Published:Updated:

`முன்பெல்லாம் ஊரே பச்சை... இப்போ மிச்சம் இதுதான்!' - காவிரி படுகையில் கலங்கவைத்த பயணம்

ரயில் நிலையம்
News
ரயில் நிலையம்

மழை அனுபவத்தை உணர நீங்கள் சிரபுஞ்சிக்குத்தான் செல்ல வேண்டும் என்று இல்லை காவிரிப் படுகையிலும் உணரலாம்.

`முன்பெல்லாம் ஊரே பச்சை... இப்போ மிச்சம் இதுதான்!' - காவிரி படுகையில் கலங்கவைத்த பயணம்

மழை அனுபவத்தை உணர நீங்கள் சிரபுஞ்சிக்குத்தான் செல்ல வேண்டும் என்று இல்லை காவிரிப் படுகையிலும் உணரலாம்.

Published:Updated:
ரயில் நிலையம்
News
ரயில் நிலையம்

``எங்க பக்கம் ஊர் பேருக்குப் பின்னாடி நிறைய `பட்டி’னு வரும். அது மாதிரி உங்க பக்கம் ஊருக்கு முன்னாடி நிறைய `திரு’னு வருது. ஊருபேரே மரியாதையா இருக்கே!” என்றான், அரசுப் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ஊர் பெயர் பலகைகளைக் கவனித்து வந்த நண்பன். யோசித்தேன், ஆமாம் திருவாரூர், திருநெய்பேர், திருக்கரவாசல், திருக்குவளை, திருநெல்லிக்காவல், திருக்கொல்லிக்காடு, திருத்துறைப்பூண்டி... இப்படி நிறைய `திரு’. இந்தத் தனித்த அடையாளம் எப்படி என் கவனத்துக்கு வராமல் இருந்தது. ஒருவேளை சொந்த ஊர் என்பதால் வேறு கோணத்தில் பார்த்து பழகவில்லையோ என்னவோ.

`முன்பெல்லாம் ஊரே பச்சை... இப்போ மிச்சம் இதுதான்!' - காவிரி படுகையில் கலங்கவைத்த பயணம்

பேருந்தின் துருப்பிடித்துப் புடைத்த ஜன்னல் கம்பிகளில் மழைநீர் குமிழ் குமிழாகத் தேங்கி பெரும் துளியாகிச் சிதறி குளிரச் செய்தது. மழையோடு சேர்ந்து கனத்து வீசிய சாரல் காற்று, பேருந்தின் உள்ளிருக்கும் எங்களுக்குப் பெரும் அருவியின் ஓரம் நிற்பது போன்ற ஓர் உணர்வை அளித்தது. ஆற்றுநீரில் விளையாடி கரையேறும் யானையின் தோல் நிறம்போல், ஈரத்தில் கறுத்து வளைவில்லாமல் நீண்டு கிடந்தது திருவாரூர் - திருத்துறைப்பூண்டிச் சாலை. புளிய மரங்களும் பனை மரங்களும் அலங்கரித்து நிற்கும் இந்தச் சாலையை இரவு நேரங்களில் நீங்கள் கடக்கும்போது குகைக்குள் செல்வதுபோல் தோன்றும்.

மழை துளியா, கூட்டமா? மழை சில நேரம் குழந்தையின் சிரிப்பை போலிருக்கிறது. சில நேரம் மிருகத்தின் மூர்க்க உறுமல்போல இருக்கிறதே...!
எஸ். ராமகிருஷ்ணன்

நாலுரோட்டிலிருந்து கிராமங்களுக்குள் செல்லும் வலதுபுற சாலையில் பேருந்து நுழைந்தது. வயல் வரப்புகளில் நெளியும் நீர்ப் பாம்பைப்போல அந்தக் குறுகிய சாலை சென்றது. மழை தன் உக்கிரத்தைக் குறைத்து ஓரிரு துளிகளைப் பூமியில் இறக்கியது. மழையோடு உறவாடிய வண்டல்மண் சேறாக மிதிபட்டு மனிதர்கள், விலங்குகளின் தடங்களைப் பதிவுசெய்து கொண்டிருந்தது.

இந்தக் கிராமங்களும் அவற்றை இணைக்கும் சாலையும், குளங்களும் ஆறும், மரம் செடிகொடிகளும், வயல்வெளிகளோடுதான் என் 23 ஆண்டுக்கால வாழ்வு. வாகன இரைச்சலில், புகையால் பொசுங்கிய காற்றைச் சுவாசித்து, இறுகிய கட்டடங்களுக்குள் புழுங்கி நெளிந்து நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் என் மனம் கிராமத்து வாழ்வைத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

`முன்பெல்லாம் ஊரே பச்சை... இப்போ மிச்சம் இதுதான்!' - காவிரி படுகையில் கலங்கவைத்த பயணம்

திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றது பேருந்து. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அக்காலத்தில் திருக்குவளையிலிருந்து சைக்களில் இங்குவந்து ரயிலேறிதான் திருவாரூர் செல்வாராம். 8 வருடங்களுக்கு முன் இங்கிருந்துதான் கல்லூரி செல்வோம். அப்போது டவுனுக்கு செல்ல ரயிலில் 2 ரூபாய் டிக்கெட். இப்போது அகல ரயில் பாதையாக மாற்றும் விரிவாக்கப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தூர்வாரப்படாமல் கருவேலமரங்களால் நிரம்பி இருந்த வெண்ணாற்றங்கரையில் பேருந்து சென்றது. திடீரென சிறு அச்சமும் படபடப்பும்.

ஜன்னலுக்கு வெளியே விரிந்து கிடந்த வயல் சார்ந்த மருதநிலம் நான் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் பார்த்தது போன்று இல்லை. அன்று நெல் நாற்றால் நிரம்பிய நிலப்பரப்பு அந்தச் சாம்பல் வானம் வளையும் தூரம்வரை பரவிக்கிடக்கும். இப்போது விளை நிலங்களை விலைநிலமாக மாறியும் முட்செடிகள் படர்ந்தும் ஆங்காங்கே திட்டுத் திட்டாக மட்டுமே விவசாயம் நடைபெற்றது. காரணம் காலநிலை மாற்றமும் வற்றிய காவிரியும்தான்.

இதற்குத் தீர்வு காண நாம் என்ன செய்யப் போகிறோம்?

ஒருபோகம் மட்டுமே விவசாயம் செய்து எப்படி வருடம் முழுவதும் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்? சென்னையில் இரவு நேரங்களில் சாலையோரம் சைக்கிளில் டீ வியாபாரம் செய்யும் நிறைய பேரிடம் பேசி இருக்கிறேன். ``ஊர்ல மழ, தண்ணி இல்லப்பா, விவசாயம் பண்ணமுடியாம இப்படிப் பஞ்சம் பிழைக்க வந்துட்டேன்”னு சொல்லுவார்கள். இன்றைய டெல்டா விவசாயிகளின் நிலையும் இதுதான்.

`முன்பெல்லாம் ஊரே பச்சை... இப்போ மிச்சம் இதுதான்!' - காவிரி படுகையில் கலங்கவைத்த பயணம்

பேருந்திலிருந்து இறங்கினோம் மழையில் ஊர் குளித்துத் தெளிந்திருந்தது. மரங்களும் ஓலைக்கூரைகளும், ஓட்டு வீடுகளும் மழைநீரை வடித்துக்கொண்டிருந்தன. வெளிர் பச்சையான இளம் நெல் நாற்றுகளால் நெய்யப்பட்ட வயல்வெளியைப் பார்த்த நண்பன். ``உங்க ஊரில் இது சீஸன் டைமா? ஒரே பச்சையா இருக்கு” என்றான்.

“இது மிச்சம் இருக்குற பச்சை... முன்பெல்லாம் ஊரே பச்சையாதான் இருக்கும்” என்றேன். வயல்வெளியின் பசுமை தன் பின்னால் தெரிவதுபோல கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டான். இந்தப் பசுமை உருவாக்கத்தில் எத்தனை மனிதர்களின் உழைப்பு தொடர்கிறது, இதை நம்பி எத்தனை உயிர்கள் இங்கு பிழைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்று இது படமெடுக்கும் காட்சிப்பொருளாக மாறியிருக்கிறது. இதை எண்ணும்போதே குற்ற உணர்வு தொற்றிக்கொண்டது. இதேநிலை நீடித்தால் இயற்கை நம்மை உண்டு, தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அதற்குச் சாட்சியே கஜா புயலும் சென்னை, கேரளா, ஒடிசா பெருவெள்ளங்களால் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களும். இன்றைய சூழலில் நமக்குத் தேவையான வளர்ச்சி என்பது கிராமங்களை மறு உருவாக்கம் செய்து மீட்டெடுப்பதேயாகும்.