Published:Updated:

``ஐந்து வருட கடின உழைப்பின் பலன்!" - குமரியைச் சேர்ந்த முதல் பெண் ஐ.பி.எஸ் பிரவீனா

பிரவீனா
பிரவீனா

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐ.பி.எஸ் என்ற பெருமையை வசப்படுத்தியுள்ளார் பிரவீனா. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் மங்களநடையைச் சேர்ந்தவர் பிரேமசந்திரன். இவர் ஓய்வுபெற்ற சிறப்பு உதவிக் காவலர். இவரின் மனைவி ரெஜினா. இவர்களின் மூத்த மகன் டால்பின் பிரேம், இறகுப் பந்து பயிற்சியாளராக உள்ளார். 27 வயதாகும் இரண்டாவது மகள்தான் பிரவீனா.

பிரவீனா மதுரை தியாகராஜா கல்லூரியில் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, கோயம்புத்தூரில் உள்ள ஓர் அகாடமியில் யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் பயிற்சி பெற்றார். பின்னர், அங்கேயே மாணவர்களுக்குப் பாடம் நடத்தியவர், ஐந்து முறை யு.பி.எஸ்.சி தேர்வு எழுதினார். மூன்று முறை தோல்வி அடைந்தார்.

2018-ம் ஆண்டு தன் நான்காவது முயற்சியில் வெற்றிபெற்று ஐ.ஆர்.டி.எஸ் (IRTS - The Indian Railway Traffic Service) ஸுக்குத் தேர்வானார். லக்னோவில் ஐ.ஆர்.டி.எஸ் பயிற்சி பெற்று வந்தவர், ஐந்தாவது முறையாக யு.பி.எஸ்.சி தேர்வு எழுதினார். அதில் 445-வது இடம் கிடைக்க, ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வாகியுள்ளார் பிரவீனா. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐ.பி.எஸ் என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளார்.

பிரவீனா ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது போதகர் ஒருவர், `நீ ஐ.ஏ.எஸ் ஆகணும்' என்று சொல்லி அவரை ஊக்குவித்திருக்கிறார். அப்போதே சிவில் சர்வீஸ் தேர்வை மனதில் கொண்டு பல புத்தகங்களைப் படித்து வந்துள்ளார். இந்த வருடம் வெளியான யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்ற பெற்ற பிரவீனாவுக்கு, தரவரிசை அடிப்படையில் ஐ.பி.எஸ் கிடைக்க, குமரியைச் சேர்ந்த முதல் பெண் ஐ.பி.எஸ் என்ற பெருமையைப் பிடித்துள்ளார் பிரவீனா.

பெற்றோர் வாழ்த்து மழையில் பிரவீனா
பெற்றோர் வாழ்த்து மழையில் பிரவீனா

இதுபற்றி அவர் கூறுகையில், ``காவல்துறையில் பணியாற்றிய அப்பா உத்வேகம் கொடுத்துக்கொண்டே இருந்தார். இது ஐந்து வருட கடின உழைப்புக்குக் கிடைத்த பலன். மூன்றாம் முறையும் வெற்றியடையாதபோது, ஒரு தேக்கம் ஏற்பட்டது. ஆனாலும், தொடர்ந்து கடின உழைப்பைக் கொடுக்க, அது வெற்றி கிடைக்கச் செய்தது. ஒரு நாளில் 10 மணி நேரம் படிப்பேன். பயிற்சி அகாடமியில் பாடமும் நடத்தினேன்.

போட்டித் தேர்வு எழுத வருகிறவர்கள், கடின உழைப்புடன் பயிற்சி எடுக்க வேண்டும். `நீட்' உட்பட பல தேர்வுகள் கடினமாக இருப்பதாகத் தேர்வு எழுதச் செல்லும் முன் மாணவர்கள் தற்கொலை செய்வதைப் பார்க்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. தோல்வி அடைந்தாலும் துவளாமல், `அடுத்த முறை வெற்றி பெறுவேன்' என்ற நம்பிக்கை வர வேண்டும். அப்போதுதான் வெற்றி உங்கள் அருகில் வரும்.

பெற்றோருடன் பிரவீனா
பெற்றோருடன் பிரவீனா

இந்த நம்பிக்கை உங்களுக்கு வந்தால்தான், உங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கும் உங்கள் மீது நம்பிக்கை வரும். தேர்வோ, மதிப்பெண்ணோ, குறிப்பிட்ட படிப்போ வாழ்க்கை கிடையாது என்பதை உணர்ந்து, தற்கொலை எண்ணம் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடையாற்றில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் தங்கிப் படிக்கவும், ஊக்கத்தொகையும் அளித்த தமிழக அரசுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு