சாத்தான்குளம் இரட்டை மரணம் ஏற்படுத்திய சூடே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் தென்காசி மாவட்டம், கடையத்தில் அடுத்த விவகாரம். விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயியை வனத்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாகப் புகார் எழுந்து, ஏரியாவைத் தகிக்கவைத்திருக்கிறது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து. 75 வயது விவசாயியான அவர், தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்ததற்காக ஜூலை 22-ம் தேதி இரவு வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு நடந்தவற்றை நம்மிடம் விளக்கினார் அணைக்கரை முத்துவின் மகன் நடராஜன்.

‘‘இரவு நேரத்தில் வந்த வனத்துறையினர், யாருக்கும் தெரியாமல் அப்பாவை விசாரணைக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். நடு ராத்திரி எனக்கு போன் செய்து ‘விசாரணைக்கு வந்த இடத்தில் உங்கப்பாவுக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது’ என்றார்கள். பதறிப்போன நான், என் மைத்துனர் ஆறுமுககுமாரை அழைத்துக்கொண்டு ஒரு காரில் கிளம்பிச் சென்றேன். சிவசைலம் பாலம் அருகே சென்றபோது, எதிரில் வனத்துறை ஜீப் வந்தது. காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று பார்த்தபோது, எங்கள் அப்பாவை நடுவில் படுக்க வைத்து தலையை இரண்டு வனத்துறை ஊழியர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

பதறிப்போய் உள்ளே ஏறி அவரின் கையைப் பிடித்துப் பார்த்தேன். உயிர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. எங்களையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றார்கள். அங்கிருந்த மருத்துவர் வண்டியில் வைத்தே பரிசோதித்துவிட்டு ‘பல்ஸ் குறைந்துவிட்டது. உடனே தென்காசிக்குக் கொண்டு செல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார். தென்காசிக்குச் சென்றபோது ‘ஏற்கெனவே அவர் இறந்துவிட்டார்’ என்று சொல்லிவிட்டார்கள். தினமும் தோட்டத்துக்குச் சென்று வேலைகளைச் செய்யக்கூடிய அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தவரை, வனத்துறையினர் அடித்தே கொன்றுவிட்டார்கள்’’ என்று குமுறினார்.

வனத்துறையினரிடம் பேசியபோது, ‘‘நாங்கள் இரவில் அவரை அழைத்துச் சென்றோம். அங்கே சென்றதும் அனுமதியில்லாமல் மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டதுடன், அபராதம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாரே தவிர, யாரும் அவரைத் தொடக்கூட இல்லை’’ என்றார்கள்.

இதற்கிடையே, ‘வனவர் நெல்லை நாயகம் உள்ளிட்ட வனத்துறையினர் ஐந்து பேர்மீது கொலை வழக்கு பதிய வேண்டும். சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 25 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி ‘அணைக்கரை முத்து குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் பின்னரும் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்ததுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இது குறித்து அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி, ‘‘என் தந்தையின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததை அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவரான கார்த்திகேயன் நேரில் பார்த்துக் குறித்துக்கொண்டார். 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் ஏழைகள்தான். அதற்காக அடித்துக் கொன்றவர்கள்மீது வழக்கு பதியாமல், எங்களுக்குப் பணம் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா... எங்கள் அப்பா வந்துவிடுவாரா?’’ என்றார் காட்டமாக.

ஒரு வாரமாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடந்துவந்த நிலையில், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி டிஃபேன் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘அணைக்கரை முத்து மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர்மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். `மாலை 4 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது’ என்ற விதியை மீறி, இரவில் அவசர அவசரமாகப் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதனால், மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். அந்த வழக்கில் ஜூலை 30-ம் தேதி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் மூன்று மருத்துவர்களைக் கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தர விட்டார்.

இது பற்றிப் பேசிய அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி, ‘‘நீதிமன்றத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மறு உடற்கூறாய்வு செய்யும்போது என் அப்பாவின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவரும். வனத்துறையினருக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உடலை வாங்கச் சம்மதித்துள்ளோம்’’ என்றார்.

அப்பாவி மக்களின் உயிரைக் கொல்லும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வருமோ?