Published:Updated:

`பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முதல் நிறுவனமாக கொண்டு வருவதே இலக்கு!’- சென்னையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் #NowAtVikatan

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

9.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

09 Jan 2020 5 PM

சென்னையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

சென்னையில் கடல்வழி ஃபைபர் கேபிள் பதிக்கும் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசும்போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீண்டும் முதல் நிறுவனமாக கொண்டு வருவதே அரசின் இலக்கு என்று தெரிவித்தார். மேலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது இணைப்பில் இருந்த ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் பி.எஸ்.என்.எல். மட்டுமே எனவும் அவர் கூறினார்.

09 Jan 2020 11 AM

வன்முறையை நிறுத்தினால் வழக்கு விசாரிக்கப்படும்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது. சில இடங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அரங்கேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி பாப்டே
நீதிபதி பாப்டே

இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்காமலேயே இருந்து வந்துள்ளனர். இன்று வழக்கறிஞர்கள் அதற்கான காரணம் கேட்டபோது தலைமை நீதிபதி பாப்டே தன் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில், “ நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. வன்முறையை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும். நாட்டில் நடக்கும் கடினமான சூழலை எங்களால் உணர முடிகிறது. எங்களது நடவடிக்கைகள் அமைதியை கொண்டுவர வேண்டும், ஆனால் தற்போதைய சூழலில் மனுக்களை விசாரிப்பதால் அமைதி திரும்பும் என எண்ண முடியவில்லை” என்று சற்று கோபமாகப் பேசியுள்ளார்.

09 Jan 2020 9 AM

பொங்கல் பரிசுத் ​​தொகுப்பு இன்று முதல் விநியோகம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு
Twitter

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு 35,000-த்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தலா 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காயுடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

09 Jan 2020 7 AM

அஸ்ஸாம் பயணத்தைத் தவிர்த்த மோடி, அமித் ஷா?!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் அஸ்ஸாமில் வலுத்து வரும் நிலையில், அங்கு செல்வதை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தவிர்த்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

அஸ்ஸாமின் கவுகாத்தி நகரில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நாளை (10-1-2020) தொடங்க இருக்கின்றன. இந்தப் போட்டியைத் தொடங்கிவைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி அஸ்ஸாம் வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், அஸ்ஸாம் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில், அவரும் தவிர்த்துவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

09 Jan 2020 7 AM

தர்பார் ரிலீஸ்!

மதுரையில் ரசிகர்கள் கொண்டாட்டம்
மதுரையில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் ரிலீஸானது. உலகம் முழுவதும் 7,000 திரையரங்குகளில் படம் ரிலீஸான நிலையில், ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு