Published:Updated:

“பாரதியை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்!”

பாரதி நினைவின் நூற்றாண்டு
பிரீமியம் ஸ்டோரி
பாரதி நினைவின் நூற்றாண்டு

பாரதி நினைவின் நூற்றாண்டு

“பாரதியை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்!”

பாரதி நினைவின் நூற்றாண்டு

Published:Updated:
பாரதி நினைவின் நூற்றாண்டு
பிரீமியம் ஸ்டோரி
பாரதி நினைவின் நூற்றாண்டு

நவீனத் தமிழ்ச் சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்வுவெளியில் முன்வைத்த, பதிவுசெய்த வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி. தற்போது, ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன’த்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் சலபதி, ‘எழுக, நீ புலவன்!’, ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ போன்ற நூல்களை எழுதியும், ‘பாரதி: ‘விஜயா’ கட்டுரைகள்’, ‘பாரதி கருவூலம்’, ‘பாரதியின் சுயசரிதைகள்’ உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தும் பாரதி இயலுக்கு மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு, சமகாலத்தின் பாரதி ஆய்வாளர்களில் முக்கியமானவரான சலபதியைச் சந்தித்து உரையாடினேன்.

சலபதி
சலபதி

“மாணவப் பருவம் தொடங்கி இன்று வரை பாரதி பற்றிய உங்கள் பார்வை வளர்ந்து வந்த விதம் குறித்துப் பகிர முடியுமா?”

“பாரதி நூற்றாண்டு தொடங்கியதும் நான் தமிழ் வாசிப்புக்குள் நுழைந்ததும் ஒரே ஆண்டில் - 1981. அப்போது நான் பத்தாம் வகுப்பு மாணவன். மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்து முடிந்திருந்த காலம். தமிழக அரசும் தமிழ்ச் சமூகமும் கோலாகலமாகப் பாரதி நூற்றாண்டைக் கொண்டாடின. இக்கொண்டாட்டம் பெரிய மன எழுச்சியை உண்டாக்கியது.

வ.உ.சி-யின் மீது தீவிரப் பற்றுகொண்டிருந்த எனக்கு, அவரைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற வேட்கை உண்டாகியது. அப்படித்தான் ஆய்வுலகத்தில் நுழைந்தேன். வ.உ.சி-யைப் புரிந்துகொள்ள பாரதியின் எழுத்துகள் இன்றியமையாத கருவி அல்லவா? பாரதி நூல்களைத் தேடிப்படித்தேன். அவற்றின் தகவல் அடித்தளத்தில் இருந்த குறைபாடுகள் அவரைப் பற்றிய ஆய்வுக்கும் என்னை இழுத்துச் சென்றன.

வ.உ.சி., பாரதி, பெரியார், புதுமைப்பித்தன் ஆகியோர் மூலமாக, ஒரு வரலாற்று மாணவனாக இந்த மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்ள முயன்றுவருகிறேன். இவர்களுடைய எழுத்தும் செயல்பாடும் தமிழ்ச் சமூகத்தின் மீது ஒளிபாய்ச்சுகின்றன. தமிழ்ச் சமூக வரலாறு, இவர்களுடைய எழுத்தையும் செயல்பாட்டையும் புரிந்துகொள்ள முன் நிபந்தனையாக உள்ளது.

வள்ளுவனுக்கு அடுத்து பாரதியே தமிழ்ச் சமூகம் அதிகம் கொண்டாடும் ஆளுமை என்று சொல்லலாம். அவரது வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறார். தொடக்கத்தில் பிரம்ம ஞான சபையையும் அன்னி பெசன்ட்டையும் கடுமையாக விமர்சித்த பாரதி, பின்பு அவருடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார். வ.உ.சி-யைப் போலல்லாமல், திலகரின் தொண்டராக இருந்தவர் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்கிறார். பிராமணர் அல்லாதோர் இயக்கம், நீதிக் கட்சி பற்றிய பாரதியின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், ஒரு கவிஞனைக் கருத்துரீதியாக மட்டுமே அணுகுவதும் பிழை. பாரதியை இன்று படிக்கும் இளைஞர் ஒருவர், இன்றைய சமூகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைய மாட்டார் என்றே நினைக்கிறேன். தமிழ்ச் சமூகம் மேலும் முற்போக்கடைய வேண்டும் என்பதே பாரதியைப் படிப்பதால் அவருக்கு ஏற்படக்கூடிய உணர்வாக இருக்கும்.”

“பாரதியை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்!”

“பாரதி சார்ந்து இன்னும் கண்டறியப்படாதவை, துலக்கமில்லாதவை என்று நீங்கள் கருதுபவை யாவை?”

“பாரதி பிறந்த நூற்றாண்டுக்குப் பிறகான இந்த 40 ஆண்டுகளில் பல பாய்ச்சல்கள் நிகழ்ந்திருக்கின்றன. சீனி. விசுவநாதனின் ‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற சாதனை நிகழ்ந்திருக்கிறது. ய.மணிகண்டன் வெளியிட்டுவரும் கட்டுரைகள், பாரதி ஆய்வில் நிலவிய தேக்கத்தை உடைத்து, பாரதியியலை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. பாரதியின் அறியப்படாத எழுத்துகளின் சில நூறு பக்கங்களை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.

பாரதியின் பொது வாழ்க்கை 17 ஆண்டுகள். அதில் பத்து ஆண்டுகளுக்கு மேல் புதுச்சேரியில் அறிவிக்கப்படாத சிறைவாசம். பொது வாழ்வில் அவர் சுதந்திரமாகச் செயல்பட்டது நான்கு ஆண்டுகள்தான். 1918-ல் சிறைவாசத்துக்குப் பிறகு பாரதி உடல், மனம் என இரண்டு நிலையிலுமே நொடிந்துவிட்டார். ஆகவே 1904 –1908 என்ற காலகட்டம் அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. 1904 நவம்பரில் சென்னைக்கு வரும் 22 வயது பாரதி, மேடையில் பாடல்களைப் பாடுகிறார், பேசுகிறார், பத்திரிகை நடத்துகிறார், எழுதுகிறார், அரசியல் செயல்பாட்டாளராக இருக்கிறார், ஊர்வலம் போகிறார். இந்த உக்கிரமான காலத்தில் ஓர் ஆண்டுக்கான ஆதாரத் தளம் முழுவதுமாகவே கிடைக்கவில்லை. இது மிகப்பெரிய இடைவெளி அல்லவா? 1911 ஜூனில் ஆஷ் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தோடு தொடர்புடைய பெரும்பாலானோர் தங்களிடமிருந்த பத்திரிகைகள், கடிதங்கள் போன்ற தடயங்களை அழித்துவிட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று கருதுகிறேன். ஆதாரங்களைவிட முக்கியமாக, நம்பகமான தகவல்களின் அடிப்படையிலான ஆய்வுகள் போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை. அரைத்த மாவை அரைப்பதாகவே அவை பெரும்பாலும் இருக்கின்றன.”

“இந்த நிலைமைக்குக் காரணம் என்ன?”

“கடந்த ஒரு நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஆனால் அறிவியல், தொழில்நுட்பத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை நாம் சமூக அறிவியல் கல்விக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம். கடந்த இரண்டு மூன்று தலைமுறையில் பெயர் சொல்லக்கூடிய, அனைத்துலகம் மதிக்கக்கூடிய தமிழக வரலாற்றாசிரியர்கள், சமூகவியலாளர்கள், மானிடவியலாளர்கள் எத்தனை பேர்? தமிழிலக்கியம் பயின்றவர்கள்தான் இந்தத் துறைகளிலெல்லாம் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள்.”

“பாரதி ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளுக்குச் செல்லும்போது இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா?”

“ஆங்கிலம் கற்ற தமிழ் நடுத்தர வர்க்கம், தமிழ்ப் பண்பாட்டைக் கைவிட்டுவிட்டது. அமர்த்தியா சென், கௌசிக் பாசு போன்ற வங்காளி அறிஞர்கள் தாகூரை தம் எழுத்திலும் பேச்சிலும் எப்படியாவது நுழைத்துவிடுவார்கள். தமிழுக்கு எத்தனை பெரிய பாரம்பரியம் இருக்கிறது... பட்ஜெட் தாக்கலின்போது மட்டும் எப்போதாவது ப.சிதம்பரம் திருக்குறள் வாசிப்பார்; நம்முடைய விஞ்ஞானிகள் தமிழுக்கு அந்நியப்பட்டு நிற்கிறார்கள். மார்கழி சீசனில் தவறாமல் கச்சேரி கேட்கவரும் நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் தமிழ் படிப்பாரா என்று தெரியவில்லை.

இந்தியாவில் ஆங்கிலப் பதிப்புச் சூழல் என்பது வங்காளிகளால் நிறைந்திருக்கிறது. இவர்களிடம் தமிழ் சார்ந்த ஒரு விஷயத்தை விளக்குவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

பாரதியை ஆங்கிலத்துக்கு எடுத்துச் செல்கிறவர்களும் இல்லை. சில மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன, அவ்வளவே. இந்திய/உலக அறிவுலகம் என்பது ஆங்கிலத்தின் மேலாதிக்கத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தில் ஒருவரைக் கொண்டுசெல்லவில்லை என்றால், அவர் இல்லாதவராகத்தான் கருதப்படுவார். கடந்த பத்தாண்டுகளில் நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகள் ஆங்கிலத்தில் வந்துகொண்டி ருக்கின்றன. ஆனால் தமிழ் சார்ந்த கட்டுரை நூல்களை எழுதுவோர் மிகக் குறைவு.”

“இந்தச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு? இந்த நிலை மாறுமா?”

“கண்டிப்பாக மாறும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மாணவர்கள் மொழி, இலக்கியம், சமூகவியலைத் தமிழ்நாட்டுக்கு வெளியே கற்றுவருகிறார்கள். அடுத்த கட்டமாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலமாகக் கட்டாயமாக விரைவில் ஒரு மாற்றம் வரும். ஆங்கிலப் பதிப்புச் சூழலிலும் சில நல்ல மாற்றங்கள் தென்படுகின்றன. நாம் ஆற்றலுள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் தமிழ் அறிவுலகம் விரிவடைய முடியும்.”

“பாரதியை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்!”

``பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் இப்போது ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் நிலையில், பாரதி வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் திட்டம் உங்களிடம் இருக்கிறதா?”

“ஓர் எழுத்தாளனின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவது என்பது உலகத்தில் எங்குமே நடந்ததில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் அது நடந்திருக்கிறது. பாரதியின் படைப்புகளை 1949-ல் தமிழக அரசாங்கம் நாட்டுடைமை ஆக்கியது. அந்த வரலாற்றை ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ என்ற தலைப்பில் தமிழில் எழுதிய பிறகு ஆங்கிலத்திலும் ‘Who Owns that Song? The Battle for Subramania Bharati’s Copyright’ என்ற நூலாக வெளியிட்டேன். இது பாரதி வாழ்க்கை வரலாற்றை நோக்கிய ஒரு படிதான். ஆங்கிலத்தில் நான் எழுதிவரும் பெரியார் வரலாறு நான் திட்டமிட்டதைவிட அதிக காலம் எடுத்துக்கொண்டுவருகிறது. பெரியாருக்கு அடுத்து பாரதிதான்.”

“பாரதியின் தேவை எதுவரை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“ஒவ்வொரு தலைமுறையும் தனக்கான உந்துசக்தியைத் தேடிக்கொண்டுதான் இருக்கும். மன எழுச்சியை ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகள் இல்லாமல் ஒரு சமூகம் இயங்க முடியாது. ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்’ என்று பாரதி கேட்டார். நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த வரியைக் கேட்கும்போது மனம் பதறுகிறது. இந்த ஆற்றாமை தீரும் வரை பாரதி நமக்குத் தேவைப்படுவார். என்னைப் பொறுத்தவரை பாரதி மூட்டிய கனல் இன்னும் நெஞ்சில் கனன்றுகொண்டுதான் இருக்கிறது.”