Published:Updated:

நள்ளிரவில் நச்சுநீர் அருவி! - ராணிப்பேட்டையிலிருந்து ஆக்‌ஷன் ரிப்போர்ட்

நச்சுநீர் அருவி
பிரீமியம் ஸ்டோரி
நச்சுநீர் அருவி

தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தினந்தோறும் நள்ளிரவில் நச்சுக் கழிவுநீரை பாலாற்றில் திறந்துவிடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

நள்ளிரவில் நச்சுநீர் அருவி! - ராணிப்பேட்டையிலிருந்து ஆக்‌ஷன் ரிப்போர்ட்

தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தினந்தோறும் நள்ளிரவில் நச்சுக் கழிவுநீரை பாலாற்றில் திறந்துவிடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

Published:Updated:
நச்சுநீர் அருவி
பிரீமியம் ஸ்டோரி
நச்சுநீர் அருவி

மிகவும் மோசமான பகுதி’ - மத்திய அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் ராணிப்பேட்டை நகரத்தை இப்படித்தான் வரையறுத்திருக்கிறது. இங்குள்ள சிப்காட்டில் 30 ஆண்டுகளாகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும் 2.15 லட்சம் டன் குரோமியம் கழிவுகளை வெளியேற்ற முடியாமல், மழைநீர் வழிந்தோடும்போதெல்லாம் பெரும் அழிவுகளைச் சந்தித்துவருகிறது பாலாறு. இவ்வளவு ஆபத்துகள் போதாதென்று, இங்குள்ள பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளும் தங்கள் பங்குக்கு பாலாற்றில் நச்சுக் கழிவுகளைக் கலந்து ஆற்றை அழித்துவருகின்றன. இதையெல்லாம் அவ்வப்போது ஜூ.வி-யில் வெளிச்சம் போட்டுக் காட்டிய நிலையில், தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தினந்தோறும் நள்ளிரவில் நச்சுக் கழிவுநீரை பாலாற்றில் திறந்துவிடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாகக் களமிறங்கினோம்...

காந்தி, கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்
காந்தி, கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்

ஆகஸ்ட் 23-ம் தேதி, மாலை 4 மணி. ராணிப்பேட்டையில் பாலாற்றுக்கு எதிர்ப்புறமுள்ள பகுதியிலிருக்கிறது அந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். மெதுவாக சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றி வலம்வந்தோம். மேல்விஷாரம் மலையிலிருந்து தஞ்சாவூரான் காலனி வழியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பாலாற்றில் கலக்கிறது ஒரு சிறிய மழைநீர் ஓடை. சுத்திகரிப்பு நிலையத்துக்குப் பின்புறமுள்ள தெருவிலும் இந்த ஓடையின் கால்வாய் இணைகிறது. சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றிலும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடர்ந்த முட்புதர். யாருக்கும் சந்தேகம் வராமலிருக்க தொழிற்சாலைக்குள்ளிருந்து பின்பக்க தடுப்புச் சுவர் வரை பைப்லைன் பதித்திருக்கிறார்கள். அங்கு சுவரின் அடிப்பாகத்தில் இரண்டு பெரிய துளைகளைப் போட்டிருக்கிறார்கள். இந்தத் துளைகளின் வழியாகத்தான் பாலாற்று ஓடையில் கழிவுநீரை விடுகிறார்கள் என்பதை நீண்ட முயற்சிக்குப் பிறகு கண்டறிந்தோம். அதற்குள் மணி இரவு 8-ஐ நெருங்கியிருந்தது. நள்ளிரவில்தான் நச்சுக் கழிவுநீரை வெளியேற்றுவார்கள் என்று தகவல் வந்ததால், அதை உறுதிப்படுத்திக் கொள்ள அங்கேயே காத்திருந்தோம்.

நள்ளிரவில் நச்சுநீர் அருவி! - ராணிப்பேட்டையிலிருந்து ஆக்‌ஷன் ரிப்போர்ட்

இரவு மணி 12-ஐ தாண்டியது. வண்டுகளின் ரீங்காரத்துக்கு இடையே சற்றுத் தொலைவில் திடீரென அருவி ஒன்று ஆர்ப்பரித்துவருவதுபோல சத்தம்... கேமராவுடன் தயாரானோம். ஏதோ கொஞ்சம்போல கழிவுநீர் வரும் என்று நினைத்திருந்த நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. `திபுதிபு’வென கரைபுரண்டு அருவியைப்போல வெளியேறிய நச்சுக் கழிவுநீர், நுரைபொங்க பாலாற்றை நோக்கிப் பாய்ந்தோடியது. நச்சுக் கழிவுநீரின் காட்டமான வாடை மூக்கில் ஏறி, மூச்சுமுட்டியது. சில நிமிடங்கள்கூட அங்கிருக்க முடியாமல் வயிற்றைக் குமட்டியது. நமக்கு உதவியாக வந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான், நச்சுக் கழிவுநீரை சாம்பிளுக்காக பாட்டிலில் பிடித்துக்கொண்டார். அங்கிருந்து நகர்ந்தோம்.

மறுநாள், இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். நாம் தமிழர் கட்சி சார்பிலும் சம்பந்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தை மூடக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். இதையடுத்து, உடனடியாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர். கோட்டாட்சியர் (பொறுப்பு) இளவரசி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சுத்திகரிப்பு நிலையத்துக்குள் சென்று ஆய்வுசெய்தனர்.

முன்னதாக, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் கழிவுநீர் திறந்துவிடப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்கள். தடுப்புச் சுவரிலுள்ள துளைகளைக் கற்கள் மற்றும் சிமென்ட் கலவைகளைக் கொண்டு அடைத்தார்கள். அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆய்வு நடந்துகொண்டிருந்த போது, மேல்விஷாரம் நகர தி.மு.க செயலாளர் எஸ்.டி.அமீன், தன் நண்பர் ஒருவருடன் சுத்திகரிப்பு நிலையத்துக்குள் விறுவிறுவென நடந்து சென்றார். ஆய்வு முடியும் வரை உள்ளேயே இருந்தார். புகார் குறித்து அமீனிடம் கேட்டபோது, ‘‘எந்தவொரு தொழிற்சாலைக்கும் நாங்கள் ஆதரவாகச் செயல்படவில்லை. அதிகாரிகள் விசாரணை நடத்தியதிலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’’ என்றார்.

ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து நான்காவது முறை சட்டமன்றத்துக்குத் தேர்வாகியிருக்கிறார் அமைச்சர் காந்தி. “இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பீர்கள்?” என்று அவரிடம் கேட்டோம்... ‘‘சுற்றுச்சூழல் பிரச்னையிலிருந்து ராணிப்பேட்டையைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன். புகாருக்குள்ளான தொழிற்சாலைகளுக்கு தி.மு.க-வினர் யாரும் ஆதரவு தர மாட்டோம். தவறான வழிக்கும் நாங்கள் போக மாட்டோம்’’ என்றார் சுருக்கமாக.

சல்மான்
சல்மான்

மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ‘‘மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கழிவுநீரை சாம்பிள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆர்.டி.ஓ-வும் என்னிடம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார். சாம்பிள் ரிப்போர்ட் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் மற்றும் இளைஞர்கள் சிலர், ‘‘அபாயகரமான நச்சுக் கழிவுநீரை தினந்தோறும் திறந்துவிடுவதால், நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் விஷமாகியிருக்கிறது. இதனால், இங்கு வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு, தோல்நோய், சுவாசக் கோளாறு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சூழல் சீர்கேடுகள் தொடர்பாக உரிய நிபுணர்களைக்கொண்டு ஆய்வுசெய்ய வேண்டும். விதிமுறைகளை மீறும் தொழிற்சாலை நிர்வாகிகள்மீது குற்ற வழக்கு பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களிடமிருந்தே நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்’’ என்கிறார்கள்.

அரசு எப்படி இந்த விஷயத்தைக் கையாள்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism