Published:Updated:

பப்ஜி கேம்; வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் மாயம்! - பெற்றோரை அதிரவைத்த சிறுவன்

பப்ஜி கேம்
பப்ஜி கேம்

மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தன்னுடைய தாயாரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்தை எடுத்து, தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியிருக்கிறான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பப்ஜி ஆன்லைன் கேம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், அதைச் சட்டவிரோதமாக ஏராளமானோர் விளையாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த விளையாட்டு இளைய சமுதாயத்தின் தூக்கத்தையே கெடுத்துக்கொண்டிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தன் வீட்டுக்குத் தெரியாமல் பப்ஜி கேம் விளையாடியிருக்கிறான். இந்த கேம் விளையாடத் தேவையான ஐடி மற்றும் கரன்ஸி வாங்க தன்னுடைய தாயாரின் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைப் பயன்படுத்தியிருக்கிறான். மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவன் இப்போது பள்ளிகள் அடைக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலும் மொபைல்போனிலேயே மூழ்கிக்கிடந்தான். பெற்றோரும் அவனைச் சரியாக கவனிக்கவில்லை. சிறுவன் எப்போதும் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான்.

பப்ஜி விளையாட்டு
பப்ஜி விளையாட்டு

ஒரு கட்டத்தில் அவனுடைய தாயார் தனது வங்கிக்கணக்கை பார்த்தபோது 10 லட்சம் ரூபாய் மாயமாகியிருந்தது. உடனே என்னவென்று விசாரித்தபோதுதான் அவர்களின் மகன் வீட்டுக்குத் தெரியாமலேயே பப்ஜி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்திருப்பது தெரியவந்தது. உடனே சிறுவனை அவனுடைய தந்தை கண்டித்தார். இதனால் கோபமடைந்த அந்தச் சிறுவன் 'இனி வீட்டுக்கு வர மாட்டேன். குட்பை' என்று கடிதம் மட்டும் எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டான். கடிதத்தைப் பார்த்த அவனது பெற்றோர் இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்தனர்.

 நாமக்கல்: பப்ஜி கேம் விளையாடிய மாணவர்! - பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த பரிதாபம்

16 வயது சிறுவன் என்பதால் போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான குழு சிறுவனை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சிறுவனிடம் மொபைல்போன் இருந்ததால், அவன் எங்கிருக்கிறான் என்பதை போலீஸார் கண்டுபிடித்து 24 மணி நேரத்தில் மீட்டனர். அந்தேரி மகாகாளி கேவ்ஸ் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு போலீஸார் கவுன்சலிங் கொடுத்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். இது குறித்து துணை கமிஷனர் தத்தா நலவாடே கூறுகையில், ``அதிகப்படியான கேள்விகள் கேட்டு சிறுவனை மன அழுத்தத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றார். மற்றொரு போலீஸ் அதிகாரி இது குறித்து கூறுகையில், ``அதிக அளவில் ஆன்லைன் மோசடிகள் நடப்பதால், குழந்தைகளின் நடவடிக்கையில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு