Published:Updated:

`என் மனைவி படுத்தபடுக்கையாயிட்டா; மகன்கள் சோறுபோடல!'- வேலூர் கலெக்டரிடம் 95 வயது முதியவர் குமுறல்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

‘‘ரெண்டு பசங்க இருந்தும் ஒரு வாய் சோறுபோட ஆளில்லை. என்கிட்ட இருந்த விவசாய நிலத்தையும் ஏமாத்தி பறிச்சிக்கிட்டாங்க. உடம்பு சரியில்லாத மனைவியோடு கஷ்டப்படுறேன்’’ என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 95 வயது முதியவர் கண்ணீர் விட்ட சம்பவம், அங்கிருந்தவர்களைக் கண்கலங்கவைத்தது. 

முதியவர் கோபால்
முதியவர் கோபால்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த மாளியப்பட்டு பள்ளகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர், கோபால் (95). விவசாயியான இவர், தன்னுடைய மகன்கள் 2 பேர் மீதும் புகாரளிப்பதற்காக, இன்று மதியம் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் விசாரித்தோம்.

வேலூர் கலெக்டர் அலுவலகம்
வேலூர் கலெக்டர் அலுவலகம்

‘‘எனக்கு தாமோதரன், பலராமன்னு ரெண்டு பசங்க இருக்காங்க. இதுல தாமோதரன் முன்னாள் ராணுவ வீரர். இன்னொருத்தன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். ரெண்டு பேருக்கும் மாச வருமானம் பல லட்சம் கிடைக்குது. நான், ஏழு ஏக்கர்ல பூர்விக நிலம், சுயமாகச் சம்பாதிச்சு ஒன்றரை ஏக்கர் நிலத்தை வெச்சிருந்தேன்.

இந்த நிலையில், என்னுடைய நிலத்தை எனக்குத் தெரியாமலேயே ரெண்டு மகன்களும் பாகப்பிரிவினை செஞ்சு என்னை ஏமாத்திட்டாங்க. பூர்விக நிலத்தை எடுத்துக்க அவங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா, நான் சுயமா சம்பாதிச்சு வாங்குன நிலத்தை அபகரிக்க பசங்களுக்கு உரிமை கிடையாது.

‘‘ரெண்டு பசங்க இருந்தும் ஒரு வாய் சோறுபோட்டு எங்களை கவனிச்சிக்க ஆளில்ல. வயசான காலத்துல நாங்க கஷ்டப்படுறோம்.’’
முதியவர் கோபால்

எனக்கு படிப்பறிவு இல்லாததுனால ஏமாத்தி கையெழுத்துவாங்கிட்டானுங்க. பசங்கதானே சரி பரவாயில்ல வச்சுகிடட்டும்னு நினைச்சேன். ஆனா, என்னைக் கவனிக்காம கைவிட்டுட்டாங்க. என் மனைவிக்கு 82 வயசாகுது. உடம்பு சரியில்லாம படுத்தபடுக்கையா கிடக்குறா.

நான்தான் அவளுக்கு சாப்பாடு செஞ்சு ஊட்டிவிடுறேன். எனக்கும் உடம்பு சரியில்ல. இருதய ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கு பணம் தேவைப்படுது. ரெண்டு பசங்க இருந்தும் ஒரு வாய் சோறுபோட்டு எங்களை கவனிச்சிக்க ஆளில்ல. வயசான காலத்துல நாங்க கஷ்டப்படுறோம்.

முதியவர் கோபால்
முதியவர் கோபால்

என்னோட நிலத்தை திருப்பி வாங்கிக் கொடுங்க. மருத்துவ சிகிச்சைக்காக பசங்ககிட்ட பணம் வாங்கிக் கொடுங்க’’ என்றார் உருக்கமாக. பின்னர், வேலூர் உதவி கலெக்டர் மெகராஜை சந்தித்து மகன்கள் மீது புகார் அளித்தார் கோபால். அவரின் மகன்களை வரவழைத்து, அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.