Published:Updated:

2K kids: ‘கரை மேல் பிறக்க வைத்தான்... எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்!”

ஒரு மீனவக் குடும்பத்தின் தினசரி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு மீனவக் குடும்பத்தின் தினசரி!

- ஒரு மீனவக் குடும்பத்தின் தினசரி!

பாரதி.பா

‘`ஓர் ஊர்ல ஓர் அழகான பொண்ணு இருந்துச்சு. அந்தப் பொண்ணு வேற யாருமில்ல நான்தான். சரி, சரி... டென்ஷன் ஆகாதீங்க. விஷயத்துக்கு வந்துடறேன். எங்களோடது மீனவக் குடும்பம். எங்கப்பா கடல்ல கால்வெச்சாதான், எங்களுக்கெல்லாம் சோறு. இப்படிப் பட்ட சூழல்ல இருக்கிற மீனவக் குடும்பங்களோட தினசரியெல்லாம் எப்படி இருக்கும்னு உங்களுக்குச் சொல்லத்தான் இந்தக் கட்டுரையே.

அப்பா, அண்ணா, மாமா, தாத்தா எல்லாருக்கும் மீன்பிடிக்கப் போறதுதான் தொழிலே. அவங்க பிடிச்சுட்டு வர்ற மீனை, துறைமுகத்துல வியாபாரிங்ககிட்ட விக்கிற வேலையை என்னோட அம்மாவும் பாட்டியும் பார்த்துப் பாங்க. கல்லூரியில படிக்கிறதால எனக்கும், என் தங்கச்சிக்கும் அது ஒண்ணுதான் முக்கியமான தொழில்.

2K kids: ‘கரை மேல் பிறக்க வைத்தான்... எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்!”

ஆம்பளைங்க அதிகாலையிலேயே கடலுக்குப் போயிடுவாங்க. அம்மா அவங்களுக்கு சாப்பாடு கொடுத்துவிடுவாங்க. பெரும்பாலும் பழைய சாதம்தான். கடல்ல போய் வலைய போட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்குவாங்க. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு வலையை எடுப்பாங்க. அதுல சிக்கியிருக்கிற மீன்களை ரகம் வாரியா பிரிச்சு கரைக்குக் கொண்டு வருவாங்க.

எல்லா நாளும் நிறைய மீன் கிடைக்கும்னு சொல்லிட முடியாது. சில நாள்கள்ல ஒரு மீன்கூட கிடைக்காம வெறுங்கையோட வீட்டுக்குத் திரும்புவாங்க. அந்த நாள்கள்ல வீட்டுல இருக்குறவங்க மேல அப்பா கோபப்படுவாங்க. அது உண்மையில கோபமில்ல, கடலன்னை ஏமாத்தின காயம்ங்கிறதால நாங்க அமைதியா இருந்துடுவோம். படகு, வலைனு முதல் போடறதோட... உயிரையே பணயம் வெச்சுதான் கடலுக்குள்ள ஒவ்வொரு நாளும் போயிட்டு வர்றாங்க. இப்படிப்பட்ட சூழல்ல போதுமான அளவுக்கு மீன் கிடைக்கலைன்னா, உழைப்பு மொத்தமும் வீண்தானே. அதனால கோபம் வர்றதும் இயல்புதானே!

கரைக்கு மீன்களைக் கொண்டு வந்து சேர்க்குறதோட ஆண்களோட வேலை முடிஞ்சிடும். அப்புறம்தான் பெண்களோட வேலை தொடங்கும். எங்கம்மாவும் பாட்டியும் அந்த மீனையெல்லாம் சுமந்துட்டுப் போய் துறைமுகத்துலயே வியாபாரிங்ககிட்ட விப்பாங்க. விலை குறைச்சுதான் பெரும்பாலும் கேட்பாங்க. அதனால சண்டைகூட போடவேண்டியிருக்கும். எல்லாத்தையும் சமாளிச்சாகணும். அதுக்குப் பிறகு கிடைக்கற காசை வெச்சுதான் வீட்டுக்குத் தேவையானது, எங்களுக்குத் தேவையானதுனு அம்மாவால வாங்கிட்டு வரமுடியும்.

2K kids: ‘கரை மேல் பிறக்க வைத்தான்... எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்!”

பொதுவா எங்க வீடுகள்ல வாரத்துல 5, 6 நாள்கள் மீன் சமையலாதான் இருக்கும். இதுல ஆச்சர்யம் என்னன்னா... என் தங்கச்சிக்கு மட்டும் மீன் பிடிக்காது.

வியாபாரத்தை முடிச்சுட்டு வீடு திரும்பினதும் அம்மாவுக்காகவே வீட்டு வேலைகள் காத்துட்டு இருக்கும். நாங்க காலேஜ்ல இருந்து வர்றதுக்குள்ள சமைச்சு வெப்பாங்க. எவ்ளோ கஷ்டம்னாலும் எங்ககிட்ட காட்டிக்க மாட்டாங்க. கார்த்திகை மாசம் போட்டை எடுத்துக்கிட்டு கடலுக்குப் போக முடியாது. ஏன்னா அது புயல், மழைனு பெரும்கொடுமைக் காலம். அப்போவெல்லாம் ரொம்ப கஷ்ட ஜீவனம்தான். அம்மாதான் எப்படியோ குடும்பத்தை சமாளிப்பாங்க. இன்னொருபக்கம், நடுக்கடலுல பார்டர் போட்டு உயிர் பயம் காட்டுற கொடுமையை மீனவர்கள் தினம் தினம் அனுபவிக்கணும். இலங்கை கடல் எல்லைக்குத் தப்பித் தவறி போயிட்டா, இலங்கை நேவி பிடிச்சிடுவாங்க. எங்கப்பா பல தடவை மாட்டி தப்பிச்சு வந்திருக்காரு. பிடிச்சா போட்டை தர மாட்டாங்க. ‘ஏம்ப்பா அந்தப் பக்கம் போனீங்க?’னு கேட்டா, ‘கடலுல கோடாம்மா தெரியும்..? மீனு நிறைய கெடக்கேனு போயிடுவோம்‘னு பாவமா சொல்லுவாங்க.

போனவாரம்கூட, ‘இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 28 மீனவர்கள், பருத்தித்துறை கடற்படை முகாமில் அடைப்பு’னு ஒரு நியூஸ். ம்... ஏற்கெனவே உயிரைப் பணயம் வெச்சுதான் எங்க மீனவக் குடும்பங்கள் கடலுக்குள்ள போகுது. இதுல இலங்கைக் கொடுமை வேற.

ரெண்டு நாட்டு அரசாங்கங்களும் இதைப் புரிஞ்சுக்க இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ?!