Published:Updated:

``ஆதரவற்றக் குழந்தைகளை அனுதாபத்தோடு அணுகாதீங்க!" - `மனிதத்தால் வளர்த்தெடுக்கப் பட்ட' சௌமியா

உசிலம்பட்டி மருமகள்

சுனாமியில் பெற்றோரை இழந்த 3 வயது 9 மாதங்கள் ஆன பெண் குழந்தை ஒன்றைக் கன்னியாஸ்திரிகள் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். அவர் தற்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மருமகளாக வந்திருக்கும் சௌமியா.

``ஆதரவற்றக் குழந்தைகளை அனுதாபத்தோடு அணுகாதீங்க!" - `மனிதத்தால் வளர்த்தெடுக்கப் பட்ட' சௌமியா

சுனாமியில் பெற்றோரை இழந்த 3 வயது 9 மாதங்கள் ஆன பெண் குழந்தை ஒன்றைக் கன்னியாஸ்திரிகள் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். அவர் தற்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மருமகளாக வந்திருக்கும் சௌமியா.

Published:Updated:
உசிலம்பட்டி மருமகள்

தமிழகக் கடலோர மக்கள் அன்று கோலாகலமாக கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி முடித்துவிட்டு உறங்கச் சென்றபோது, மறுதினம் ஒரு கறுப்பு நாள் விடியக் காத்திருந்ததை அவர்கள் அறியவில்லை.

2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி தாக்கியதில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்தும் நிலைகுலைந்து போயின. குறிப்பாக சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களில் பலரை சுனாமி காவு வாங்கியது. எத்தனையோ பேர் தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தங்கை என உறவுகளை இழந்து தவித்தனர். அதில் மிகவும் கொடுமை எத்தனையோ குழந்தைகளும், முதியோர்களும் தங்களின் உறவு, உடைமை, இருப்பிடம் எதுவும் இன்றி நிர்க்கதியாய் நின்றனர்.

செளமியா
செளமியா

அப்படியான குழந்தைகளுக்காகத் தமிழக அரசு சார்பில், கடலோர மாவட்டங்களில் இல்லங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் திறக்கப்பட்ட அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம். இந்த இல்லம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 80 குழந்தைகள் வரை இருந்து வருகின்றனர்.

அந்த வகையில், சுனாமியில் பெற்றோரை இழந்த 3 வயது 9 மாதங்கள் ஆன பெண் குழந்தை ஒன்றை கன்னியாஸ்திரிகள் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். அவர் தற்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மருமகளாக வந்திருக்கும் சௌமியா. ஆதரவற்ற பெண்ணை மணம் முடிக்க விரும்பிய அவர் கணவர் சுபாஸின் தேடலில் கிடைத்துள்ளார் சௌமியா என்பது, அழகிய கவிதை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செளமியா-
செளமியா-

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, புது மணமக்கள் விருந்துக்கு வந்திருந்த சௌமியாவை சந்தித்துப் பேசினோம்.

``அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயின்றேன். 6 முதல் 12-ம் வகுப்பு வரை நாகப்பட்டினம் வெளிபாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். பிறகு ஏடிஎம்சி மகளிர் கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸ் முடித்துள்ளேன்.

எனக்கு செளமியா எனப் பெயரிட்டு, காதுகுத்தி, படிக்க வைத்து, திருமணமும் நடத்தி வைத்தது அந்த இல்லம்தான். அதை நான் காப்பகமாக நினைத்ததே இல்லை. அதுதான் என் வீடு. காப்பாளராக இருந்த மகாலட்சுமி அம்மா, உதவியாளராக இருந்த சிவகாமி அம்மா என்னையும், என்னைப்போலவே பெற்றோரை, உறவுகளை இழந்து வந்த மீனாவையும் மிகவும் அன்போடு தங்களின் பிள்ளைகள் போல பார்த்துக்கொண்டனர். மகாலட்சுமி காப்பாளரை என் சொந்த அம்மா எனவும், எங்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது துணிகள், இனிப்புகள் வாங்கிக் கொடுத்து, ஸ்போக்கன் கிளாஸ் எடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் மாரிமுத்துவைதான் சொந்த அப்பா எனவும் விவரம் தெரியாத காலத்தில் நினைத்திருந்தேன். எனக்கு மாரிமுத்து அப்பாதான் வெள்ளி மற்றும் தங்க ஆபரணம் வாங்கிக் கொடுத்து காதுகுத்து நிகழ்ச்சியை நடத்தினார். அவரைப் போல சென்னையைச் சேர்ந்த மார்க்கண்டேயன் அப்பாவும் எங்களின் சிறுவயது முதல் தற்போது வரை பணஉதவி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவரை இதுவரை நாங்கள் நேரில் பார்த்ததே இல்லை.

செளமியா-சுபாஸ்
செளமியா-சுபாஸ்

பள்ளிக் காலங்களில் எனக்கு பயிற்றுவித்த கிரிஜா, கோமலவள்ளி, வசந்தா, சாந்தி, விஜி, கல்லூரி காலத்தில் எனக்கு பயிற்றுவித்த கவிதா ஆகிய ஆசிரியைகள் என்னை சொந்த மகளைப் போலவே பார்த்துப் பார்த்து வளர்த்தனர்.

எங்கள் இல்லம் தொடங்கப்பட்டபோது, நாகை மாவட்ட கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் அப்பா அடிக்கடி இல்லத்துக்கு வந்து செல்வார். குழந்தைகளின் மீது மிகுந்த அக்கறையோடு இருப்பார். எங்கள் இல்லத்தில் உள்ள அனைவரும் அவரை அப்பா என்றே அழைப்போம். அப்பா பணி மாறுதல், உயர் பதவி என்று சென்ற பின் அவ்வப்போது போனில் எங்களிடம் நலம் விசாரித்துக்கொள்வார். கஜா புயலின்போது மீண்டும் எங்களைச் சந்திக்க வந்தார். அப்போது எனக்கும் மீனாவுக்கும் பணஉதவி செய்துவிட்டு என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள் எனக் கூறினார்.

கல்லூரி முதலாமாண்டு படிக்கும்போது எனக்கு 18 வயது நிறைவடைந்திருந்ததால், எங்கள் இல்லத்தில் மேற்கொண்டு தங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் சைல்டு வெல்ஃபேர் கமிட்டியில் மெம்பராக இருந்த வழக்கறிஞர் மலர்விழி அம்மாவின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் எங்கள் இல்லத்துக்கு அடிக்கடி வருவார்கள். என்னவோ தெரியவில்லை அவரிடம் நான் மிகவும் நெருங்கிப் பழகத் தொடங்கினேன்.

சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்போ என்னவோ தெரியவில்லை. இல்லத்தில் உள்ள யாரிடமும் நான் அவ்வளவு நெருக்கமாக இருந்தது இல்லை. என்னை விட சிறு குழந்தைகளுடன் சேர்ந்து சொப்பு சாமான்களை வைத்து விளையாடுவதே எனது பொழுதுபோக்காக இருந்தது. ஆனால், மலர்விழி அம்மாவிடம் மிகவும் சாதாரணமாக மனம்விட்டு பேசினேன். அவரும் என்னையும் மீனாவையும் மிகவும் அன்பாகப் பார்த்துக் கொண்டார்.

18 வயதுக்கு மேல் எங்களால் இல்லத்தில் தொடர்ந்து தங்க முடியாத சூழலில், மலர்விழி அம்மா என்னையும் மீனாவையும் அவரது வீட்டுக்கே அனுமதி பெற்று அழைத்துச் சென்று வளர்க்கத் தொடங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரிடம்தான் வளர்ந்தோம்.

கல்லூரிப் படிப்பை முடித்த நான், மேற்கொண்டு எம்எஸ்டபுள்யூ படிக்க ஆசைப்பட்டேன். அம்மாதான் உதவினார். அப்ளை செய்துள்ளேன். விரைவில் படிப்பைத் தொடரவுள்ளேன். மீனா, அம்மா வீட்டில் தங்கி நான் படித்த கல்லூரியில்தான் பி.ஏ வரலாறு படித்து வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்கள் மலர்விழி அம்மா, அவரின் கணவர் மணிவண்ணன் அப்பா, அவர்களின் மகள் மதுவதனி, மகன் மதிவர்ஸன் ஆகியோர் ஒரே குடும்பமாக இருந்தோம். இதற்கிடையேதான் நல்ல வரன் வருவதாகவும், மூன்று மகள்களையும் நல்ல இடத்தில் சேர்க்க வேண்டும் எனவும் அம்மா கூறினார். திருமணத்தை முடித்துவிட்டு கல்வியைத் தொடர வாய்ப்புள்ள இடத்தைத் தேர்வு செய்யலாம் எனவும் கூறியிருந்தார்.

என் கணவர் சுபாஸ், ஆதரவற்ற பெண் ஒருவரை மணம் முடிக்க வேண்டும் என்று விரும்பியவர். எனவே, அவரும் அவர் குடும்பத்தினரும் என்னைப் பெண் கேட்டு மலர்விழி அம்மாவை அணுகினர். முதல் பேச்சுவார்த்தையிலேயே இருதரப்புக்கும் பிடித்துவிட்டதால் உடனே திருமண ஏற்பாடுகள் நடத்தன. அம்மா, ராதாகிருஷ்ணன் அப்பாவை திருமணத்தை நடத்தி வைக்க அழைத்தார். அவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடத்தது.

எத்தனையோ நாள்கள் என் மனதில் உள்ளதை வெளிப்படுத்த முடியாமலும், ஒரு மிட்டாய், பென்சில் வாங்கக்கூட வழியில்லாமல் இருந்த காலத்தையும் கடந்திருக்கிறேன். ஆனால், சிறுவயது முதல் தற்போது வரை உன்னதமான மனிதம்தான் என்னை வளர்த்தெடுத்து வந்துள்ளது. எத்தனையோ நல்ல உள்ளம் கொண்டவர்கள் எங்கள் தேவைக்கு அதிகமாகவே உதவினர். அன்பு செலுத்தினர். முகம் பார்க்காத ஒருவர் எனக்குத் தொடர்ந்து உதவி கொண்டிருப்பதெல்லாம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கெல்லாம் நான் தினமும் நன்றி கூறுவேன்.

திருமணம்
திருமணம்

``என்னைப் போன்ற குழந்தைகளுக்காக இருப்பேன்...''

என் இல்லத்திலும், அருகே உள்ள முதியோர் இல்லத்திலும் இருந்தவர்களைச் சந்திக்க சமீபத்தில் சென்றிருந்தேன். பேசி முடித்துத் திரும்பியபோது, அவர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர். அந்தக் கண்ணீர், அவர்கள் என் மீது கொண்டுள்ள அன்பு. அதேபோல மலர்விழி அம்மா, சிவகாமி அம்மா என் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு என்னை கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர் விட்டு வழி அனுப்பியது என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது.

திருமணம் செய்துகொள்ள முதலில் தயங்கினேன். தற்போது என் கணவர் சுபாஸ், அவரின் குடும்பத்தினர் என்னை மகளாகவே பார்க்கின்றனர். என் கணவர் என் கல்வியைத் தொடர முழு ஒத்துழைப்பு தருகிறேன் எனவும், அதைத் தொடர்ந்து சமூக சேவை செய்ய இருக்கும் என் எண்ணத்துக்கு மதிப்பளிக்கக் கூடியவராகவும் இருப்பது, எனக்குக் கூடுதல் ஆசீர்வாதம்.

எவ்வித உறவும் இன்றி நாட்டில் எத்தனையோ குழந்தைகள் கைவிடப்படுகின்றனர். அந்தக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அதை இலக்காக வைத்தே எனது பயணம் இருக்கும். நான் கடந்து வந்த பாதையில் நான் கசப்பாக உணர்வது ஒன்றைத்தான். சிலர், ஆதரவற்றக் குழந்தைகளை அனுதாபத்தோடு அணுகுகிறார்கள். அந்த அனுதாபம் குழந்தைகளை மிகவும் காயப்படுத்தும். அதை வார்த்தைகளால் சொல்லத் தெரியவில்லை.'' - இந்த உலகம் தன்னை அள்ளி அணைத்து வளர்த்து ஆளாக்கிய கதையை நிறைந்த மனதுடன் சொல்லி முடித்தார் சௌமியா.

செல்வி
செல்வி

``மாறிவருகிறது உசிலம்பட்டி...''

செளமியாவின் அண்ணி செல்வி, ``என் தம்பி சிறு வயதில் இருந்தே பெற்றோர் இல்லாத பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறிவந்தார். அதுபோலவே இப்போது சௌமியாவை திருமணம் முடித்துவிட்டார். தற்போது எங்கள் உறவினர்கள் தரப்பில் இருந்து சிலர், பெற்றோர் இல்லாத பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என என்னிடம் விசாரிக்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உசிலம்பட்டி பாப்பாபட்டி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். உசிலம்பட்டி என்றாலே ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலை பிரச்னையே நினைவுக்கு வரும். இப்போது, யாரும் இல்லாத பெண்ணை எங்கள் வீட்டுப் பெண் ஆக்கிக்கொள்ளும் ஆசையுடன் காத்திருக்கும் அளவுக்கு இங்கு நிகழ்ந்துள்ள மாற்றத்தை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.