Published:Updated:

ராகுல் பற்றி என்ன சொல்கிறார் ஒபாமா?

ஒபாமா
பிரீமியம் ஸ்டோரி
ஒபாமா

ஒபாமாவின் இந்திய வருகையின்போது, மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடனும் நேர்ந்த சந்திப்பைப் பற்றி புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் ஒபாமா.

ராகுல் பற்றி என்ன சொல்கிறார் ஒபாமா?

ஒபாமாவின் இந்திய வருகையின்போது, மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடனும் நேர்ந்த சந்திப்பைப் பற்றி புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் ஒபாமா.

Published:Updated:
ஒபாமா
பிரீமியம் ஸ்டோரி
ஒபாமா
அமெரிக்க அதிபர்களில் தனித்துவ அடையாளம் கொண்டவர் பாரக் ஒபாமா. ஆப்ரோ அமெரிக்க அடையாளமும் இஸ்லாமிய அடையாளமும் இணைந்து உருவான ஒபாமா அமெரிக்க அதிபரானது புதிய நம்பிக்கையின் வெளிச்சமாகப் பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்தும் இன்னும் முடிவுகளை ஏற்க மறுத்து ட்ரம்ப் அடம்பிடிக்கும் நேரத்தில், ஒபாமா மீது சர்ச்சை ஒளி வட்டமடித்திருக்கிறது. காரணம், சமீபத்தில் வெளியாகி யுள்ள அவரது ‘எ பிராமிஸ்டு லேண்டு’ (A Promised Land) புத்தகம்.

அவரது ஆரம்பக்கால அரசியல் வாழ்வில் தொடங்கி, மனைவி, குழந்தைகள், அதிபர் தேர்தல் பிரசாரங்கள், அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளின் முக்கிய தலைவர்கள், அதிபராக எடுத்த முக்கிய முடிவுகள், நம்பிக்கைகள், தவறுகள் எனச் சகலத்தையும் பேசுகிறது இந்த வரலாற்று நினைவுக்குறிப்பு (memoir). 2011-ம் ஆண்டு ஒசாமா பின் லேடெனின் மரணம் வரை 701 பக்கம் கொண்ட இந்தப் புத்தகம் முதல் பாகம்தான்.

ஒபாமாவிற்கு இது முதல் புத்தகம் அல்ல, அதிபராவதற்கு முன்னர் இரண்டு புத்தகங் களையும், அதிபராக இருந்த போது குழந்தைகளுக்கான ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன், அமெரிக்காவின் அடுத்த அதிபராக வெற்றிபெற்றிருக்கும் நிலையில் இந்தப் புத்தகம் அமெரிக்காவின் வருங்கால அரசியல், அமெரிக்காவின் பார்வையிலிருந்து உலக அரசியல் என இரண்டைப் பற்றியுமான பெரும் புரிதலைக் கொடுக்கிறது. ஒருவேளை அமெரிக்காவின் தேர்தலுக்கு முன்னர் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டிருந்தால் நிச்சயம் இந்தப் புத்தகம் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவின் இதிகாசங்கள், இந்திய அரசியல், காந்தி எனப் பலவிஷயங்களை இந்தப் புத்தகம் பேசுகிறது. எனினும், இந்திய அரசியல் தலைவர்கள் பற்றி ஒபாமா வெளியிட்டுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

2009 முதல் 2017 வரை தொடர்ந்த ஒபாமாவின் அதிபர் பயணத்தில், 2011-ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் இந்த முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. 2009-ம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது. மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக இருந்தார்.

ராகுல் பற்றி என்ன சொல்கிறார் ஒபாமா?

ஒபாமாவின் இந்திய வருகையின்போது, மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடனும் நேர்ந்த சந்திப்பைப் பற்றி புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் ஒபாமா. “மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதார மாற்றத்தின் தலைமைச் சிற்பியாகச் செயல்பட்டவர். பல ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சீக்கிய மதச் சிறுபான்மை வகுப்பிலிருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். இதைக் காங்கிரஸ் கட்சி தன்னுடைய மதச்சார்பற்ற அரசியல் நடுநிலைமையாகக் காட்டிக்கொள்ள முற்பட்டது. ஆனால் உண்மையில், அடுத்த வாரிசாகச் சோனியா வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த ராகுல் காந்திக்கு, எந்த அரசியல் பின்புலமும் இல்லாத மன்மோகன் சிங் ஒரு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதே அவர் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின் இருக்கும் காரணம்” என்று வெளிப்படையாகவே தன் கருத்தை முன்வைத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் இரவு விருந்தில் கலந்துகொண்ட நிகழ்வைப் பற்றி எழுதுகையில், “சோனியா மிகவும் தீர்க்கமான, ஆளுமை நிறைந்த பெண். அன்றைய விருந்தில் அவர் அதிகம் பேசவில்லை. நிறைய கவனித்தார். மிகக் கவனமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றிய உரையாடல்களை மன்மோகனே பேசும்படி செய்தார். அவ்வப்போது ராகுல் குறித்தும் உரையாடல் திரும்பும்படி பார்த்துக்கொண்டார்.

ராகுல் காந்தி முற்போக்கான அரசியல் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அதே நேரம், அவரிடம் ஒரு பதற்றத்தையும், பக்குவமில்லாத தன்மையையும் கண்டேன். முழுப் புத்தகத்தையும் படித்துவிட்டு ஆசிரியரிடம் நற்பெயர் எடுக்க விரும்பும் மாணவரைப்போல மனநிலை கொண்டிருந்தாலும் அதில் ஆழ்ந்த அறிவைப் பெறக்கூடிய விருப்பமோ, தகுதியோ பெறாமலிருக்கிறார்” என்றும் மெல்லிய விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

தற்போதைய இந்தியப் பிரதமர் மோடியைப் பற்றி நேரடியாகக் குறிப்புகள் இந்த முதல் பாகத்தில் இடம்பெறவில்லை. ஆனால் சோனியா காந்தியின் விருப்பப்படி ஆட்சி செங்கோல் ராகுல் காந்தியிடம் சேருமா அல்லது பா.ஜ.க-வின் பிரித்தாளும் தேசியவாதக் கொள்கைகள் வெல்லுமா என்ற கேள்வியை இந்தப் புத்தகத்தில் எழுப்பியிருக்கிறார். 2015-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின்போது இரண்டாவது முறையாக இந்தியா வந்தார் ஒபாமா. அதைக் குறித்த அவரது கருத்துகள் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் இடம்பெறலாம்.

இவைதவிர்த்து, ஒபாமா அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் சந்தித்த தோல்விகள், தன்னுடைய முதல் செனட் தேர்தலின் போது மனைவி மிஷேல் ஒபாமாவுடனான பிணக்கு, அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது, தன்னுடைய புகைப்பழக்கம். அமெரிக்காவின் அதிபராகத் தான் அமல்படுத்திய மூன்று முக்கிய சட்டங்கள் என விரிவாக அவரது அரசியல் வாழக்கையை விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

அமெரிக்க அதிபரின் வாழ்க்கை நினைவுக் குறிப்பு என்பதைத் தாண்டி, ஒபாமா என்ற தனிமனிதனின் வளர்ச்சியும் வாழ்க்கையும் மிகைப்படுத்தல் இல்லாமல் யதார்த்தமாக எழுதப்பட்டிருப்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு. சுயவிமர்சனத்தோடு, பிழைகளுடைய சராசரி மனிதனாக ஒபாமா இந்தப் புத்தகம் வழி தன்னைத் திறந்துகாட்டியிருக்கிறார்.

வெளியான 24 மணிநேரத்தில் 8,90,000 பிரதிகள் விற்று உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறது ‘A Promised Land.’அமெரிக்காவின் முந்தைய அதிபர்களின் நினைவுக்குறிப்புகளின் முதல் நாள் விற்பனையைவிட இரண்டுமடங்கு அதிகம். வெள்ளை மாளிகையில் வசித்த பிரபலங்களின் நினைவுக்குறிப்புகளில் இதற்கு முன்பு அதிகம் விற்ற புத்தகம் எது தெரியுமா, மிஷல் ஒபாமாவின் ‘Becoming’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism