Published:Updated:

`இரண்டு உயிர்கள்... திக் திக் நிமிடங்கள்... தாயின் ஆனந்தக் கண்ணீர்!' - டாக்டரான ஆச்சர்ய குழந்தை

கௌதம் கம்பீருடன் சக்தி
கௌதம் கம்பீருடன் சக்தி

மொத்த இந்தியாவும் அன்று ஆச்சர்யமாகப் பார்த்த அந்தக் குழந்தை இன்று 22 வயது இளைஞர்! எங்கு, எப்படி இருக்கிறார் சக்தி?

1998-ம் ஆண்டு. டெல்லி அப்போலோ மருத்துவமனையில் வழக்கத்துக்கு மாறாகக் கூடுதல் பரபரப்பு. பிறந்து 19 மாதங்களே ஆன அந்தக் குழந்தைக்கு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறுவைசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஏழு மருத்துவர்கள் குழுவின் ஒன்பது மணிநேரப் போராட்டத்துக்குப் பலன் கிடைத்து, அறுவை சிகிச்சையும் வெற்றி பெற்றது. இரண்டு உயிர்களைச் சிக்கலின்றி காப்பாற்றிய பெருமிதத்துடன் மருத்துவர்கள் வெளியே வந்து தகவலைத் தெரிவித்தனர். மகிழ்ச்சி தாளாமல், அந்த அறைக்கு வெளியே காத்திருந்த அந்தத் தாய்க்கு ஆனந்தக் கண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. செய்தி நாடு முழுக்க மின்னல் வேகத்தில் பரவ, இந்திய மருத்துவ உலகில் அந்த அறுவைசிகிச்சை இமாலய சாதனையாகப் பேசப்பட்டது.
சக்தி
சக்தி

அந்தக் குழந்தை யார்? அப்படி என்ன அறுவைசிகிச்சை அது?

மூளை மற்றும் இதயத்துக்கு அடுத்ததாக நமது உடலில் கல்லீரலின் செயல்பாடுதான் மிகவும் முக்கியமானது. கல்லீரல் செயல்பாட்டில் சிக்கல் அல்லது கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகள் உயிரிழப்பு அதிகளவில் இருந்தது. அதே நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையான சக்தியின் வாழ்நாளும் எண்ணப்பட்டுவந்தன. இந்த நிலையில், தந்தையே மகனுக்கு கல்லீரல் தானம் செய்தார். ஆசியாவிலே முதல் முறையாக அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்று வரை தந்தையும் மகனும் நலம். கூடுதல் மகிழ்ச்சி செய்தி என்னவென்றால், அந்தக் குழந்தை சக்தி இன்று மருத்துவப் படிப்பை முடிக்கவிருக்கிறார். விரைவில் டாக்டராகி, குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்கப்போகிறார். சூப்பர்ல!

சக்தி
சக்தி

அந்தக் குழந்தை, இன்று 22 வயது இளைஞர்! எங்கு, எப்படி இருக்கிறார் சக்தி?

``பூர்வீகம் காஞ்சிபுரம். பிறக்கும்போதே என் உடலில் சில பாதிப்புகள் இருந்திருக்கு. ஒரே வாரத்தில் அதற்கான அறிகுறிகள் தெரியவர, பெற்றோர் பதறிப்போய் என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோயிருக்காங்க. பித்தப்பையில் அடைப்பு ஏற்பட்டு பித்த நீர் வெளியேறாததால், கல்லீரல் செயல்பாடு தடைப்பட்டிருப்பது தெரிஞ்சிருக்கு. அதற்கான சிகிச்சையின்போது, அடுத்தடுத்து பல்வேறு பாதிப்புகளும் எனக்கு ஏற்பட்டிருக்கு. கல்லீரல் பாதிப்பைச் சரிசெய்ய, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடந்துச்சு.

பெற்றோருடன் சக்தி
பெற்றோருடன் சக்தி

ரெண்டு மாசக் குழந்தையான எனக்கு அப்போ பெயர் வெக்கலை. எனவே, மருத்துவர்கள் `சஞ்சய்'னு பெயர் வெச்சாங்க. அங்கு நடந்த ஆபரேஷன் தோல்வியடையவே, `இந்தப் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள்ல லட்சத்தில் ஒருவருக்குத்தான் ஆபரேஷன் வெற்றியாகும். உங்க குழந்தை இனி பிழைக்க வாய்ப்பில்லை. நீங்க இன்னொரு குழந்தை பெத்துக்கோங்க'ன்னு மருத்துவர்கள் என் பெற்றோர்கிட்ட சொல்லியிருக்காங்க. ஆனா, என்னை பிழைக்க வைப்பதையே லட்சியமா கொண்டு, பெற்றோர் ரொம்பவே மெனக்கெட்டிருக்காங்க. எனக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைதான் ஒரே தீர்வா இருந்திருக்கு.

மருத்துவக் காரணங்களுடன் பொருந்தும் பட்சத்தில், உயிரிழந்தவங்களின் கல்லீரலை தானமா வாங்கி குறிப்பிட்ட சில மணிநேரத்துக்குள் ஒருவருக்குப் பொருத்த முடியும். அந்த அறுவை சிகிச்சையும் எனக்குத் தோல்வியில் முடிஞ்சிருக்கு. உயிரோடு இருக்கிற ஒருவர்கிட்ட கல்லீரல் தானம் பெறுவதுதான் இறுதி தீர்வா சொல்லப்பட்டிருக்கு. ஆனா, அப்போது கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பத்தி விழிப்புணர்வு சுத்தமாவே இல்லை. யாரும் எனக்கு உதவ முன்வரலை. இந்த நிலையில்தான், காஞ்சிபுரத்தில் இருந்த டாக்டர் யோகானந்தம் என்பவரின் வழிகாட்டுதலில், டெல்லி அப்போலோ ஆஸ்பத்திரிக்கு என்னைக் கொண்டுபோயிருக்காங்க" என்கிற சக்திக்கு, அவரின் தந்தை கந்தசாமியே கல்லீரல் தானம் செய்ய முன்வந்திருக்கிறார்.

சக்தி
சக்தி

``சராசரியா 30 - 40 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட ஒருவரிடம் அதிகபட்சம் 30 சதவிகிதம்வரை கல்லீரலை அகற்றி இன்னொருவருக்குப் பொருத்தலாம். தானம் செய்த, தானம் பெற்ற இருவருக்குமே கல்லீரல் வளர்ச்சியடைந்து, ஒருகட்டத்தில் முழுமையான வளர்ச்சியை அடையும். அப்பாவின் கல்லீரலில் 25 சதவிகிதம் அகற்றி எனக்குப் பொருத்தினாங்க. ஆஸ்பத்திரியில் மூணு மாத சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினோம். பிறகுதான், பெற்றோர் எனக்கு `சக்தி'னு பெயர் வெச்சாங்க. அந்த ஆபரேஷன் வெற்றிகரமா முடிஞ்சாலும், குடல் பிரச்னை உட்பட அவ்வப்போது சில உடல்நல பாதிப்புகள் எனக்கு ஏற்பட்டிருக்கு. மீண்டும் மெனக்கெட்டு பெற்றோர் என்னைக் குணப்படுத்தினாங்க.

ரெண்டாவது படிக்கும் வரை ஸ்கூல் உட்பட வெளி இடங்களுக்குப் போறப்போ மாஸ்க் பயன்படுத்தினேன். எட்டாவது படிக்கும்வரை மாதம்தோறும் உடல் பரிசோதனை செய்துகிட்டேன். பிறகு, இப்ப வரை வருஷத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்துக்கிறேன். இப்போ அப்பாவுக்கும் எனக்கும் கல்லீரல் முழுமையா வளர்ந்துடுச்சு. எந்தச் சிக்கலும் இல்லாம இயல்பாவும் ஆரோக்கியமாவும் இருக்கேன். நான் ஸ்கூல் படிக்கும்போது, டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மேடம் வீட்டில் ஒரு கருந்தரங்கு நடந்துச்சு. அதில் கலந்துக்க எனக்கு அழைப்பு வந்துச்சு. அங்க போனப்போ, சோனியா மேடம் என் உடல்நலம், அந்த ஆபரேஷன் பத்தி விசாரிச்சாங்க. அதேபோல, கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரை சந்திச்சுப் பேசியதும் மறக்க முடியாத தருணம்.

கருத்தரங்கு ஒன்றில் சக்தி
கருத்தரங்கு ஒன்றில் சக்தி

குழந்தைப் பருவத்தில் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைச்சதால், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராகணும்னு ஆசைப்பட்டேன். புதுச்சேரியிலுள்ள ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் படிச்சேன். படிப்பு முடிஞ்சு, இப்போ இன்டர்ன்ஷிப் பண்றேன். அடுத்த வருஷம் மருத்துவரா பணியாற்ற ஆரம்பிச்சுடுவேன். பெற்றோரின் அன்பினாலும் மெனக்கெடல்களின் பலனாகவும்தான் பிழைச்சேன். அதிலும், அம்மாவின் அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்தக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியா நடந்தால், அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திக்கிறதா அம்மா கடவுளிடம் வேண்டியிருந்தாங்க. அதுபோலவே இப்போ வரை அசைவம் சாப்பிடாம இருக்காங்க.

சிறுநீரகம், இதயம் மற்றும் கண் மாற்று அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மிகக் குறைவாகவே நடக்குது. இதைப் பத்தி மக்களுக்குப் பெரிசா விழிப்புணர்வு ஏற்படலை. வாழும் காலத்துலயே ஒவ்வொருவருமே உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தால், சிலரை உயிர் வாழச் செய்யலாம். விரைவில் நான் முழு உடல் தானம் செய்யவிருக்கேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார் சக்தி.

சக்தி
சக்தி

மகன் பேசுவதைக் கண்ணிமைக்காமல் பார்த்து ரசிக்கும் திலகாவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ``என் நிலையில எந்தத் தாய் இருந்தாலும், தன் குழந்தையைக் காப்பாத்தணும்னுதான் போராடியிருப்பாங்க. அதைத்தான் நானும் செஞ்சேன். `இந்தியாவில் இந்த ஆபரேஷன் இதுவரை நடக்கலை. எனவே, சோதனை முயற்சியா உங்க புள்ளைக்கு ஆபரேஷன் செஞ்சாலும் சக்சஸ் கிடைக்குமான்னு தெரியலை. எதுக்கு லட்சக்கணக்கில் செலவு பண்ணி, சிரமப்படுறீங்க? இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்'னுதான் மருத்துவ வட்டாரத்தினர் உட்பட பலரும் சொன்னாங்க. `என் புள்ளை உயிர்பிழைப்பான்'னு நம்பிக்கையோடு இருந்ததுடன், அதுக்கான கடைசி முயற்சி எதுவானாலும் அதையெல்லாம் செய்து பார்க்கும் முடிவில் உறுதியா இருந்தேன்.

கணவரே மகனுக்குக் கல்லீரல் தானம் செய்ய முன்வந்தப்போ, `புள்ளைக்காக கணவரின் உயிரோடு விளையாடுறியே?'ன்னு என்கிட்ட சிலர் கேட்டாங்க. ஏற்கெனவே வேதனையுடன் இருந்த எனக்குக் கூடுதல் வலிதான் ஏற்பட்டது. கணவரையும் மகனையும் ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பிட்டு, நான் எதிர்கொண்ட தவிப்பு வார்த்தையால் விவரிக்க முடியாதது. ரெண்டு உயிர்களும் நல்லபடியா என்கிட்ட வந்திடணும்னு கடவுளை வேண்டிகிட்டே அழுகையோடு உட்கார்ந்திருந்தேன்.

மகனுடன் திலகா
மகனுடன் திலகா

`ஆபரேஷன் சக்சஸ்'னு மருத்துவர்கள் என்கிட்ட சொன்னப்போ, அளவுகடந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனேன். அந்தத் தருணத்தை எப்போ நினைச்சாலும் என்னை அறியாம கண்ணீர் வரும். பையன் டாக்டராகி, உயிருக்குப் போராடும் குழந்தைகள் பலரையும் காப்பாத்தணும். என்னைப் போல நிறைய அம்மாக்கள் மகிழ்ச்சியடையணும்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுபவர், மகனைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார்!

அடுத்த கட்டுரைக்கு