Published:Updated:

அலைமோதும் கூட்டம்... மேலும் 2 நாட்களுக்கு பேருந்துகளை இயக்குமா அரசு?

பேருந்து நிலையம்
பேருந்து நிலையம்

திங்கள் கிழமையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது, அதற்குள் ஊர் போய்ச் சேர வேண்டும் என்ற பதற்றத்தோடு பேருந்துகளில், மக்கள் குவியத் தொடங்கியுள்ளார்கள்.

கொரோனா பரவலைத் தடுக்க, மே 10-ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திங்கள் கிழமையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது, அதற்குள் ஊர் போய்ச் சேர வேண்டும் என்ற பதற்றத்தோடு பேருந்துகளில், மக்கள் குவியத் தொடங்கியுள்ளார்கள். இதனால் இவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இப்படி ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் குவிந்தால், கொரோனா பரவல் அதிகரிக்கும் எனக் கவலை தெரிவிக்கிறார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்.

கி.வெங்கட்ராமன்
கி.வெங்கட்ராமன்

கொரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையில்தான், முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டது. மே 10-ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும்தான் பேருந்துகள் இயக்கப்படும், அதன் பிறகு பேருந்துகள் இயக்கப்படாது என்பதால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வேறு பல காரணங்களுக்காக வெளியூர்களில் இருப்பவர்கள் உடனடியாக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இந்த திடீர் அறிவிப்பு இவர்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. ``மேலும் மூன்று நாள்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தால்தான், மக்களின் சிரமத்தையும் கொரோனா பரவலையும் தடுக்க முடியும்'' என்கிறார், கி.வெங்கட்ராமன்.

``திங்கள் கிழமையில் இருந்து பேருந்துகள் ஓடாதுங்கற தகவலை இன்னைக்குத்தான் தமிழக அரசு அறிவிக்குது. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குக் கிளம்பிப் போக, இந்த ரெண்டு நாள் அவகாசம் போதாது. இந்தத் திடீர் அறிவிப்பால், பேருந்து நிலையங்கள்ல, ஆயிரக்கணக்கான மக்கள் குவிஞ்சிக்கிட்டு இருக்காங்க. முண்டியடிச்சிக்கிட்டு, பேருந்துகள்ல ஏறிக்கிட்டு இருக்காங்க. இதை பார்க்குறப்ப மனசுக்கு வேதனையா இருக்கு. மே 10-ம் தேதியில இருந்து பேருந்துகள் ஓடாதுங்குறதை, முன்கூட்டியே அறிவிச்சிருக்கணும். போன வருசம் இதே மாதிரிதான் நடந்துச்சு. முழு ஊரடங்கு அறிவிப்பு திடீர்னு வெளியானதாலதான், பொது போக்குவரத்துல மக்கள் கூட்டம் அதிகமாகி, கொரோனா பரவல் அதிமானது. இந்த வருசம் அதே நிலை. மக்கள் படும் துயரங்களைத் தவிர்க்கவும், கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்கவும், மே 12-ம் தேதி புதன்கிழமை இரவு வரைக்கும் பேருந்துகளை இயக்கணும்.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்
கொரோனா: `தமிழகத்தில் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு! - தமிழக அரசு | முழு விவரங்கள்

வியாழக்கிழமை விடியற்காலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்னு தமிழக அரசு அறிவிக்கணும். கடைசி பயணி ஊர் போயி சேரும் வரைக்கும் பேருந்துகள் இயங்கும்னு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடணும். இந்த அறிவிப்பு உடனடியாக மக்களை சென்றடைய வைக்கணும்'’ என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் பேசினோம். ``சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நிலவரம் குறித்து அரை மணிநேரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக விவரம் அறிந்து வருகிறேன். மாலை 6 மணிக்கு நானே நேரில் போய், தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். வேறு நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு