Published:Updated:

தென்காசி: இரு சக்கர வாகனத்தில் பயணம்! - பாதி வழியில் இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு

இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு, நடுவழியில் வாகனத்துக்கு உள்ளிருந்து வெளியே வந்திருக்கிறது. பின்னர் வாகன ஓட்டியைக் கடித்துவிட்டு மீண்டும் வாகனத்துக்குள் பாம்பு மறைந்துகொண்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர், சண்முகவேல். அவருடைய மகன் முப்பிடாதி. செங்கோட்டையில் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்துவருகிறார். முப்பிடாதியின் வீடு செங்கோட்டை-கொல்லம் சாலையில் இருக்கிறது.

பாம்பு பயணம் செய்த பைக்
பாம்பு பயணம் செய்த பைக்

முப்பிடாதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டில் நிறுத்தியிருந்திருக்கிறார். இன்று டீ குடிக்க வெளியே செல்வதற்காகத் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ரோட்டில் சென்றிருக்கிறார். அப்போது அவரது காலில் ஏதோ கடித்ததுபோல இருந்திருக்கிறது. ஏதாவது வண்டு கடித்திருக்கும் என நினைத்து பைக்கில் தொடர்ந்து பயணம் செய்திருக்கிறார்.

மீண்டும் அவரது காலில் ஏதோ கடித்ததால் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பார்த்திருக்கிறார். அப்போது வாகனத்திலிருந்த பாம்பு மீண்டும் அவரை இரு முறை கடித்திருக்கிறது. அதனால் அச்சம் அடைந்த அவர் பைக்கைக் கீழே போட்டுவிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்திருக்கிறார். அதற்குள்ளாக பாம்பு அவரது வண்டிக்குள் மீண்டும் பதுங்கிக்கொண்டது.

பிடிபட்ட பாம்பு
பிடிபட்ட பாம்பு

காலில் நான்கு இடத்தில் பாம்பு கடித்த தடம் இருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பின்னர், வாகனத்தில் மறைந்திருந்த விஷம் மிகுந்த நல்ல பாம்பை வெளியேற்ற முயன்றனர். ஆனால், பாம்பு எங்கேயோ மறைந்து கொண்டதால் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரும் வனத்துறையினரும் பொதுமக்கள் உதவியுடன் இரு சக்கர வாகனத்திலிருந்து பாம்பை விரட்ட முயன்றனர். ஆனால், பாம்பு இரு சக்கர வாகனத்தில் பதுங்கியதால் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர், வாகனத்தின் சில பாகங்களைப் பிரித்து அதில் மறைந்திருந்த பாம்பைப் பிடித்தார்கள்.

பாம்பு இருந்த பைக்
பாம்பு இருந்த பைக்

பிடிபட்ட நல்ல பாம்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. பாம்பு கடிபட்ட முப்பிடாதி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், தென்காசி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தற்போது குளிர் காலம் என்பதால், இரு சக்கர வாகனத்தில் விஷப் பாம்புகள் ஏறிப் பதுங்கும் வாய்ப்பு இருப்பதால், பைக்கை எடுக்கும் முன்பாக முழுமையாகப் பரிசோதனை செய்த பின்னரே பயணம் மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு