Published:Updated:

பணியின்போது கான்ஸ்டபிள்; மீதி நேரத்தில் டீச்சர்! - உ.பியைக் கலக்கும் `லேடி போலீஸ் ஆபீசர்’

இங்குள்ள குழந்தைகளின் அறியாமை எனும் இருளை துடைத்து அவர்களின் வாழ்வில் கல்வியின் சூரியன் உதயமாகும் என நம்புவதாகக் குட்டான் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

குட்டான் சௌத்ரி
குட்டான் சௌத்ரி ( ANI )

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் குர்ஜா பகுதியைச் சேர்ந்தவர் குட்டான் சௌத்ரி (Guddan Choudhary). பெண் கான்ஸ்டபிளான இவர் தன் பணி நேரம் முடிந்து மீதியுள்ள நேரங்களில் தன் பகுதியில் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்து வருகிறார். குர்ஜா நகரில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் குட்டான் சௌத்ரி.

குட்டான் சௌத்ரி
குட்டான் சௌத்ரி
ANI

” நான் குர்ஜா பகுதியில் கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்வதற்கு முன்பிலிருந்து இங்குள்ள ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறேன். இங்குள்ளவர்களில் பல குழந்தைகள் வறுமையின் காரணமாகக் கல்வியை இழந்தவர்கள். அவர்களுக்குச் சம உரிமை மற்றும் கல்வி கிடைக்க வேண்டும் என நினைத்து இதைச் செய்து வருகிறேன். நம் வாழ்நாளில் அனைவரும் சில மணி நேரங்கள் ஒதுக்கி, கல்வி பயில முடியாத குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டும்” என ஏன்.என்.ஐ செய்தி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார் சௌத்ரி.

குர்ஜா மக்கள் சௌத்ரியை ‘லேடி போலீஸ் ஆபீசர்’ என்றுதான் அழைக்கிறார்கள். அங்கு வசதியில்லாத பல குழந்தைகள் தற்போது தங்களுக்குச் சலுகைகள் கிடைப்பதாகவே உணருகிறார்கள். ஏனெனில் சௌத்ரி மூலமாக அவர்களுக்கு இலவசக் கல்வி கிடைத்துள்ளது.

மாணவர்கள் - மாதிரி புகைப்படம்
மாணவர்கள் - மாதிரி புகைப்படம்

” கான்ஸ்டபிளாக என் பணி நேரம் முடிந்ததும் சில மணி நேரம் இந்தக் குழந்தைகளுக்காகச் செலவிடுவேன். தற்போது இந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ளேன். அதற்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளேன். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு இந்த மாணவர்களை அவரின் பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என சௌத்ரி கூறியுள்ளார் .

Vikatan

கல்வி மட்டுமல்லாது தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 30 முதல் 40 சதவிகிதம் பணத்தை இந்தக் குழந்தைகளுக்கு புத்தகங்கள், கையேடுகள், பேனா, பென்சில் போன்ற இதர படிப்பு தொடர்பான பொருள்கள் வாங்குவதற்குச் செலவிடுகிறார் குட்டான் சௌத்ரி. தற்போது இவரிடம் படிக்கும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பித்துள்ளார். அதுவே குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் அவர்கள் பள்ளியில் சேர்வதற்கும் மிக முக்கியமானதாக இருக்கும் எனக் கருதி இதைச் செய்துள்ளார்.

பாடமெடுக்கும் குட்டான் சௌத்ரி
பாடமெடுக்கும் குட்டான் சௌத்ரி
ANI

சௌத்ரியின் செயல் பற்றிப் பேசிய தேவி என்ற குழந்தையின் பெற்றோர், ``எங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்கமுடியாத அளவு நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். ஆனால் போலீஸ் ஆபீசர் மேடம் எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் எங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளிக்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.