Published:Updated:

எலக்ட்ரிக் வாகன உலகில் கலக்கும் தமிழர்!

கார்த்தி

பேட்டரிக்கான மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து பெறுகிறோம். அதை அப்படியே வாகனங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.

பிரீமியம் ஸ்டோரி

உலகெங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த உரையாடல்களில் மதிப்புடன் குறிப்பிடப்படும் ஒரு தமிழர், ஆறுமுகம் மந்திரம். எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகள் குறித்த ஆய்வில் விரல்விட்டு எண்ணக்கூடிய நிபுணர்களில் ஒருவர். ஒரு பக்கம் பெட்ரோல், டீசலின் விலை தாறுமாறாக உயர, இன்னொரு பக்கம் எரிபொருள் பயன்பாட்டையே எதிர்கால நலன் கருதிக் குறைக்கச் சொல்கிறார்கள் சூழலியலாளர்கள். மாற்று எரிபொருள்களுக்கான தேவைகளும், ஆராய்ச்சிகளும் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியரும், பேட்டரிகள் குறித்துத் தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்துவருபவருமான ஆறுமுகம் மந்திரத்தின் ஆய்வு இவற்றில் கவனம் பெற்றுள்ளது. அவரிடம் மாற்று எரிபொருள்கள் குறித்துப் பேசினேன். தமிழில் வெளியாகும் அவரின் முதல் பேட்டி இதுதான்.

``உங்களின் பயணம் பற்றிச் சொல்லுங்கள்...’’

‘‘திருச்செந்தூர் அருகே அமராபுரம் கிராமத்தில்தான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே. இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்துவிட்டேன். வயற்காட்டிலேயே வாழ்க்கையை முடித்திருக்கவேண்டியவன், எப்படியோ படித்துவிட்டேன். எங்கள் கிராமத்தில் மொத்தமே ஐம்பது வீடுகள்தான். பள்ளிப் படிப்பை முடித்த முதல் நபர் நான்தான். காடுகளினூடே இரண்டு மைல்கள் நடந்துதான் உயர்கல்வி கற்றேன். வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். ஆனாலும், நான் முயன்ற எந்தக் கல்லூரியிலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. சென்னை ஐ.ஐ.டி-யில் டாக்டரேட் முடித்தபோதும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நோபல் பரிசு வென்ற ஜான் குட் இனஃப்பின் இணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு எல்லாம் மாறியது.’’

எலக்ட்ரிக் வாகன உலகில் கலக்கும் தமிழர்!

``மாற்று எரிபொருள்கள் குறித்து தொடர்ந்து பேசிவருகிறோம். மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது?’’

‘‘அரசுகள்தான் கொள்கை முடிவுகளை எடுத்து மக்களை வழிப்படுத்த வேண்டும். வரி விலக்கு அளிக்கலாம்; சலுகைகள் தரலாம்; எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. 2030-க்குள் இதையெல்லாம் செய்யவேண்டும் என்கிற தொலைநோக்குத் திட்டங்கள்தான் இவற்றை சாத்தியப்படுத்தும். எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு, பெர்பாமன்ஸ் விஷயங்களில் கவனம் செலுத்துவதும் பயனளிக்கலாம்.’’

``ஒருவேளை மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கான மூலப்பொருள்கள் நம்மிடம் இருக்கின்றனவா?’’

‘‘மறுசுழற்சி என்பது மிக மிக அவசியம். எண்ணற்ற வாகனங்கள் என்றானபின் பேட்டரிகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தியே ஆக வேண்டும். மொபைல்கள், லேப்டாப்களில் இருக்கும் சின்ன பேட்டரிகளை நாம் மறுசுழற்சி செய்யத் தவறிவிட்டோம். ஆனால், வாகனங்களில் இருக்கப்போவது பெரிய அளவிலான பேட்டரிகள். இந்தியா போன்ற தேசங்கள் மறுசுழற்சிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். பேட்டரிகளில் இருக்கும் மூலப்பொருள்களில் எவற்றையெல்லாம் மீண்டும் பயன்படுத்த முடியுமோ, அவற்றைப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், அதற்கு ஆகும் செலவுகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். புதிதாக உருவாக்குவதைவிட மறுசுழற்சிக்கு அதிகம் செலவாகிறது என்றால் அந்த மாற்றத்துக்கு யாரும் முன்வர மாட்டார்கள்.

இது கடினமான அறிவியல் பாடம்போல இருக்கலாம். ஆனால், எதிர்காலம் இதில்தான் இருக்கிறது. லித்தியம் பேட்டரிகளுக்குத்தான் நாம் தற்போது கோபால்ட்டைப் பயன்படுத்தி வருகிறோம். லித்தியத்தைப் பயன்படுத்துவது ஒரு பொருட்டேயில்லை. ஆனால், கோபால்ட்டைத் தவிர்க்க வேண்டும். அதிக செலவு பிடிக்கும் கோபால்ட்டை மத்திய ஆப்பிரிக்க தேசமான காங்கோவிலிருந்து கொண்டுவருகிறார்கள். மாசு, குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துதல் என உலகளாவிய பிரச்னைகள் பல கோபால்ட் உருவாக்கத்தில் இருக்கின்றன. எங்கள் ஆய்வகங்களில் கோபால்ட் பயன்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டோம். தற்போது, பலர் நிக்கல் பயன்படுத்திவருகிறார்கள். ஆனால், நிக்கலும் வருங்காலத்தில் தொல்லை தரக்கூடும். பேட்டரிகளுக்கு நிலையான மூலப்பொருள்களை ஆராய்ந்துவருகிறோம். பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் சல்பரை இதில் பயன்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். எதிர்காலத்தில் லித்தியமும் தொல்லை தரலாம். அதனால், சோடியம் சல்பர் குறித்தான சோதனைகளையும் ஆய்வு செய்துவருகிறோம். கடலில் கொட்டிக் கிடக்கும் சோடியமும், இந்தியாவில் அதிகம் இருக்கும் கடல்களும் நிச்சயம் மாற்று எரிபொருளுக்கான பாதையை எளிதாக்கக்கூடும்.’’

ஆறுமுகம் மந்திரம்
ஆறுமுகம் மந்திரம்

``இன்றளவிலும் பேட்டரி கார்களின் விலை அதிகமாகத்தானே இருக்கின்றன. அப்படி விலை கொடுத்து வாங்கினாலும், பெட்ரோல், டீசல் கார்கள் அளவுக்கு அதன் திறன் இருப்பதில்லையே?’’

‘‘பேட்டரிகளின் விலை குறைந்துகொண்டுதான் வருகிறது. நிறைய நிறுவனங்கள் தயாரிப்பில் இறங்கும்போது, ஆரோக்கியமானதொரு சந்தை உருவாகும். எரிபொருளின் மூலம் பல ஆண்டுகளாக நாம் வாகனங்களை இயக்கிவருகிறோம். அதை மேம்படுத்துவதற்கான தரவுகள் நம்மிடம் நிறைய உண்டு. மின்சார வாகனங்களை இப்போதுதான் ஆரம்பிக்கிறோம். எலான் மஸ்க்கின் டெஸ்லா தற்போது நிறைய சோதனைகள் செய்துவருகிறது. ஆனால், நாளையே பேட்டரி கார்கள் டீசல் கார்களை மிஞ்சிவிடுமா என்றால், இல்லைதான். ஏனெனில் சார்ஜிங் நிலையங்கள் கட்டுமானங்களை எல்லாம் வளர்த்தெடுக்க வேண்டும். அதே சமயம், நாம் சந்திக்கும் காற்று மாசு, எரிபொருள் பிரச்னை எல்லாவற்றுக்குமான மாற்று இதில்தான் இருக்கிறது. பல்வேறு வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்கும்.’’

``ஹைட்ரஜன் வாகனங்கள் இதற்கான மாற்றாக அமைய வாய்ப்பிருக்கிறதா?’’

‘‘பேட்டரிக்கான மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து பெறுகிறோம். அதை அப்படியே வாகனங்களுக்குப் பயன்படுத்துகிறோம். பேட்டரி என்பது மின்சாரத்தைச் சேமித்து வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு கருவி, அவ்வளவே. ஆனால், ஹைட்ரஜன் வாகனங்களில் இதற்கான தேவையெதுவும் இல்லை. மின்சாரத்தை உருவாக்கி Fuel Cell மூலம் இவை இயங்குகின்றன. சார்ஜ் போடவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. காற்றிலிருக்கும் ஆக்சிஜனை உள்வாங்கி, மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். சார்ஜிங் நிலையங்களில் காத்திருக்கத் தேவையில்லை. பெட்ரோல் போடுவதுபோல, Fuel Cellகளில் ஹைட்ரஜனை நிரப்பிக்கொண்டு பறக்கலாம். ஆனால், ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு அனைத்துமே காஸ்ட்லி. Fuel Cellகளுக்கு பிளாட்டினம் தேவை. அது தங்கத்தைவிட காஸ்ட்லி. அதனால்தான் பேட்டரி குறித்து ஆராய்ச்சி செய்கிறோம்.’’

``மின்சார வாகனங்களைப் பொறுத்தமட்டிலும் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?’’

‘‘காலப்போக்கில் குவியப்போகும் மின்சாரக் கழிவுகள் குறித்த புரிதல் அவசியம். இந்தியா, சீனா மாதிரியான ஜனத்திரள் அதிகம் கொண்ட நாடுகள் அதற்கேற்ற திட்டமிடல்களில் இறங்க வேண்டும். மேற்கத்திய நாடுகளைப் போல, இந்தியாவில் யாரும் தினமும் 300 கி.மீ எல்லாம் செல்வதில்லை. இந்தியாவின் எரிபொருள் தேவையில் குறுகிய நேரப் பயணங்கள் அதிகம். இப்படியான பயணம் மேற்கொள்ளும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு லித்தியத்துக்குப் பதில் சோடியத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், அதற்கான தொழிற்சாலைகளை இன்றிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதுவும் இந்தியாவில் தொடங்க வேண்டும். அதே சமயம் இந்தியாவின் எரிபொருள் பிரச்னைகளுக்கு ஒருவழித் தீர்வு என்பது தவறானது. எல்லா நோய்க்கும் ஒரே மருந்தில் தீர்வு காண முயல்வது ஆபத்தில் முடிந்துவிடும்.

எலக்ட்ரிக் வாகன உலகில் கலக்கும் தமிழர்!

புதைபடிவ எரிபொருள்களை நம்மால் முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது. நிலக்கரியின் தேவை அதிகமாகிக்கொண்டு வருகிறது. ஆனால், இருப்பு குறைந்துகொண்டே வருகிறது. அங்குதான் புதுப்பிக்கத்தக்க வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும். இயற்கை எரிவாயு, நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றின் பயன்பாடுகளைக் குறைப்பதன் மூலம் காற்று மாசைக் குறைக்க முடியும். சிக்கனமான தீர்வாக மின்சார வாகனங்கள் இருக்கும்பட்சத்தில் மக்கள் அதற்கு நிச்சயம் மாறுவார்கள். 1980களில் நாங்கள் இதுகுறித்தெல்லாம் ஆய்வு செய்தபோது இத்தனை வசதிகள் வரவில்லை. இது நுண் மின்னணுவியலின் காலம். எல்லோரும் தங்களுக்குப் பிடித்த இடத்தில், நேரத்தில் லேப்டாப், ஸ்மார்ட்போன் என மாறிக்கொண்டிருக்கிறார்கள். காலம்தான் எல்லாவற்றுக்குமான பதில்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு