Published:Updated:

நெல்லையில் 100 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த மயில்! -மீட்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மயில்
வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மயில்

இறகுப் பகுதியில் அடிபட்டதால், விவசாய கிணற்றில் விழுந்த மயில் வெளியே வர முடியாமல் தத்தளித்தது. அதை மீட்க அப்பகுதி மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், தீயணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் கள்ளிக்குளம் அருகே உள்ள ஆனைக்குளம் புதூரைச் சேர்ந்தவர் முத்து.  68 வயது  நிரம்பிய இவர், விவசாயம் செய்துவருகிறார். அவருக்குச் சொந்தமான தோட்டம் ஆனைக்குளம் புதூரில் இருக்கிறது. 

ஆழமான கிணறு
ஆழமான கிணறு

அவரது விவசாய நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கான பம்ப் செட் கிணறு அங்கு அமைந்துள்ளது. சுமார் 100 அடி ஆழம் கொண்ட அந்த விவசாயக் கிணற்றில் தற்போது 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருக்கிறது.

மீட்கப்பட்ட `கவை முக ஆந்தை...' சாலைக்கு வந்த கட்டுவிரியன் பாம்பு... ஒரு கள அனுபவம்!

தோட்டத்துக்குச் சென்ற முத்து, கிணற்றில் எவ்வளவு ஆழத்துக்கு தண்ணீர் இருக்கிறது எனப் பார்த்தபோது, உள்ளே ஒரு மயில் தண்ணீரிலிருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த மயிலை மீட்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்புப்படை வீரர்
கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்புப்படை வீரர்

அதனால் அருகில் உள்ள தோட்டத்தில் இருந்த விவசாயிகளை அழைத்த அவர், மயிலை வெளியே கொண்டுவர முயற்சி எடுத்தார். ஆனாலும் அவர்களால் மயிலை மீட்க முடியவில்லை. இறக்கைப் பகுதியில் அடிபட்டதால் பறக்க முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. அதனால் வள்ளியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வள்ளியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், மயிலை உயிருடன் மீட்கும் முயற்சியைத் தொடங்கினார்கள். கயிறு கட்டி மயிலை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதனால் சுமார் 80 அடி ஆழத்தில் தத்தளித்த மயிலை மீட்பதற்காக தீயணைப்புப்படை வீரர்கள் தங்களின் உடலில் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார்கள். 

மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர்
மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர்

அதன் பின்னர்தான் தண்ணீருக்குள் தத்தளித்த மயில் மீட்கப்பட்டது. அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மயிலை மீட்க துணிச்சலுடன் உயிரைப் பணயம்வைத்து கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்களை விவசாயிகள் பாராட்டினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு