதிகாரிகளைக் கொண்டு நடத்தி, அதில் நல்ல முடிவுகள் எடுத்து விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் அளித்தல், தலா 10 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்குதல் போன்றவை தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.