Published:Updated:

மூளைச்சாவு அடைந்த இளைஞர்; காட்டிக் கொடுத்த கண்ணீர் - தெலங்கானாவில் அரிதான நிகழ்வு!

கந்தம் கிரண்
கந்தம் கிரண் ( Twitter/@lijoy_c )

`அவனின் இறுதி மூச்சு எங்கள் வீட்டில்தான் போக வேண்டும் என முடிவு செய்து கிரணை வீட்டுக்கு அழைத்துச் சென்றோம்’ என அவரின் தாய் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் பில்லமாரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயதான கந்தம் கிரண். கடந்த மாதம் 26-ம் தேதி அதிக காய்ச்சல் காரணமாக இவர் அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இரண்டு நாள் சிகிச்சைக்குப் பின் கிரணின் உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியுள்ளது. இதனால் அவர் ஜூன் 28-ம் தேதி அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காய்ச்சல் - மாதிரி புகைப்படம்
காய்ச்சல் - மாதிரி புகைப்படம்

தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரணுக்கு உயிர்காக்கும் கருவிகள் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில், கடந்த 3-ம் தேதி கிரண் கோமாவுக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தன் மகன் தனது வீட்டில்தான் கடைசி மூச்சு விட வேண்டும் என நினைத்த கிரணின் தாயார் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய கிரணின் தாய் சைதம்மா, ``என் மகன் மூளைச் சாவு அடைந்துவிட்டான் எனக் கேட்டதும் நெஞ்சு பதைபதைத்தது. சமீபத்தில் என் கணவரும் உடல்நிலை குறைவால் உயிரிழந்ததால் நான் என் இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறேன். தற்போது மகனின் உயிருக்கும் ஆபத்து எனத் தெரிந்ததும் நொறுங்கிவிட்டேன்.

மூளைச்சாவு - மாதிரி புகைப்படம்
மூளைச்சாவு - மாதிரி புகைப்படம்

கிரண் மூளைச் சாவு அடைந்துவிட்டான் என்றதும் உறவினர்களின் உதவியுடன் அவனை வீட்டுக்குக் கொண்டு சென்றோம். உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டபடியே அவன் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான்.

கிரணை வீட்டுக்கு அழைத்துச் சென்றதும் அங்கு அவனுக்கான இறுதிச் சடங்கு வேலைகள் நடந்துகொண்டிருந்தன. உறவினர்களும், நண்பர்களும் எங்கள் வீட்டில் சூழ்ந்திருந்தனர். வீடு எங்கும் மிகவும் அமைதியாக இருந்தது. அன்றைய தினம் கிரண் இறந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தில்தான் எங்கள் வீடு இருந்தது. ஆனால், அவன் தன் இறுதி நிமிடங்களுக்காகப் போராடிக்கொண்டிருந்தான்.

அப்போது கிரணின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது. நான்தான் அதை முதலில் பார்த்தேன். உடனடியாக உறவினர்களை உஷார்படுத்தி மீண்டும் என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தேன்.

என் மகன் இன்னும் துடிப்புடன் உள்ளான் என்பதை உணர்ந்தேன்
கிரணின் தாய்

மருத்துவமனையில் கிரணுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு என் மகன் கண் திறந்து பார்த்தான். தொடர்ந்து எங்களிடம் பேசத் தொடங்கினான். இறப்பின் இறுதியைத் தொட்டுவிட்டு என் மகன் மீண்டும் திரும்பியுள்ளான். அவனுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கிரண் சுய நினைவுடன் ஆரோக்கியமாக உள்ளான்” எனத் தெரிவித்துள்ளார்.

மூளைச்சாவு அடைந்தவர் மீண்டும் பிழைக்க முடியுமா என்ற கேள்வியை மருத்துவர் கருணாநிதி முன்பு வைத்தோம். அது பற்றி நம்மிடம் பேசிய மருத்துவர், “ மூளைச்சாவு அடைந்தவர் மீண்டும் பிழைக்க வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த மருத்துவர்கள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வர். முதலில் நோயாளியின் உணர்ச்சியைச் சோதனை செய்வார். அடுத்ததாக மூளை தண்டு அனிச்சையாகச் செயல்படுகிறதா என்பதைச் சோதிப்பார். இறுதியாக நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ள உயிர்காக்கும் கருவிகளை அகற்றிவிட்டு ரத்தில் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்ஸைடு மூளையைத் தூண்டுகிறதா என்பதைச் சோதிப்பார். இந்த மூன்று நடைமுறைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை எனில் நோயாளி மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பது உறுதிசெய்யப்படும்.

மூளை
மூளை

உதாரணமாக, ஒருவருக்கு விபத்து ஏற்பட்டதும் அவரது உடலில் உள்ள ரத்தம் வெளியேறிவிடும். அந்த நேரத்தில் மூளை செயலிழந்து இருக்கும். அதையும் மூளைச் சாவு எனக் கூறுவார்கள். பின்னர் அடிப்பட்டவருக்கு மீண்டும் ரத்தம் செலுத்தப்பட்டவுடன் மூளை இயங்கத் தொடங்கும். ஆகையால் மூளைச்சாவு அடைந்தவர் மீண்டும் பிழைப்பது அரிதினும் அரிதானது” என நிதானமாகக் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு