Published:Updated:

மூடிய குவாரியில் கனிம வளம் கடத்தல்! - பின்னணியில் அரசியல்வாதிகள்?

 குவாரி
பிரீமியம் ஸ்டோரி
குவாரி

உவரி பகுதியில் அனுமதி இல்லாமல் எம்-சாண்ட், ஜல்லிக் கற்கள் ஏற்றிவந்த லாரிகளைப் பிடித்து அதன் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு போட்டிருக்கிறோம்

மூடிய குவாரியில் கனிம வளம் கடத்தல்! - பின்னணியில் அரசியல்வாதிகள்?

உவரி பகுதியில் அனுமதி இல்லாமல் எம்-சாண்ட், ஜல்லிக் கற்கள் ஏற்றிவந்த லாரிகளைப் பிடித்து அதன் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு போட்டிருக்கிறோம்

Published:Updated:
 குவாரி
பிரீமியம் ஸ்டோரி
குவாரி

கடந்த மாதம் நிகழ்ந்த கல்குவாரி விபத்தில், நான்கு அப்பாவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் குவாரிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மூடப்பட்ட குவாரிகளிலிருந்து கனிம வளத்தைக் கடத்திச் சென்ற லாரிகள் அண்மையில் பிடிபட்டிருக்கின்றன. அரசின் உத்தரவை மதிக்காமல் குவாரிகளைச் சட்ட விரோதமாக இயக்கும் துணிச்சல் எப்படி வந்தது?

இது பற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான வழக்கறிஞர் பிரம்மா, “நெல்லை மாவட்டத்திலுள்ள குவாரிகள் ஏதேதோ பெயர்களில் இருந்தாலும் அவற்றின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இருக்கிறார்கள்.

மூடிய குவாரியில் கனிம வளம் கடத்தல்! - பின்னணியில் அரசியல்வாதிகள்?

அடைமிதிப்பான்குளம் குவாரியில் நடந்த விபத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு, நெல்லை மாவட்டம் முழுவதும் ஆய்வுசெய்ததில் ஏறக்குறைய எல்லா குவாரிகளிலும் விதிமுறை மீறல்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்க அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், குவாரிகளை நடத்தும் அரசியல் பிரபலங்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, கனிம வளத்துறை இயக்குநராக இருந்த நிர்மல்ராஜை அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றல் செய்துவிட்டார்கள். எனவே, இனி குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுமா என்பதே கேள்விக்குறி.

இது தவிர, குவாரிகள் செயல்படத் தடை இருக்கும்போதே கனிம வளங்களை ஏற்றிச் சென்ற ஆறு லாரிகள் அண்மையில் பிடிபட்டிருக்கின்றன. இரவு நேரத்தில் மட்டும் குவாரிகளை ரகசியமாக இயக்கி கனிம வளங்களை கடத்தியிருக்கிறார்கள். இந்த துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது... இதன் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் யார்... இதையெல்லாம் தமிழ்நாடு அரசு விசாரணை செய்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்” என்று படபடத்தார்.

இந்தச் சர்ச்சை குறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணனிடம் கேட்டதற்கு, “உவரி பகுதியில் அனுமதி இல்லாமல் எம்-சாண்ட், ஜல்லிக் கற்கள் ஏற்றிவந்த லாரிகளைப் பிடித்து அதன் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு போட்டிருக்கிறோம். எங்கிருந்து அவை கொண்டுவரப்பட்டன என்பதை விசாரித்து, அனுமதியின்றி செயல்பட்ட குவாரியின் உரிமையாளர் மீதும் வழக்கு போட்டிருக்கிறோம்” என்றார்.

சரவணன், விஷ்ணு
சரவணன், விஷ்ணு

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “குவாரி விபத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர் அனைத்து குவாரிகளையும் ஆய்வுசெய்து அளித்த அறிக்கை, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு தெரிவிக்கும் முடிவைச் செயல்படுத்துவோம். உவரி பகுதியில் தடை செய்யப்பட்ட கல்குவாரி இயங்கியதாக வந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிற குவாரிகளையும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

கனிம வளங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு கூடுதல் அக்கறை காட்டவேண்டிய காலகட்டம் இது!