Published:Updated:

எரியும் காஷ்மீரில் இரவுப்பயணம்!

பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர்

தொடங்கிவிட்டது குளிர்காலம். துவைத்து எடுத்தது உறைபனி. வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ். உடலை ஒட்டிக்கொண்டிருந்த வெம்மையாடைகளைத் தாண்டி உடலுக்குள் ஊசியாய் இறங்கியது குளிர்.

எரியும் காஷ்மீரில் இரவுப்பயணம்!

தொடங்கிவிட்டது குளிர்காலம். துவைத்து எடுத்தது உறைபனி. வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ். உடலை ஒட்டிக்கொண்டிருந்த வெம்மையாடைகளைத் தாண்டி உடலுக்குள் ஊசியாய் இறங்கியது குளிர்.

Published:Updated:
பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர்

ரவு நேரத்தில் வாகனத்தின் உள்ளே விளக்கு எரியவேண்டும். கண்ணாடிகளை இறக்கியிருக்க வேண்டும். வெளியிலிருந்து விசில் சத்தம் கேட்டால், உடனே வாகனத்தை நிறுத்திவிட வேண்டும். கைகளைத் தூக்கியபடி இறங்க வேண்டும். இதைச் செய்யவில்லையென்றால் யாராயிருந்தாலும் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள். இவையெல்லாம் இந்தியாவில்தான். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஜம்மு–காஷ்மீரில்தான் இந்த நிலை. யாரோ சொல்லிக் கேட்டதில்லை இவை. நேரில் பார்த்தவை.

2019 அக்டோபர் 18... சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட 74ஆம் நாளில் நானும் போட்டோகிராபர் கார்த்திகேயனும் ஸ்ரீநகரில் இருந்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடங்கிவிட்டது குளிர்காலம். துவைத்து எடுத்தது உறைபனி. வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ். உடலை ஒட்டிக்கொண்டிருந்த வெம்மையாடைகளைத் தாண்டி உடலுக்குள் ஊசியாய் இறங்கியது குளிர். பகல் நேர காஷ்மீரைப் பார்த்துப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்ட எங்களுக்கு இரவில் எப்படியிருக்கிறது காஷ்மீர் என்று அறிந்துகொள்ள ஆசை. இருவரும் வெளியே போகலாம் என்று கிளம்பினோம்.

பிளாஸ்டிக் புல்லட்
பிளாஸ்டிக் புல்லட்

நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின் மேனேஜர் முதியவர், எங்களைப் பார்த்து ‘‘எங்கே கிளம்பிட்டீங்க?’’ என்று கேட்டார். ‘‘சும்மா... அப்படியே டெளன்டவுன் ஏரியா பக்கம் ஒரு ராத்திரி ரவுண்ட் அப் போயிட்டு வரலாம்னு...’’ என்று முடிப்பதற்குள் பதறிக்கொண்டு எங்கள் பக்கத்தில் ஓடிவந்தார்.

‘‘ஸ்ரீநகரின் முக்கியமான ஏரியா அது. டிரை ஃப்ரூட்ஸ், சால்வை, கம்பளம், தங்கம் என பிஸியான கமர்சியல் ஏரியா. நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுக்க 10 சதவிகித வன்முறைச்சம்பவங்கள் நடந்தால், மீதி 90 சதவிகிதம் டெளன்டவுன் ஏரியாவுலதான் நடக்கும். அங்கே தடை உத்தரவு அமலில் இருக்கிறது. பார்லிமென்ட் எலக்ஷன்ல அந்த ஏரியாவுல இருக்குற 90 வாக்குச்சாவடிகள்ல ஒரு ஓட்டுகூடப் பதிவாகலை. மத்திய அரசின் நடவடிக்கையில் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். யாராவது மாட்டினால், சுட்டுப்பொசுக்க ராணுவம் அலைகிறது. அங்கே போய் மொழி தெரியாத நீங்கள் மாட்டிக்கொண்டால் சின்னாபின்னமாகிவிடுவீர்கள். பேசாமல் போய்த்தூங்குங்கள்!’’ என்று அன்பாய் அதட்டினார். அவரிடம் ‘வாக்கிங்’ போய் வருவதாக பொய் சொல்லிவிட்டு, ‘டெளன்டவுன் செல்லவேண்டும்’ என்று அங்கிருந்த டாக்ஸி டிரைவரிடம் கேட்க நம்மை ஏற இறங்கப் பார்த்தவர், ‘‘வருகிறேன். குறிப்பிட்ட தூரம்தான் வரமுடியும். அதற்கு மேல் வரமாட்டேன்!’’ என்று கண்டிஷன் போட்டார். கிளம்பினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரவு மணி 10.00

லால்சவுக் ஏரியாவில் ‘சடன் பிரேக்’ அடித்து காரை நிறுத்திய டிரைவர், அதற்கு மேல் தன்னால் வர இயலாது என்று சொல்லிவிட்டு விருட்டென காரைக் கிளப்பினார். வெறிச்சோடிய தெருக்கள். தடித்த நாய்கள் கும்பல்கும்பலாக குரைத்தபடி நடமாடின. தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பூட்டிக்கிடந்த கடைகளின் கதவுகளின் ஷட்டர்களில்...‘கோ இண்டியா... கோ பேக்... வீ வான்ட் ஃப்ரீடம். சேவ் காஷ்மீர்!’’ என்கிற வார்த்தைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதி வைத்திருந்தார்கள்.

பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர்
பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர்

ஸ்ரீநகரின் லேண்ட்மார்க் இடங்களில் லால்சவுக் ஏரியாவும் ஒன்று. அங்கே ஒரு மணிக்கூண்டு இருக்கிறது. அதைச்சுற்றிலும் ஏகப்பட்ட கடைகள். மூடிக்கிடந்தன. ஆங்காங்கே மத்திய ரிசர்வ் படையினரின் கூண்டு வண்டிகள் நின்றிருந்தன.

காதைச்சுற்றியிருந்த குல்லாவைத் தாண்டி விசில் சத்தம் செவிப்பறையைக் கிழிக்க உள்ளுக்குள் உதறல் அடித்தது. கூண்டு வண்டி ஒன்று நம்மை நோக்கி வந்தது. அதிலிருந்து இறங்கி வந்த ராணுவ அதிகாரி, ‘‘யார் நீங்கள்...என்ன செய்கிறீர்கள்?’’ என்று விசாரித்தார். நம்மைப்பற்றிச் சொன்னோம். தீவிரவாதிகள் இல்லை என்பதை பல்வேறு சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டபின், அவரின் முகத்தில் மாற்றம்.

சில்லி கிரானைடு
சில்லி கிரானைடு

‘‘இந்த நேரத்தில் இங்கே வந்ததே தப்பு. புகைப்படமெல்லாம் எடுக்கிறீர்கள். உடனே, கிளம்புங்கள். இல்லாவிட்டால், கைது செய்யவேண்டிவரும்!’’ என்று எச்சரித்தார். நம்மைப்பற்றி வயர்லெஸ்ஸில் யாரிடமோ தகவல் சொல்லிவிட்டு, ‘`இங்கேயே கொஞ்சநேரம் நில்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். கூண்டு வண்டியும் தள்ளிப்போய் நின்றது. அதன் தலைப்பகுதியில் நின்ற ராணுவவீரர்களின் துப்பாக்கிகள் எங்கள் இருவரையும் குறிபார்த்துக் கொண்டிருப்பதை யதேச்சையாக கவனித்தோம். சிலைபோல நின்றிருந்தோம்.

சிவப்புக்கொடி கட்டிய ராணுவ ஜீப்புகள் படை சூழ குண்டுதுளைக்காத பொலிரோ கார் ஒன்று லால் சவுக் மணிக்கூண்டை வட்டமிட்டு நின்றது. தபதப வென அதிலிருந்து குதித்த வீரர்கள் நான்கு திசை நோக்கியும் துப்பாக்கிகளை நீட்டியபடி பொசிஷன் எடுத்து நின்றனர். காரிலிருந்து இறங்கினார் ஓர் உயரதிகாரி. அவரும் நம்மிடம் விசாரித்தார். விளக்கம் சொன்னோம். அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்தார். அவரும் நம்மை விட்டுத் தள்ளிப்போய் நின்றபடி, அவரின் உயரதிகாரிகளுடன் பேச ஆரம்பித்தார். அங்கிருந்த படைவீரர் ஒருவர் நம்மிடம், ‘‘உங்கள் நடவடிக்கையில் எங்களுக்கே சந்தேகமாக இருக்கிறது. உயரதிகாரி அவருக்கு வராமல் இருக்குமா...அநேகமாக கஸ்டடிக்குக் கொண்டுபோவாங்க போலிருக்கு. ரெடியா இருங்க!’’ என்று இந்தியில் சொன்னதைப் புகைப்படக்காரர் கார்த்திகேயன் என்னிடம் சொல்ல... எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

அவர் யாரென்று விசாரித்தோம்.

மத்திய ரிசர்வ் படையின்(CRPF) 21வது பட்டாலியனின் கமாண்டர் ஸ்ரீஆனந்த்சிங் என்றார்கள். மூன்று வருடங்களாக இந்த ஏரியாவில் பணியில் இருக்கிறாராம். திரும்பி வந்தவர், கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘‘நீங்கள் எங்குவேண்டுமானாலும் போகலாம். எங்கள் படையினரால் உங்களுக்குப் பிரச்னை இருக்காது. மற்றபடி, உங்கள் பாதுகாப்பை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்!’’ என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார்.

சில்லி கிரானைடு
சில்லி கிரானைடு

ஆகஸ்ட் 5-க்குப் பிறகு 71 நாள்களாக போன் இணைப்புகள் துண்டிக்கப் பட்டிருந்தன. அக்டோபர் 14ஆம் தேதிதான் மீண்டும் போன்கள் இயங்கின. இடைப்பட்ட நாள்களில் ஸ்ரீஆனந்த் சிங் அவரது ஏரியாவில் பி.எஸ்.என்.எல். செல்போனை வைத்துப் பொதுமக்களை இலவசமாகப் பேச அனுமதித்தாராம். அதன்பின் மக்கள் பலரும் ஸோர்ஸ்களாக மாறியிருக்கின்றனர். கேட்கவே ஆச்சர்யமாய் இருந்தது.

இரவு மணி 11.00

டெளன்டவுன் ஏரியாவை நோக்கி நடந்தோம். நம்மைப் பார்த்த பலரும் ‘சீக்கிரம் அங்கிருந்து நகருங்கள்’ என்று அவசரப்படுத்தினர். அப்போது ராணுவ ட்ரக்கில் பார்சல்கள் வந்து இறங்கின. அவற்றை இறக்கிக்கொண்டிருந்த வீரர்களில் தமிழர்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் பேசினோம். டீ கொடுத்து உபசரித்துவிட்டுச் சில விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டனர். கையெறி குண்டு ஒன்றை எடுத்துக்காட்டினார் ஒரு வீரர். இதுதான் சில்லி கிரானைடு. இதை வீசினால், அதிலிருந்து புகை வெளிப்படும். கண் பயங்கரமாக எரியும். மிளகாய்த்தூள் எசன்ஸை பக்குவமாக இதனுள் அடைத்து வைத்திருக்கிறார்கள். அது வெளிப்படும்போது எதிரே நிற்பவர்கள் நிலைகுலைந்துபோவார்கள் என்று அவர்கள் விளக்க, மிரட்சியாய் இருந்தது.

நள்ளிரவு மணி 12.00

ரெயினாவாரி என்கிற இடத்தருகே போனபோது, தெரு ஓரத்தில் இருந்த பங்கரிலிருந்து ஒரு குரல்... ‘‘தமிழ்நாடா?’’ என்றது. மத்திய ரிசர்வ் படையின் 144வது பிரிவைச் சேர்ந்த வீரர் அவர். காவேரிப் பட்டினத்தைச் சேர்ந்தவர். அவரிடம் பேசினோம்...

‘‘இங்கே தென்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பத்து பதினைந்து பேர் இருக்கோம். உள்ளூர்ல கோவில் உள்ளே தங்கியிருக்கோம். சவாலான பணிதான். இந்த தேசத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால் இந்த வேலையையும்!’’ என்று அவர் சொன்னபோது நம்மையுமறியாமல் ஒரு விநாடி உடல் சிலிர்த்தது. அவரைச் சந்தித்த எட்டாவது நாளில் இதே 144வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பயங்கரமான வெடிச்சம்பவத்தில் சிக்கினார்கள்.

அதிகாலை மணி 1.00

அந்தக்குளிரிலும் தெரு ஓரத்தில் பிளாட்பாரத்தில் தீ மூட்டிக்கொண்டு குளிர் காய்ந்தபடி சிலர் உட்கார்ந்திருந்தார்கள். ‘‘கல்லெறிச் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறதாமே... யார் இதைச் செய்கிறார்கள்?’’ என்றோம் அவர்களிடம்.

‘‘ராணுவ ஜீப் ஒன்றின் பேனட்டில் ஒரு ஆளைக்கட்டி வைத்து முன்னோக்கிப் போகும் காட்சியை டிவியில் பார்த்திருப் பீர்கள். கல்லெறிச் சம்பவங்கள் நடக்கும் இடத்தில் ராணுவவீரர் கள் இப்படித்தான் செய்கிறார்கள். அந்த ஒரு காட்சி வைரல் ஆகிவிட்டது. இப்போதெல்லாம், பிளாஸ்டிக் புல்லட்டுகளை நிரப்பிச்சுடுகிறார்கள். மிக அருகில் நின்று சுடும்போது, கடுமையான காயத்தை உண்டாக்குகிறது. தொலைவிலிருந்து சுட்டால் உயிருக்கு ஆபத்தில்லை!’’ என்றார்.

அருகில் நின்றவர், ‘‘கண்களில் பட்டுப் பார்வை பறிபோனவர்களும் இருக்கிறார்கள்!’’ என்றார் சோகமாக.

மணி 2.00

இன்னும் குளிர் அதிகமானது. ஓட்டலுக்குத் திரும்ப வாடகைக்கார் தேடினோம். ரோந்துப்பணியில் இருந்த போலீஸ்காரர் உதவிக்கு வந்தார். அவரிடம் பிளாஸ்டிக் புல்லட் பற்றிக் கேட்டதும் பெட்டியிலிருந்த துப்பாக்கியையும் பிளாஸ்டிக் புல்லட்டுகளை யும் காட்டினார். தயக்கத்தோடு படமெடுக்கவும் அனுமதித்தார். அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி, நம்மை ஓட்டலில் இறக்கிவிடச் சொன்னார். காலை 3 மணியளவில் ஓட்டல் வாசலில் இறங்கினோம். நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்த ஓட்டல் மேனேஜர் நம்மைப் பார்த்து விழிகளை விரித்தபடி ‘‘பிரச்னை ஒண்ணுமில்லையே?’’ என்று விசாரித்தார்.

அவர் உட்பட அங்கே நாம் பார்த்துப் பேசிய பலரிடமும் ‘‘சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் உங்களுக்கு என்ன பிரச்னை?’’ என்று கேட்டதற்கு எல்லோரிடமிருந்தும் வந்த ஒரே பதில்...

‘‘அது எங்க சென்டிமென்ட்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism