Published:Updated:

கந்துவட்டிக்கு வாங்கி துபாய்க்குச் சென்றவர் திடீர் மரணம்! - வயதான தாயாரைக் கொடுமைப்படுத்தும் கும்பல்

இரா.மோகன்
உ.பாண்டி

வெளிநாடு செல்வதற்காக கந்துவட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள், அவரின் வயதான தாய் முனியம்மாளிடம், முருகன் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மீனவரின் தாய்
மீனவரின் தாய்

பணம் கேட்டு மிரட்டும் கந்துவட்டிக் கும்பலிடமிருந்து வெளிநாட்டில் இறந்துபோன மீனவரின் தாயாரைப் பாதுகாக்கக் கோரி, ஏ.ஐ.டி.யு.சி மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் அவரை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

வட்டாட்சியர் அலுவலகம் வந்த மீனவர் சங்கத்தினர்
வட்டாட்சியர் அலுவலகம் வந்த மீனவர் சங்கத்தினர்

ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர், மீனவர் நம்பு முருகன். கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதம், மீன்பிடி ஒப்பந்தக் கூலியாக துபாய் நாட்டுக்குச் சென்றார். இதற்கென ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பணம் கடனாகப் பெற்றுள்ளார். இந்நிலையில், அங்குள்ள அமேரியா பகுதிக்குச் சென்று நசீர் அல்சாம்சி என்பவருக்குச் சொந்தமான படகு (NO.TS,307 ) ஒன்றில் மீன்பிடி கூலித் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார். அங்கு, தனக்குக் கிடைத்த வருவாயை ராமேஸ்வரத்தில் உள்ள தன் தாயாருக்கு அனுப்பியதுடன், அவர் மூலம் தான் வெளிநாடு செல்ல வாங்கிய கடன் தொகையையும் திருப்பிக்கொடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், துபாய் அமேரியா கடல் பகுதியில் கடந்த 2017 டிசம்பர் மாதம் 2-ம் தேதி, நம்பு முருகன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தலைசுற்றி கடலில் தவறி விழுந்துவிட்டார். 2 மணி நேர தேடலுக்குப் பிறகே அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக துபாய் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நம்பு முருகனின் தாயார் முனியம்மாள், தனது மகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மனு கொடுத்தார். ஆனால், மத்திய-மாநில அரசுகள் அவரது உடலை கொண்டுவர எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், இறந்த மீனவரின் இறப்புச் சான்று, பிணக்கூராய்வுச் சான்று ஆகிய ஆவணங்களையும் பெற்றுத்தரவில்லை.

போராட்டம்
போராட்டம்

அதனால், இறந்துபோன மீனவர் நம்பு முருகனின் வயதான தாய் முனியம்மாளின் வாழ்வாதாரத்துக்கு வழியின்றியும் அரசின் எவ்வித நிவாரணங்களும் பெற முடியாமலும் வறுமையில் வாடுகிறார். மீனவர் நம்பு முருகன் வெளிநாடு செல்வதற்காக கந்துவட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள், அவரது வயதான தாய் முனியம்மாளிடம், வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்குமாறு நெருக்கடிகொடுத்துள்ளனர். நம்பு முருகன் உயிருடன் இருந்தபோது, துபாயில் இருந்து அனுப்பிய சம்பளப் பணம் முழுவதையும், அவரது தாயார் கந்துவட்டி கும்பலுக்கே கொடுத்துள்ளார். ஆனால், அசலைவிட பலமடங்கு வட்டியைப் பெற்றுக்கொண்ட கந்துவட்டிக் கும்பல், நம்பு முருகனின் இறப்புக்குப் பின்னரும் அவரது தாயாரிடம் தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டிவருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, முனியம்மாள் வீட்டுக்குச் சென்ற கந்துவட்டிக் கும்பல், வீட்டை காலிசெய்யச் சொல்லி மிரட்டியுள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார்செய்தார். விசாரணை நடத்திய தனுஷ்கோடி காவல்துறையினர், முனியம்மாளுக்கு உரிய வழி காட்டாமல், கந்துவட்டிக் கும்பலுக்கு சாதகமாகப் பேசியுள்ளனர். அப்போது, காவல் நிலையத்திற்கு உள்ளேயே முனியம்மாவை கந்துவட்டி கும்பல் மிரட்டியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தராத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், இறந்த மீனவர் குடும்பத்தை கந்துவட்டிக் கும்பலிடமிருந்து பாதுகாக்கத் தவறிய தனுஷ்கோடி காவல் நிலைய போலீஸாரைக் கண்டித்தும் ஏ.ஐ.டி.யூ.சி மீனவத் தொழிலாளர் சங்கத்தினர், கந்துவட்டிக் கும்பலால் மிரட்டலுக்குள்ளான முனியம்மாவை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு கோரி மனு கொடுக்கும் முனியம்மாள்
பாதுகாப்பு கோரி மனு கொடுக்கும் முனியம்மாள்

முனியம்மாவை ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக வந்த மீனவத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் உள்ளிட்ட தொழிலாளர்களுடன் வட்டாட்சியர் அப்துல்ஜபார் பேச்சுவார்த்தை நடத்தினார். இறந்து போன மீனவரது தாய்க்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் கிடைக்க மீன்துறை அதிகாரிகள்மூலம் நடவடிக்கை எடுக்கவும், கந்துவட்டிக் கும்பலிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இதையடுத்து, தங்களது ஒப்படைக்கும் போராட்டத்தை மீனவர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.