அலசல்
அரசியல்
Published:Updated:

ஓய்ந்தது அநீதிக்கு எதிரான குரல்!

செந்தமிழ்க்கிழார்
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தமிழ்க்கிழார்

‘மக்கள் நீதிபதி’, ‘மக்கள் ஜனாதிபதி’ என தன்னை அறிவித்துக்கொண்டு பிரச்னைகளை கையிலெடுத்துப் போராடினார்.

‘மக்கள் காவல் நிலையம்’, ‘மக்கள் நீதிமன்றம்’ என அதிகார வர்க்கத்துக்கு எதிராக வித்தியாசமான வடிவங்களில் களமாடிய சமூகச் செயற்பாட்டாளர் செந்தமிழ்க்கிழார், டிசம்பர் 15-ம் தேதி அதிகாலையில் மரணமடைந்தார். தன் இறுதிக்காலம் வரை எந்தவித எதிர்பார்ப்புமின்றி இயங்கிவந்த ஓர் ஒப்பற்ற போராளியை மரணம் விழுங்கிவிட்டது.

அருப்புக்கோட்டையை பூர்வீகமாகக்கொண்ட செந்தமிழ்க்கிழாரின் இயற்பெயர் கருப்பசாமி. இளம் வயதில், வழக்குரைஞர் ஒருவரால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் சட்டப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் இந்தியத் தண்டனைச் சட்டம் முதல் குற்றவியல் சட்டங்கள் வரை அத்தனை சட்டங்களும் அவருக்கு அத்துப்படி.

காவல்துறையால் பாதிக்கப்பட்ட பலர், ஒருகட்டத்தில் செந்தமிழ்க்கிழாரை நாடிச் செல்லத் தொடங்கினர். அவர்களுக்கு வழிகாட்டியதுடன் பக்கபலமாக நின்று உதவியும் செய்தார். ‘போலீஸார் சரிவர செயல்படுவதில்லை. அதனால் நானே போலீஸ் ஸ்டேஷன் ஆரம்பிக்கிறேன்!’ என்று ‘மக்கள் காவல்நிலையம்’ என்ற பெயரில் காவல் நிலையங்களை உருவாக்கி அவற்றுக்கு ஆய்வாளர்களை நியமித்து, எஃப்.ஐ.ஆர் போட்டு அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். நீதிபதிகளுக்கு எதிராக அவர் எழுதிய கடிதங்கள், நீதித்துறையையே உலுக்கின.

‘மக்கள் நீதிபதி’, ‘மக்கள் ஜனாதிபதி’ என தன்னை அறிவித்துக்கொண்டு பிரச்னைகளை கையிலெடுத்துப் போராடினார். பலமுறை சிறைக்கும் சென்றிருக்கிறார். ‘நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்’, ‘பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள்’, ‘சொந்த ஜாமீன் பெறுவது எப்படி?’, ‘சிந்திக்கவைக்கும் சிறை அனுபவங்கள்’ என ஏராளமான புத்தகங்களை எழுதியவர். அந்தப் புத்தகங்களை யார் வேண்டுமானாலும் பதிப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

இந்தச் சமூகத்தின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தொடர்ந்து அநீதிக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வாழ்ந்த செந்தமிழ்க்கிழார், இப்போது நம்மிடம் இல்லை. அவரின் இறப்புச் செய்தி அறிந்து பல்வேறு மாவட்டங்களி லிருந்து சென்னை அய்யப் பாக்கத்தில் உள்ள செந்தமிழ்க்கிழார் வீட்டுக்குத் திரண்டு வந்திருந்தனர்.

ராஜேந்திரன் என்பவர், ‘‘சேலத்துலேயிருந்து வர்றேங்க. ஐயோவோட புத்தகங்களைப் படிச்சு தான் நான் சட்டத்துல உள்ள பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒருமுறையாவது ஐயாவை நேர்ல பார்த்துடணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். முடியாமப்போச்சு. கடைசியில இந்தக் கோலத்துலயா பார்க்கணும்!’’ என்றவர், துக்கம் தாளாமல் முகம் பொத்தி அழுதார்.

திண்டிவனத்தைச் சேர்ந்த ராஜா, “முப்பது வருஷங்களா எளிய மக்களுக்காக எந்த எதிர்பார்ப்புமில்லாம சட்ட உதவிகளைச் செஞ்சவர் ஐயா. அவரை ‘நீதிபதி’னுதான் நாங்க கூப்பிடுவோம். ‘சட்ட பிரம்மா’, ‘மக்கள் நீதிபதி’, ‘தேன் தினகரன்’, ‘சேக்கிழார்’னு ஒவ்வோர் ஊர்லயும் இவருக்கு ஒரு பேரு இருக்கு. யார்கிட்டயும் கை நீட்டி காசு வாங்க மாட்டார். நாங்க வற்புறுத்திக் கொடுத்தாக்கூட மறுத்திடுவார். ‘நீங்க கொடுக்கிற பணத்தை வாங்கினா, நான் வீணாப்போயிடுவேன்’னு சொல்வார். செருப்புகூட போட மாட்டார். சென்னைக்குள்ளே எங்க போனாலும் சைக்கிள்லதான் போவார்.

ஒவ்வொரு நாளும் என்னென்ன வேலைங்க செஞ்சேன்னு எழுதிவெச்சிருப்பார். அன்றாட வரவு-செலவுக் கணக்கைக்கூட அவரோட ‘நீதியைத் தேடி’ மாத இதழ்ல வெளியிடுவார். கடைசிக்காலம் வரைக்கும் செல்போனையே பயன்படுத்தாம கடிதங்களை மட்டும்தான் பயன் படுத்தினார். ‘சட்ட விரோதமா செயல்படுறார்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்றார்’னு அவரால பாதிக்கப்பட்டவங்க அவதூறு பரப்பினாங்க. ஆனா, ‘சட்டத்துக்கு எதிரா செயல்பட மாட்டேன்; சட்டங்களை அசட்டையா கையாள்றவங்களோடு உடன்படவும் மாட்டேன்’னு கடைசிவரை நின்னார். இறுதிக்காலத்துல செவித்திறன் பாதிக்கப்பட்ட நிலையிலும்கூட, மக்களின் குறைகளை எழுதித் தரச் சொல்லி அதுக்கான தீர்வுகளையும் சொல்லிவந்தார்.’’ என்று கண்கலங்கினார்.

செந்தமிழ்க்கிழார்
செந்தமிழ்க்கிழார்

இவருடைய வாழ்க்கையை அடிப்படையாக வைத்துதான் விஜய் நடித்த ‘தமிழன்’, சத்யராஜ் நடித்த ‘மாறன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்புகூட, புகார் காரணமாக செந்தமிழ்க்கிழாரின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளது காவல்துறை. அவர்களை புன்னகையுடன் எதிர்கொண்டிருக் கிறார். அழுக்கு வேட்டி, நைந்த சட்டை, துருப்பிடித்த சைக்கிள் இவற்றோடு இறுதிவரை கொள்கைப் பிடிப்புடன் தன் போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறார் செந்தமிழ்க்கிழார்.