ஆளுக்கொரு பக்கம் சிதறிக்கிடந்த மாநில அரசாங்கங்களை ஒன்று சேர்த்திருக்கிறது ஜி.எஸ்.டி இழப்பீடு பிரச்னை. மத்திய அரசாங்கம் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்குப் பதிலாக, வேறு சில திட்டங்களை முன்வைக்க, பல மாநிலங்களின் முதல்வர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். மத்திய அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்படி என்னதான் சொன்னார்?
கடைசியாகக் கூடிய ஜி.எஸ்.டி கவுன்சிலில், மத்திய நிதி அமைச்சர் மாநில அரசுகளிடம் இரண்டு இழப்பீட்டுத் திட்டங்களை முன்வைத்தார். ‘‘கொரோனா பொருளாதார நெருக்கடியின் காரணமாக மத்திய அரசுக்கு சுமார் ரூ.3,00,000 கோடி வரை ஜி.எஸ்.டி வரி இழப்பு ஏற்படும். இதில் ரூ.65,000 கோடியை இழப்பீட்டு வரி மூலம் மத்திய அரசாங்கம் வசூலித்துத் தரும். இதுபோக மீதமுள்ள ரூ.2,35,000 கோடிக்கு மாநில அரசுகள் கடன் சந்தையில் கடன் பத்திரங்கள் வாயிலாகத் திரட்டிக் கொள்ளலாம். மாநில அரசுகள் இதற்கு ஒப்புக்கொண்டால், கடன் பத்திர வெளியீட்டுக்கு மத்திய அரசு உதவி செய்யும்’’ என்று சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடன் பத்திரச் சிக்கல்..!
மத்திய அரசாங்கத்தின் இந்த யோசனைகள் மாநில அரசாங்கங்களைக் கொதிப்படைய வைக்க பல காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது, கடன் பத்திரங்களை வெளியிடுவதில் இருக்கும் சிக்கல். மத்திய அரசாங்கம் சொல்கிற மாதிரி மாநில அரசாங்கங்கள் கடன் பத்திரங்களை வெளியிட்டு தங்களுக்கான பணத்தைத் திரட்டிக்கொள்வது முடியாத காரியமில்லை. ஆனால், அப்படிப் பத்திரங்களை வெளியிடும்போது, கடன் பத்திரங்களின் வட்டி விகிதங்கள் சந்தை நிலவரங்களை ஒட்டியே அமையும் என்பது கவனிக்கத்தக்கது.
பொதுவாக, கடன் பத்திரங்களை வெளியிடும்போது அதை வெளியிடுபவரின் நிதிநிலை எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்பதை வைத்தே அவர் கேட்கும் பணத்துக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். நிதிநிலை நன்றாக இருக்கும் ஒருவர் சந்தையில் குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும். ஆனால், நிதிநிலை குறித்து பல கேள்விகள் இருக்கும் நிலையில் ஒருவர் அதிக வட்டி தந்தே கடனைப் பெற வேண்டியிருக்கும். இதுதான் கடன் சந்தையில் உலகெங்கிலும் உள்ள நடைமுறை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதற்போதுள்ள நிலையில், மாநில அரசாங்கங்கள் கடன் பத்திரங்களை வெளியிட முயற்சி செய்தால், அதற்கு மிக அதிகமான வட்டியைத் தர வேண்டியிருக்கும். சில மாதங்களுக்குமுன் கேரள அரசாங்கம் தனக்குத் தேவையான பணத்தைக் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டியது. இந்தப் பத்திரத்துக்கு அந்த அரசாங்கம் 9 சதவிகிதத்துக் கும் மேல் வட்டி தர வேண்டியிருந்தது. ஆனால், அதே மத்திய அரசாங்கத்தின் கடன் பத்திரத்தின் மீதான வருமானம் 6 சதவிகிதத்துக்கும் கொஞ்சம் அதிகம் என்ற அளவிலேயே இருந்தது. இதனால், மத்திய அரசே இழப்பீட்டு நிதியைத் திரட்டி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.

கடன் சுமை அதிகரிக்கும்!
ஜி.எஸ்.டி மூலமாக மாநிலங்களுக்குத் தேவையான நிதியைத் தர முடியாத நிலையில், இன்னொரு யோசனையையும் முன் வைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். ரூ.97,000 கோடி ரிசர்வ் வங்கிகள் மூலமாக மாநில அரசாங்கங்கள் கடன் வாங்குவதே அந்த யோசனை. இப்படிக் கடன் பெறுவதற்கேற்ப நிதிக்கொள்கை மற்றும் பட்ஜெட் நிர்வாகம் (FRBM) சட்டத்தின்கீழ் மாநிலங்கள் அதிகப்படியாகக் கடன் பெறுவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார்.
ஆனால், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்கள் தனது மாநில ஜி.டி.பி-யில் 32% - 40% வரை கடன் வாங்கி விட்டன. தமிழக அரசாங்கம் வாங்கிய கடன் இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.4,56,000 கோடியாக உயரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், எந்த மாநில அரசாங்கம்தான் இன்னும் கடன் வாங்கும்? மாநில அரசாங்கங்கள் வாங்கும் ரூ.97,000 கோடியை மத்திய அரசாங்கமே செலுத்திவிடும் என மத்திய அரசாங்கம் சொல்லியிருந்தாலும், ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் மாநில அரசாங்கங்கள் இந்த முயற்சியை செய்யத் தயாரில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சட்டத்தை மீறுகிறாரா நிதி அமைச்சர்?
ஜி.எஸ்.டி அறிமுகமான பிறகு மாநிலங்களின் வரி வருவாய் உயர்வு ஆண்டுதோறும் (குறைந்தபட்சம்) 14 சதவிகிதமாக இருக்கும்; அவ்வாறு அதிகரிக்காவிடில், வரி இழப்பீட்டுத் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும். இந்தத் திட்டத்துக்கான அடிப்படை நிதியாண்டு 2015-16-ஆக இருக்கும். மாநிலங்களுக்கான இழப்பீட்டு நிதியைத் திரட்டுவதற்காக, சரக்கு மற்றும் சேவைகள் மீது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செஸ் (Compensation Cess) எனப்படும் கூடுதல் வரி விதிக்கவும் புதிய சட்டம் வழிவகுத்தது. ஆனால், இழப்பீட்டுத் தொகையைத் தரமுடியாது என நிதி அமைச்சர் சொன்னதன்மூலம் அவர் சட்டத்தை மீறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஜி.எஸ்.டி வேண்டவே வேண்டாம்!
மாநில அரசாங்கங்களின் வருவாய் குறையும் என்பதற்காகவே கடந்த காலத்தில் பல மாநில அரசாங்கங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மாநில அரசுகள் எதிர்பார்த்ததுபோல, இப்போது பல்வேறு நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியுள்ளன. இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் சொல்வதைக் கேட்டு கொதிப்படைந்திருக்கும் மகாராஷ்டிரா முதல்வர், ‘இனி ஜி.எஸ்.டி-யே வேண்டாம்; பழைய வரிமுறையையே கொண்டுவருவோம்’ என்று பேசும் அளவுக்குச் சென்றிருக்கிறார்.
கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சரிவு மத்திய அரசின் வருவாயைப் பெரிதும் பாதித்திருப்பது உண்மைதான். என்றாலும், மாநில அரசாங்கங்களின் வருமானமும் குறையவே செய்துள்ளன. இந்த விஷயத்தில் மாநில அரசாங்கங்கள் பாரதூரமான முடிவுகளை எடுத்துவிடாதபடிக்கு நல்ல முடிவை ஏற்படுத்தித்தருவது மத்திய அரசின் கடமை.
தமிழக அரசுக்குக் கடினம்!
பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்

“ஜி.எஸ்.டி இழப்பீடு தொடர்பாக மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் தமிழகத்துக்குக் கடினமானது. அதிகம் செலவு பிடிக்கக்கூடியது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.12,250 கோடி. இந்தத் தொகையைத் தராமல், வேறு யோசனைகளைச் சொல்வது மாநில அரசுக்குச் செய்யும் துரோகம். ஏற்கெனவே கடன் அதிகம் இருப்பதால், மேலும் கடன்களை தமிழக அரசால் வாங்க முடியாது. தவிர, சுயசாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் மாநிலத்தின் ஜி.டி.பி. மதிப்பில் ஒரு சதவிகிதம் வரை கடன் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டாவது வாய்ப்பும் மாநில அரசுகளின் நிலைகளைக் கவனத்தில் கொண்டு செய்யப்படவில்லை. ஆக, மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் மாநிலங்களுக்கு உரிய பிற ஒட்டுமொத்த ஆதாரங்களைக் குறைப்பதாக அமைந்திருக்கிறது.”