Published:Updated:

மாமா ஒரு சர்ப்ரைஸ்! - பார்க்காமலேயே காதல் தெரியும்... பார்க்காமலேயே கர்ப்பம் தெரியுமா?!

கீர்த்தி ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி ரெட்டி

பாரதிராஜாவின் பெரியம்மா மகனான மகேந்திரனும் அந்தப் பெண்ணிடம் இதே பாணியில் 20 லட்சம் ரூபாய் ஏமாந்தது தெரியவந்தது.

பார்க்காமலேயே காதல் பற்றிக்கொள்ளும் சம்பவங்களை இந்த சோஷியல் மீடியா யுகத்தில் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘பார்க்காமலேயே கர்ப்பம்... குழந்தைப்பேறு’ கேள்விப்பட்டதுண்டா?! ஆமாம், ஃபேஸ்புக் மூலம் போலீஸ்காரர் ஒருவருக்குக் காதல் வலைவிரித்து, நாளடைவில் அவருக்குக் காதல் பித்து ஏறிய நிலையில், ‘நம் தெய்விகக் காதலால் பார்க்காமலேயே கர்ப்பம் அடைந்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டேன்’ என்றெல்லாம் மதிமயக்கி, பல லட்சங்களைக் கறந்திருக்கிறார் பெண் ஒருவர். அந்தக் காவலரின் உறவினரையும் இதேபோல ஏமாற்றியிருக்கும் அந்தப் பெண்ணை தற்போது புழல் சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.

“என்னதான் நடந்தது, இப்படிக்கூடவா ஏமாறுவார்கள்?” என்று இந்த வழக்கை விசாரித்த ஆவடி போலீஸாரிடம் கேட்டோம். “சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் வட்டம் சேத்தூரை அடுத்த மூலக்கரைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாரதிராஜா, கடலோரக் காவல் படையில் பணிபுரிகிறார். இவர் திருவொற்றியூரில் இருக்கிறார். இவருக்கு, கடந்த ஜனவரி 27-ம் தேதி ‘சந்தியா’ என்ற ஃபேஸ்புக் ஐடி-யிலிருந்து நட்பு அழைப்பு வந்திருக்கிறது. அழகான இளம்பெண் படத்தைப் பார்த்தவர், உடனடியாக அந்த நட்பு அழைப்பை ஏற்றிருக்கிறார். ஃபேஸ்புக் மெசஞ்சரில் ‘ஹாய், ஹலோ’ எனப் பேச ஆரம்பித்திருக்கின்றனர். அந்தப் பெண், ‘சந்தியா என்பது புனைபெயர், எனது உண்மையான பெயர் கீர்த்தி ரெட்டி, நான் ஒரு டாக்டர்’ என்று பாரதிராஜாவிடம் கூறியிருக்கிறார். சில நாள்களிலேயே குட் மார்னிங்கில் ஆரம்பித்து, ‘சாப்ட்டீங்களா, நீங்க பார்க்குற போலீஸ் வேலைக்கு ஆரோக்கியமா சாப்பிடணும்... உடம்பைப் பார்த்துக்கோங்க... சனிக்கிழமையானா எண்ணெய் தேய்ச்சுக் குளிங்க’ என்றெல்லாம் பாசமழை பொழியவே, ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார் பாரதிராஜா. தனக்கேற்ற வாழ்க்கைத்துணை கிடைத்ததாக எண்ணி, ஏகப்பட்ட ஹார்ட்டீன்களைப் பறக்கவிட்டு ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததுபோல நடித்த அந்தப் பெண், பல நாள்கள் பாரதிராஜாவின் அழைப்பையே ஏற்கவில்லை. நீண்ட நாள்கள் அவரைக் கதறவிட்டு அதன் பிறகே காதலுக்குச் சம்மதித்திருக்கிறார் அந்தப் பெண்.

மாமா ஒரு சர்ப்ரைஸ்! - பார்க்காமலேயே காதல் தெரியும்... பார்க்காமலேயே கர்ப்பம் தெரியுமா?!

அதன் பிறகு அந்தப் பெண் சொன்னதற்கெல்லாம் கட்டுப்பட்டிருக்கிறார் பாரதிராஜா. ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணே பாரதிராஜாவிடம், ‘நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம். உன் பெற்றோரிடம் நானே பேசுகிறேன்’ என்று கூறியதுடன், அவரது பெற்றோரிடமும் பேசியிருக்கிறார். ‘மாமா, அத்தே’ என்று பாசமழை பொழிந்திருக்கிறார். ஆனால், பாரதிராஜாவை நேரில் பார்க்க மட்டும் அந்தப் பெண் சம்மதிக்கவே இல்லை. கேட்கும்போதெல்லாம், ‘மாமா... உங்களை நேர்ல பார்க்காமத்தான் காதலிச்சேன். நீங்களும் அப்படித்தான். நாம் நேர்ல பார்த்துட்டா நம்ம தெய்விகக் காதலோட மகத்துவம் குறைஞ்சிடும்’ என்றெல்லாம் வார்த்தை வலை வீசவே, காதல் தீயில் கசிந்து உருகியிருக்கிறார் பாரதிராஜா.

இப்படியே ஆறு மாதங்கள் கடந்தன... கடலோரக் காவல் பணியைப் பார்த்தாரோ இல்லையோ, தினமும் கடலோரக் கவிதைகளை வாட்ஸ்அப்பிலும் மெசஞ்சரிலும் எழுதித் தள்ளினார் பாரதிராஜா. ஒருகட்டத்தில் அந்தப் பெண், `மாமா... ஒரு சர்ப்ரைஸ். ஆனா, நீங்க நம்பணும்... நம்பலைன்னா நான் பிரிஞ்சு போயிடுவேன். நாம பேசுனதுலயே நான் கர்ப்பமாகிட்டேன். இப்ப நான் ரெண்டு மாசம்... இதுதான் தெய்விகக் காதல்ங்கிறது’ என்று சொல்ல, காதல் மயக்கத்தில் அதையும் நம்பித் தொலைத்திருக்கிறார் பாரதிராஜா. தொடர்ந்து, ‘உங்களையே நெனைச்சு எனக்கு நானே தாலி கட்டிக்கிட்டேன். டாக்டர்கிட்ட செக்கப்புக்கு போகணும்... தனியா வீடு பார்க்கணும்...’ என்றெல்லாம் விதவிதமாகக் காரணங்கள் சொல்லி பணத்தையும் கறந்தார்.

அதன் பிறகு நடந்ததுதான் உச்சம்... சில மாதங்கள் கழித்து ஒருநாள் அதிகாலை பிரசவ வேதனையோடு மயக்கத்தில் பேசியவர், ‘மாமா... நமக்கு ரெட்டை குழந்தைங்க பொறந்திருக்கு. ரெண்டும் ஆம்பிளைப் புள்ளைங்க... உங்களை மாதிரியே கருகருன்னு முடி... முட்டைக்கண்ணு’ என்று ஆனந்தக் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். ‘கர்ப்பமாகி நான்கே மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும்’ என்ற சந்தேகம்கூட இல்லாமல் பைத்தியம்போல அதையும் நம்பியவர், அதற்கும் சில லட்சங்களை அனுப்பியிருக்கிறார்.

மாமா ஒரு சர்ப்ரைஸ்! - பார்க்காமலேயே காதல் தெரியும்... பார்க்காமலேயே கர்ப்பம் தெரியுமா?!

இப்படிக் கடந்த ஓராண்டில் மட்டும் 12 லட்சம் ரூபாயை இழந்த பாரதிராஜா, ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறியில் ‘என்னை மன்னித்துவிடு... உன்னைச் சந்திக்க வருகிறேன்’ என்று மெசேஜ் அனுப்பிவிட்டு அந்தப் பெண் குடியிருப்பதாகச் சொன்ன ஆவடியின் ஆனந்த நகருக்கு வந்திருக்கிறார். ஆனால், அந்த முகவரியில் அந்தப் பெண் இல்லை. அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அப்படி அங்கு யாரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு போன் செய்தபோது, போனை எடுக்கவில்லை. அதன் பிறகே ‘தான் எவ்வளவு முட்டாள்தனமாக ஏமாந்திருக்கிறோம்’ என்பதை உணர்ந்திருக்கிறார் பாரதிராஜா. இதையடுத்து எங்களிடம் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த போதே, பாரதிராஜாவின் பெரியம்மா மகனான மகேந்திரனும் அந்தப் பெண்ணிடம் இதே பாணியில் 20 லட்சம் ரூபாய் ஏமாந்தது தெரியவந்தது. அவரிடம் கீர்த்தி ரெட்டியின் தங்கை திக்‌ஷி ரெட்டி என்ற பெயரில் இதேபோல கல்யாணம், குழந்தை எனக் காரணம் சொல்லி பணத்தைக் கறந்திருக்கிறார். அந்தப் பெண்ணைத் தேடியபோது அவரது பெயர் ஐஸ்வர்யா என்பதும், ஆவடியில் ஃபேன்ஸி கடை வைத்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து ஐஸ்வர்யாவைப் பிடித்து விசாரித்தோம். ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கிருந்து ஆவடி வந்திருக்கிறார். விசாரணையில், ‘பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியது உண்மைதான்; ஆனால், பணத்தைச் செலவு செய்துவிட்டேன்’ என்று கூறினார்” என்ற ஆவடி போலீஸார் கடைசியாகச் சொன்னதுதான் ட்விஸ்ட்.

“ஐஸ்வர்யா பயன்படுத்திவந்த ‘சந்தியா’ என்ற பெயரிலான ஃபேஸ்புக் ஐ.டி-யில் 197 பேர் நண்பர்களாக உள்ளனர். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினர். அவர்களில் பலரும் விடிய விடிய ஐஸ்வர்யாவிடம் ஜொள்ளுவிட்டு, காதல் வசனங்களைப் பிதற்றியிருக்கிறார்கள். அவர்களில் பலர் திருமணமானவர்கள்” என்றார்கள்!

‘உயிரே’ படத்தில் ஒரு பாடலில், ‘என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை...’ என்று எழுதியிருப்பார் கவிஞர் வைரமுத்து. இங்கு மொத்த அறிவையும் அல்லவா காணாமல் ஆக்கியிருக்கிறது காதல் வலை!