Published:Updated:

நெல்லை: நண்பனின் தாயிடம் தவறாக நடந்த ரெளடி; 5 வருடங்கள் கழித்துக் கொலை செய்த இளைஞர்கள்!

கொலை
கொலை

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தன் தாயிடம் தவறாக நடக்க முயன்ற ரௌடியை, தன் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற இளைஞரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

நெல்லை அருகேயுள்ள கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மகன் மாரியப்பன். 32 வயது இளைஞரான இவர்மீது இரு கொலை வழக்குகளும், சில வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கொலை
கொலை

கொண்டாநகரம் பகுதியில் ரௌடியாக வலம்வந்த மாரியப்பன், இன்று அங்குள்ள காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. போலீஸார், மாரியப்பன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், வெங்கட சுப்பிரமணியன் உள்ளிட்ட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிரகாஷ் என்ற 21 வயது இளைஞரின் நண்பர்கள் ஏழு பேர் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

ஐந்து வருடங்களாகக் காத்திருந்து ஏழு பேர் சேர்ந்து கொலையைச் செய்தோம்.
கொலையாளிகள் வாக்குமூலம்

பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், “இந்தப் பகுதியில் ரௌடியாக வலம் வந்த மாரியப்பன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்களின் நண்பன் பிரகாஷின் தாயிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றான். அப்போது 15 வயது சிறுவனாக இருந்த பிரகாஷால் எதுவும் செய்ய முடியவில்லை.

பிரகாஷின் தாயிடம் மாரியப்பன் நடந்துகொண்ட விதம் எங்களை வேதனை அடையவைத்தது. அதனால் மாரியப்பனைப் போட்டுத்தள்ள திட்டமிட்டுக் காத்திருந்தோம். அவர் குடித்துவிட்டு காட்டுப் பகுதி வழியாக பைக்கில் வந்தபோது ஏழு பேர் சேர்ந்து அவரை வழிமறித்து வெட்டிச் சாய்த்தோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் மாரியப்பன்
கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் மாரியப்பன்

இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவருமே 30 வயதுக்குக் குறைவானவர்கள். இதுவரை நான்கு பேர் பிடிபட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் பிரகாஷ் உள்ளிட்ட மூவரை போலீஸார் தேடிவருகிறார்கள். இந்தக் கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன், அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு