Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: `கொண்டாட்டம் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்!’ - ஐபிஎல் தொடருக்கு எதிராக அபினவ் பிந்த்ரா

அபினவ் பிந்த்ரா
அபினவ் பிந்த்ரா

உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலை குறித்து வருந்தி #staystrongindia என ஆறுதல் தெரிவித்துவரும் நிலையில் ஐபிஎல் நடைபெறுவதைப் பலரும் விமர்சித்துவருகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை நாட்டையே அதிரவைக்கும்படி பரவிவருகிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும்வண்ணம் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஞாயிறுகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு எனக் கட்டுப்பாடுகள் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருக்கின்றன. மகாராஷ்டிராவில் பொதுமுடக்கத்துக்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகளை முனைப்பாக நடத்திவருகிறது.

ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை 20 போட்டிகள் முடிந்துள்ளன. ஆனால், தொடரின் பெரும் பகுதி இனிதான் நடக்கவிருக்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலை குறித்து வருந்தி #staystrongindia என ஆறுதல் தெரிவித்துவரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்புகளும் கிளம்பத் தொடங்கியுள்ளன.

கொரோனா
கொரோனா

பெருந்தொற்றுக்கு இடையில் ஐபிஎல் போட்டிகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஒலிம்பிக் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா. ``விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் வெளியில் நடப்பவற்றைக் கண்டுகொள்ளாதபடி பார்வையற்றவர்கள் அல்லது காது கேளாதோர் போன்றோ இருக்க முடியாது" எனத் தனியார் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் கூறியிருக்கிறார்.

``கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள் தங்கள் சொந்த பபிளில் (bubble - கொரோனா காலத்தில் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வெளிநபர்களுக்கு அனுமதி இல்லாத பகுதி) மட்டும் வாழ முடியாது. மேலும், வெளியில் நடக்கும் எந்தவொரு விஷயத்தையும் முற்றிலும் கேட்காமலோ, கண்டுகொள்ளாமலோ கடந்து செல்ல முடியாது. இந்த ஐபிஎல் விளையாட்டுகளை நீங்கள் கண்டுகொண்டிருக்கும்போது, ​​மைதானத்துக்கு வெளியே, ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருக்கின்றன. எனவே, கொண்டாட்டங்கள் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும். சமூகத்தையும் நாம் மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’’ என ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றுள்ள அபினவ் கூறியுள்ளார்.

ஐபிஎல்
ஐபிஎல்

``நாம் குறைந்தபட்ச கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும். தனி மனிதராகவும், முழு நாடாகவும் நாம் உயிர்ப்புடன் இருக்க அது உதவும். தொற்றுப் பரவல் நாளை முடிந்து விடாது என நமக்குத் தெரியும். அதேநேரத்தில், எங்கு சென்று முடியும் எனவும் தெரியாது. பல மக்கள் இறந்துள்ளனர். பலர் தங்கள் வாழ்வைத் தொலைத்துள்ளனர். இது, இன்னும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது" எனவும் அபினவ் கவலை தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு